கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

மாற்றம் விரும்பிகளுக்கும், விரும்பாதவர்களுக்கும் போட்டி

ப.சிதம்பரம்
02 Jun 2024, 5:00 am
0

‘மாற்றங்களை விரும்புகிறவர்களுக்கும்’, ‘எதுவும் மாறக் கூடாது’ என்று நினைப்பவர்களுக்கும் இடையிலான போராட்டம் என்று கடந்த வாரக் கட்டுரையில், ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள 2024 மக்களவை பொதுத் தேர்தல் குறித்து முத்தாய்ப்பாகக் கூறியிருந்தேன். இன்னும் சில மணி நேரங்களில் பொதுத் தேர்தல் முடிவு வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது. மக்களில் பெரும்பாலானவர்கள் மாற்றத்துக்கு ஆதரவாக இருக்கிறார்களா அல்லது ‘எல்லாம் இப்படியே தொடரட்டும்’ என்று நினைக்கிறார்களா என்பது தெரிந்துவிடும்.

இப்படியே தொடர்வதும் சுகம்

வாழ்க்கையில் ‘மாற்றம் வேண்டும்’ என்று நினைப்பவர்கள் அனேகம், ‘எதுவும் மாறக் கூடாது’ என்று நினைப்பவர்களும் அனேகம். இப்போதுள்ளவை மாறினால் தங்களுடைய வாழ்க்கை நிலைமை மோசமாகிவிடும் என்று, ‘மாற்றங்களை விரும்பாதவர்கள்’ கருதுகின்றனர்; மாறினால் அதனால் ஏற்படக்கூடியவை எப்படி இருக்குமோ என்ற அச்சம், அல்லது இதுவரை தெரியாத ஒன்றை எதற்கு ஏற்பது என்ற தயக்கம், அல்லது ஏதாவது ஒன்றில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கையின் அனைத்திலும் எதிரொலிக்கத் தொடங்கினால் என்னாவது என்ற குழப்பம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஒரு சமூகத்தில் கடைப்பிடித்துவரும் வழக்கத்தை மீறினால், அந்தச் சமூகத்தின் கோபத்துக்கு ஆளாகக்கூடும் என்பது ஒரு அனுபவ உதாரணம். இப்போதிருப்பதையே தொடர்வதில் நிச்சயம் சில சௌகரியங்களும் இருக்கின்றன.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மாறியதால் பயன்

இந்தியாவின் கடந்த முப்பதாண்டு கால வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தைப் பார்த்தால், ‘மாற்றம் வேண்டும்’ என்ற முடிவுகளால் ஏற்பட்ட பயன்கள் தெரியும். வேறு காலகட்டங்களோ, ‘இப்போதிருக்கும் எதையும் மாற்ற வேண்டாம்’ என்ற எண்ணங்களின் விளைவுகளே. வேறு சில நேரங்களில் - இப்போதிருப்பதையும் விரும்பாமல், புதியதையும் வரவேற்காமல் – கடந்த காலத்தை நினைத்து அப்படியே அந்தக் காலத்துக்குத் திரும்பிவிட மாட்டோமா என்று நினைவேக்கத்தால் உந்தப்படுவதும் உண்டு.

இந்தியா மாற வேண்டும், இந்தியாவுக்கு மாற்றம் அவசியம் என்று திடமாக நம்புகிறேன். பத்தாண்டுகளுக்கு முன்னால், ‘மாற்றம் தேவை’ என்று பெரும்பாலானவர்களுக்குத் தோன்றியது அதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குப் பதிலாக, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தது.

