ஒரு வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடுவது மிகவும் கடினமான செயல், ஆனால் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்துவிடலாம்; இன்னொரு வேட்பாளருக்காகத் தேர்தலில் பணியாற்றுவது கடினமானதும் சிக்கலானதுமான வேலை; ஒரு அரசியல் கட்சிக்காக மாநில அளவில் தேர்தல் பொறுப்பாளராக இருப்பது, பல வேலைகளை ஒரே சமயத்தில் மேற்கொண்டாக வேண்டிய மிகவும் நுட்பமான, பல்வேறு சிக்கல்களையும் தீர்க்க வேண்டிய கண்காணிப்பாளர் வேலை.
தேர்தலில் ஒரு கட்சி வெற்றிபெறும் அல்லது தோல்வி பெறும். ஒரு கட்சி வென்ற தேர்தல்களைவிட, தோற்ற தேர்தல்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்றால் அந்தக் கட்சி தன்னை நிதானப்படுத்திக்கொண்டு தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தாக வேண்டும்.
என்னுடைய கதை, 1984இல் மக்களவை பொதுத் தேர்தலில் நான் முதல் முறையாகப் போட்டியிட்டதிலிருந்து தொடங்குகிறது. எட்டு முறை தேர்தலில் போட்டியிட்டு அதில் ஏழு முறை வென்றேன். நான் போட்டியிடுவதற்கு முன்னாலும், போட்டியிடத் தொடங்கிய பிறகும் வேறு சில தேர்தல்களுக்குப் பொறுப்பாளராகவும் இருந்திருக்கிறேன். இப்போதும் என்னுடைய மாவட்டத்தில் தேர்தல் வேலைகளை விரிவாகக் கண்காணிக்கிறேன்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
காலங்கள் மாறிவிட்டன
ஒரு காலத்தில் - வேட்பாளரின் நம்பிக்கை தரும் முகம், நிறைவேற்றக்கூடிய வாக்குறுதி அல்லது மனம் கவரும் ஒரு செயல் போதும் தேர்தலில் வெற்றிபெற்றுவிட. ‘இனி இது சாத்தியம் இல்லை’. ஒரு காலத்தில், சில சாதிகளின் அல்லது சாதித் தலைவர்களின் ஆதரவைப் பெற்றாலே போதும் - அந்தச் சாதியினருடைய பெரும்பான்மை ஆதரவையும் பெற்றுவிடலாம். ‘இனி இது சாத்தியம் இல்லை’.
ஒரு காலத்தில், தேர்தல் வாக்குறுதிகள் அவ்வளவாக மதிக்கப்பட்டதில்லை அல்லது படிக்கப்பட்டதில்லை. ‘இனி இது சாத்தியம் இல்லை’. ஒரு காலத்தில், தேர்தல் தொடர்பாக ‘கதையாடல்’ என்ற வார்த்தை அரசியல் கட்சிகளால் உச்சரிக்கப்பட்டதில்லை. அந்த வார்த்தை, வெவ்வேறு நுட்பமான பொருள்களில் இன்றைய தேர்தல்களில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
மெகாபோன்கள், மைக்ரோபோன்கள், போஸ்டர்கள், துண்டறிக்கைகள், கொடிகள், கட்சியின் சின்னங்களைக் கொண்ட தோரணங்கள்தான் தேர்தலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களாக இருந்தன, இன்றைக்கு எல்லாமே வழக்கொழிந்துவருகின்றன. சமூக ஊடகம், தொலைக்காட்சி விளம்பரங்கள், ‘மெய்’ போன்ற ‘பொய்’ செய்திகள், ‘பேக்கேஜஸ்’ என்று அழைக்கப்படும் நாணயமற்ற கையூட்டுகள், பத்திரிகையாளர்களுக்குப் பணம் கொடுத்து பிரசுரிக்கப்படும் இடைச்செருகலான செய்திகள் இன்றைய தேர்தல் களத்தில் புதிய ஆயுதங்களாகவும் உத்திகளாகவும் பயன்படுகின்றன.
இன்னமும் சில செய்தித்தாள்கள்தான் இப்படிக் கையூட்டு பெற்று செய்தி போடுவதை வழக்கமாக்கிக்கொள்ளாமல் நேர்மையாக இருக்கின்றன. இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு தேர்தல் முடிவுகளை உருவாக்குவதில், பத்திரிகைகளின் செல்வாக்கு அற்றுப்போய்விடும் என்று அஞ்சுகிறேன்.