அதே போன்றதொரு மாற்றத்துக்கான தருணம் மீண்டும் வந்துவிட்டது என்றே கருதுகிறேன். கடந்த பத்தாண்டுகளில் ஏராளமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன, அவற்றையெல்லாம் சரிசெய்யும் திருத்தல் நடவடிக்கைகள் எடுப்பது மிக மிக அவசியம். சில உதாரணங்களைக் கூறுகிறேன்:

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

சாதி, சமத்துவமின்மை: இரு அடையாளங்கள்

ப.சிதம்பரம் 27 May 2024

பணமதிப்பு நீக்கம்

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016இல் அரசு எடுத்த பணமதிப்பு நீக்க முடிவானது இமாலயத் தவறு. அன்றாடச் செலவுக்கும் அவசியச் செலவுக்கும் பணம் இல்லாமல் கோடிக்கணக்கான தனிநபர்களின் வாழ்க்கையே சீர்குலைந்தது; சிறு – குறு தொழில் பிரிவுகளில் வேலை செய்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களையும் வேலைவாய்ப்புகளையும் இழந்தார்கள். அப்போது மூடப்பட்ட பெரும்பாலான தொழில் நிறுவனங்களை மீண்டும் திறக்கவே முடியவில்லை.

‘கோவிட்-19’ என்ற பெருந்தொற்று நோய் ஏற்பட்டபோது ஒன்றிய அரசு சரியான திட்டமிடல் இல்லாமல் எடுத்த ‘பொது முடக்க’ நடவடிக்கை, மக்களுடைய நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது. அப்போது மூடப்பட்ட தொழில் – வணிக – சேவை நிறுவனங்கள் பலவும் மீண்டும் திறக்கப்படாமலேயே போனது. உற்பத்தி, விற்பனையை நிறுத்த நேர்ந்த தொழில் பிரிவுகளுக்கு அரசு நிதியுதவியை வழங்காததும், கடன் உதவியைத் தாராளமாக அறிவிக்காததும் சிறு – குறு நிறுவனங்களை நாசப்படுத்தியது.

மிகவும் நெருக்கடியான சூழலில் மக்களையும் தொழில்களையும் காப்பாற்ற துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், கடன் ரத்து, தொழில் தொடர மேலும் பெருமளவுக்குக் கடன் வழங்குவது, உற்பத்தியாவதை அரசே கொள்முதல் செய்வது, ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு மானியம் அளிப்பது, வரிச் சலுகைகளை அறிவிப்பது என்று அரசு தொடர்ச்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். மாற்றத்தை விரும்பாத ஆட்சியாளர்களிடமிருந்து இவற்றில் ஒரு திட்டத்தையும் நான் கேள்விப்படவே இல்லை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

எருமைகள் மீது வாரிசுரிமை வரி!

ப.சிதம்பரம் 20 May 2024

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு என்ற சமூக நீதி கோட்பாடு பட்டியல் இனத்தவர்கள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசமைப்புச் சட்டம் அளிக்கும் உறுதிமொழியாகும். இதை நிறைவேற்றாமல் தடுத்த ஒன்றிய அரசின் செயல், சமூக நீதி மீதான பலத்த தாக்குதலாகவே கருதப்பட வேண்டும். அரசுத் துறைகளிலும் அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிலும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட - மேற்கூறிய பிரிவினர்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட - பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக தொடர்ந்து விடப்படுவது வேண்டுமென்றே செய்யப்படும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும், இடஒதுக்கீட்டின் கீழ்வரும் இடங்கள் 50%க்கும் மேல் போக விடமாட்டோம் என்று கூறிக்கொண்டே, இடஒதுக்கீட்டு வரம்பின் கீழ் வராத – பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கென்று 10% இடங்களைத் தனியாக ஒதுக்கினர், அந்த ஒதுக்கீட்டைப் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாது என்று தடுத்தும் விட்டனர்.

சமூக முன்னேற்றத்துக்கு உதவ கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு என்ற சமூக நீதி முறை, அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகளை நிறுத்திவிட்டதாலும், தனியார் துறையில் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தாததாலும் வெகுவாக பின்னடைவுக்கு உள்ளாகிவிட்டது.

கல்வி, சுகாதாரம் ஆகிய சேவைகளை அளிக்க அரசுத் துறையைவிட தனியார் துறைக்கு அளிக்கப்படும் முன்னுரிமை, அரசுத் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளை – வினாத்தாள்கள் கசிந்துவிட்டன என்று கூறி ரத்துசெய்வது, பதவி உயர்வு வழங்காமலேயே வைத்திருப்பது, அரசு வேலைகளை ஒப்பந்த அடிப்படையிலும், தாற்காலிக அடிப்படையிலும் நிரப்புவது ஆகியவையும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நாசப்படுத்தும் நடவடிக்கைகளே. இப்போதிருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களால் மட்டுமே மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

‘வலிய’ தலைவர் பொய் சொல்வது ஏன்?

ப.சிதம்பரம் 13 May 2024

சேதங்களைப் பழுதுபார்ப்பது

அரசு இயற்றும் சட்டங்களையே ஆயுதங்களாக்கி அரசியல் எதிரிகள், அரசின் விமர்சகர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும், கடந்த பத்தாண்டுகளாக தவறாக பயன்படுத்தப்படும் அந்தச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். மாற்றமே கூடாது என்று நினைப்பவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்றத்தில் எப்படிக் கொடூரமான சட்டங்களை ரத்துசெய்ய முடியும் அல்லது திருத்த முடியும்?

அரசை எதிர்ப்போர் மீது ஏவப்படும் விசாரணை அமைப்புகளை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களின் கட்டுப்பாட்டில் எப்படிக் கொண்டுவர முடியும்? அரசமைப்புச் சட்டத்தின் 19, 21, 22 ஆகியவற்றின் உண்மையான பொருளையும் நோக்கங்களையும் செயல்படுத்த அவற்றை மீட்டுருவாக்கம் செய்வதையும் சட்டப்படியான ஆட்சி நடப்பதையும் யார் ஆதரிப்பார்கள்?

முறையான நீதி விசாரணை இல்லாமலேயே மாதக் கணக்கில் சிறையில் அடைக்கும் அடக்குமுறை நடைமுறைகளையும், புல்டோசர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களையும் முடிவுக்குக் கொண்டுவருவது யார்? சட்டம் தொடர்பான அச்சத்தை மக்களுடைய மனங்களிலிருந்து அகற்றி, சட்டத்தின் மீது மரியாதையை ஏற்படுத்தும் செயலை மேற்கொள்வது யார்?

குற்றஞ்சாட்டப்பட்டிருந்தாலும் ‘ஜாமீன் வழங்குவது வழக்கமானது – சிறையில் தள்ளுவது அபூர்வமானது’ என்ற நியாயத்தை தண்டனையியல் சட்டங்களில் புகுத்துவதைச் செய்வது யார்? சட்ட மேதை பாபா சாஹேப் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான விழுமியங்கள் – லட்சியங்கள் மீது மரியாதை கொண்டு அவற்றைக் காக்க வேண்டும் என்ற உறுதியோடு செயல்படும் துணிச்சலான நாடாளுமன்ற உறுப்பினர்களால்தான் இந்த மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

தாராளமயமும் இல்லை

பொருளாதார தாராளமயம், தடைகளற்ற பொருளாதாரம், உலக வர்த்தகத்தில் நியாயமான போட்டிகள் ஆகியவற்றால் இந்தியப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது, இவை இப்படியே தொடர அரசின் பொருளாதாரக் கொள்கைகளைத் திருத்துவதும் மேம்படுத்துவதும் அவசியம்.

நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி தொய்வடைந்துவிட்டது, அது அப்படித்தான் ஆகும், காரணம் அரசின் கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல அதிகரித்துவருகின்றன, மறைமுகமாக ‘லைசென்ஸ்’ முறை புகுத்தப்படுகிறது, தொழிலுற்பத்தியில் பல துறைகளில் ஏகபோகம் வலுத்துவருகிறது, உள்நாட்டுத் தொழில்களைக் காக்கும் வரிச்சட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கிறது, பிற நாடுகளுடன் இருதரப்பு – பலதரப்பு தொழில் வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்ள அரசு அஞ்சுகிறது.

தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு தரும் உற்பத்தி நடைமுறைகளைவிட, மூலதனத்தை அதிகப்படுத்தி இயந்திரங்கள் மூலமே உற்பத்திசெய்யும் ஆள்குறைப்பு நடைமுறையை அரசு ஆதரிக்கிறது, இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வும் கிட்டாமல் போகிறது. சமூகத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் பெருக அரசின் இந்தக் கொள்கையும் முக்கிய காரணம். இந்திய சமூகத்தில் ஊதிய – சொத்துடைமைகளில் ஏற்றத்தாழ்வுகள் 1922இல் இருந்ததைவிட மிக மிக அதிகம் என்று உலக அசமத்துவ ஆய்வகம் தெரிவிக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!