சில நிரந்தரங்கள்
தேர்தல் களத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவருவதை கடந்த ஐம்பதாண்டுகளாக நேரிலேயே பார்த்துவருகிறேன், ஆனால் சில அம்சங்கள் மட்டும் நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும், சற்றே செறிவடைந்தும் தொடர்கின்றன. அரசியல் கட்சிகள் அவசியம் பின்பற்றியாக வேண்டிய சில நிரந்தரத் தேர்தல் ஆயுதங்கள்:
நகர, மாவட்ட, துணைக் குழுக்கள்: மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடப்பு அரசியலை ஆராய்வதற்காகக் கூடும் தேசிய செயற்குழுக்களின் கூட்டங்கள் மட்டும் இனி போதாது. நகர, மாவட்ட, வட்டார, வார்டு, கிராம குழுக்கள் நிச்சயம் தொடர்ந்து செயல்பட வேண்டும், அவை ஒரு நாளில் 24 மணி நேரமும் களத்தில் நடப்பதைக் கண்காணித்து எதிர்வினையாற்றும் வகையில் துடிப்புடன் இருப்பது அவசியம். தொடர்ந்து பல ஆண்டுகளாக நகர, மாவட்ட, அல்லது வெவ்வேறு பணிகளுக்கான துணைக் குழுக்களை நியமிப்பதில் அக்கறை காட்டாத அரசியல் கட்சியை என்னவென்று கூறுவீர்கள்? அந்த அரசியல் கட்சி, அந்த மாநிலத்தில் ‘கருத்தளவில் மட்டுமே’ இருக்கிறது என்றே கூறுவேன்.
அரவணைக்கும் கொள்கைகள், நடைமுறைகள்: எல்லா அரசியல் கட்சிகளும், ‘அனைத்து தரப்பினரையும் தாங்கள் அரவணைப்பதாகவும் - அனைவரும் முக்கியமானவர்களே’ என்றும் பேசுகின்றன, உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்கின்றன, நிர்வாக குழுக்களில் இடங்களைக்கூடத் தருகின்றன. ஆனால் தேர்தல் சமயத்தில், வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் கடமை வரும்போது சறுக்கிவிடுகின்றன. ‘வெற்றிபெறும் தன்மை’ என்ற ஒரு அம்சத்தை மட்டுமே வேட்பாளருக்கான தகுதியாகக்கொண்டு, ஆட்சியதிகாரத்தில் தங்களுக்குப் போட்டியாக வந்துவிடக்கூடிய குழுக்களைச் சேர்ந்தவர்களையும் மாற்று சாதிக்காரர்களையும் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கிவிடுகின்றன.
வேட்பாளர் தேர்வு எப்படி நடந்தாலும், இந்தச் சாதிக்காரர்கள் அல்லது வகுப்பினர் நம்மைத்தான் ஆதரிப்பார்கள் என்று முன்கூட்டியே முடிவுகட்டுவதால், வேட்பாளர்கள் தேர்வில் ஒரு சாதிக்கோ – சமூகத்துக்கோ வாய்ப்புகள் அதிகம் தரப்பட்டு, விளிம்புநிலை சமூகத்துக்குக் குறைந்த வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஒரு தொகுதிக்கு போட்டியிடத் தகுதியான வேட்பாளர் யார் என்று பார்க்கும்போது, ஆண்தான் முதலில் பரிசீலிக்கப்படுகிறார். இந்தப் பாலியல் அணுகுமுறைக்குக்கூட, அவரால்தான் வெற்றி வாய்ப்பைப் பெற முடியும் என்று, சரியென்றே தோன்றக்கூடிய - ஆனால் தவறான வாதம் முன்வைக்கப்படுகிறது.
ஒழுக்கவிதிகள் அமல்படுத்தல்: தேர்தல் சமயத்தில் எல்லா அரசியல் கட்சிகளிலுமே ஒழுங்கும் கட்டுப்பாடும் குலைந்துவிடுகின்றன. போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவரோ அவருடைய ஆதரவாளர்களோ கட்சி நிறுத்தும் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராகவே போட்டியிடுவதும் அல்லது தேர்தல் வேலைகளைச் செய்வதும் சர்வசாதாரணமாகிவிட்டது.
போட்டி வேட்பாளர்கள் - அவர்களில் பலர் மாற்று அரசியல் கட்சிகளால் களம் இறக்கப்படுகிறவர்கள் - கட்சி நிறுத்தும் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் பெற்று வாக்கு எண்ணிக்கையில் அவரை மூன்றாவது அல்லது நாலாவது இடத்துக்கும் தள்ளிவிடுகிறார்கள்! பெரும்பாலான தொகுதிகளில் ‘போட்டி வேட்பாளர்தான்’ கட்சியின் தொண்டர்களால் விரும்பப்படும் செயல்வீரராகவும் இருக்கிறார்! தேர்தல் முடிவுகளை ஆழ்ந்து ஆராய்ந்தபோது ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சி 17 தொகுதிகளை இப்படிப் போட்டி வேட்பாளர்களாலேயே இழந்துவிட்டது தெரியவந்தது.
வாக்குச் சாவடி குழுக்கள்: மிகச் சில அரசியல் கட்சிகளில்தான் வாக்குச்சாவடி குழுக்கள் துடிப்பாகச் செயல்படுகின்றன. இதில் திமுக, அஇஅதிமுக முன்னோடிகள். வெகு காலத்துக்குப் பிறகு, ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் பாஜக இந்த நடைமுறையை அப்படியே பின்பற்றி வெற்றிகளைப் பெற்றுவருகிறது. வாக்குப் பதிவு நாளன்று, வாக்களிக்கக்கூடிய ஆதரவாளர்களை வற்புறுத்தி வாக்குச் சாவடிக்கு அழைத்துவரும் ஆற்றல் வாக்குச் சாவடி குழுக்களுக்கே உண்டு. வாக்குச் சாவடி குழுக்களை அமைக்காத அல்லது வலுப்படுத்தாத அரசியல் கட்சி, தனக்கு வரக்கூடிய வாக்குகளைக்கூடப் பெறாமல் தோற்றுவிடும்.
தேர்தல் நிர்வாகம்: ஒருமுறைகூட தேர்தலில் போட்டியே போடாதவரும், போட்டியிட்டும் வெற்றிபெறாதவரும் மிக மோசமான தேர்தல் பொறுப்பாளராகத்தான் இருப்பார். ஒரு மாநிலத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறவர் அந்த மாநிலத்தில், தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து தங்க ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.
தேர்தல் நடைமுறைகள், விதிகள், தேர்தல் நுட்பங்கள் அனைத்திலும் வல்லவராக இருப்பதும் முக்கியம். போட்டி வேட்பாளர்களை அழைத்துப் பேசி அவர்களைச் சமாதானப்படுத்தவும் அவர்களுடைய ஆதரவை கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பக்கம் திருப்பவும் அவர்களுக்கு திறமையும் உத்தியும் அவசியம். பல அரசியல் கட்சிகளில் இப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், ஆனால் அவர்களுடைய எண்ணிக்கை அதிகமில்லை. தேர்தல் தொடர்பாக எதுவுமே தெரியாதவர்களைவிட - எல்லாம் எனக்குத் தெரியும் என்று செயல்படும் அகந்தைப் பிடித்த பொறுப்பாளர்கள் மிகவும் மோசமானவர்கள்.
பணம்: தேர்தலில் செலவுக்குப் பணம் மிகவும் இன்றியமையாத சாதனம், ஆனால் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்க அது மட்டுமே போதுமானதல்ல. வாக்காளருக்குப் பணம் கொடுப்பது முழுக்க முழுக்க வீணான செயல்; காரணம், இப்போதெல்லாம் எல்லா வேட்பாளர்களும் பணம் செலவுசெய்யத் தயாராகிவிட்டார்கள். தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தைச் சமூக ஊடகங்களின் செலவுக்கும், தேர்தல் நாளில் வாக்குச்சாவடி குழுக்களின் செலவுக்கும் வைத்துக்கொள்வது அவசியம். பெரும்பாலான வேட்பாளர்களைக் கேட்டால், ‘வாக்குப் பதிவு நாளுக்கு சில நாள்கள் முன்னதாகவே எல்லாப் பணத்தையும் செலவழித்துவிட்டேன்’ என்றே கூறுகிறார்கள்.
இறுதிப் பாடம்: வெற்றி வாய்ப்புள்ள தேர்தலைக்கூட இழக்க நேரும் - தேர்தல் காலத்தில் கடைப்பிடித்தாக வேண்டிய பாடங்களை ஓர் அரசியல் கட்சி முறையாகப் படிக்காமல் போனால்!
தொடர்புடைய கட்டுரைகள்
ஒரே நாடு – ஒரே தேர்தல்: எதிர்ப்பது ஏன்?
ஒரே நாடு ஒரே தேர்தல்: வாய்ப்பே இல்லை!
அரசியலில் புதிய சிந்தனை தேவை
எதிர்க்கட்சிகளுக்கு இது நல்ல வாய்ப்பு
ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கான வாக்களிப்பா?
இந்திய மக்களின் மகத்தான தீர்ப்பு!
நாட்டை எப்படி பாதுகாப்பது?
தேர்தல்கள்: மாறாத உண்மைகள்
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.