ப.சிதம்பரம் 29 Apr 2024

ஊதியம் உயரவில்லை

சராசரி ஊதியம் அதிகரித்திருப்பதைப் பார்த்து பலரும் ஏமாந்து போகின்றனர். சராசரி தேசிய வருமானத்துக்கும் குறைவாக பெறும் மக்கள்தான் நாட்டில் 50%க்கும் மேல் (71 கோடி) இருக்கின்றனர், அவர்களிலும் 20% பேர் (28 கோடி) மிகவும் வறிய நிலையில் வாழ்கின்றனர். மாற்றம் கூடாது என்று நினைப்போர் இந்த ஏழை மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசுவார்களா?

எங்கே வேலைவாய்ப்பு?

இன்னொரு தரவைப் பார்ப்போம். இந்தியாவில் 15 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்கள் 92 கோடி, ஆனால் அவர்களில் 60% மட்டுமே தொழிலாளர்கள். அவர்களிலும் வேலைவாய்ப்பு பெற்று வேலைக்குச் செல்லும் ஆண்கள் 74%, பெண்கள் 49%. இப்படி வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கைக் குறைவு, அதிக அளவிலான வேலையில்லாத் திண்டாட்டம், அதிகரிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை என்று அனைத்தையும் இணைத்துப் பார்க்கும்போது, உலகிலேயே அதிக மக்கள்தொகை இருந்தும் அவர்களைப் பலனுள்ள வகையில் உற்பத்தியில் ஈடுபடுத்தும் கொள்கையோ, திட்டமோ, முனைப்போ இல்லாமல் வீணடித்துவருகிறோம் என்பது புரியும்.

இப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து கேள்விக் கேட்பது யார், இவற்றைத் திருத்துவது யார் – இதே நிலை தொடரட்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயமாக செய்யமாட்டார்கள்.

தொடர்ச்சியாக நடப்பதை தடுத்து நிறுத்துகிறவர்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றங்கள் பல நன்மைகளைக் கொண்டுவரும் அப்படியே சில இழப்புகளும்கூட ஏற்படலாம், அந்த இழப்புகளைச் சரிசெய்ய தவறுகளைத் திருத்திக்கொண்டால் போதும். 1991இல் இந்தியா கற்ற முதன்மையான பாடம் என்னவென்றால், துணிந்து செயலில் இறங்குகிறவர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்பது. மாற்றமே கூடாது என்று நினைப்பவர்கள், மாற்றங்களை எதிர்ப்பவர்கள் அதிலிருந்து எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை, இனியும் படிக்கமாட்டார்கள்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

சாதி, சமத்துவமின்மை: இரு அடையாளங்கள்
எருமைகள் மீது வாரிசுரிமை வரி!
‘வலிய’ தலைவர் பொய் சொல்வது ஏன்?
மோடியைக் கலவரப்படுத்திய காங்கிரஸ் அறிக்கை
காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை
காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!
பாஜக: அரசியல் கட்சியா, தனிமனித வழிபாட்டு மன்றமா?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






சிறுநீர் அடைப்புவெற்றியின் சூத்திரம்கர்நாடக இசைகிரிக்கெட் அரசியல்ஐக்கிய நாடுகள் சபைபுரிந்துணர்வு ஒப்பந்தம்லால்துஹுமாஅப்துல் ரஸாக் குர்னா பேட்டிகீதைதேர்தல் நிதிராகுல் யாத்திரையால் பதற்றம் குறைந்ததா?இந்திய இடதுசாரிகள்தாலிபான்புதிய காலங்கள்இடைத்தேர்தல்நாடகசாலைத் தெருஆன்ட்ரோஜன் ஹார்மோன்பள்ளிக்கூடங்களில் ஹிஜாப்1ஜி நெட்வொர்க்ஃபின்னிஷ் மொழிபயோடேட்டாபாலஸ்தீன விடுதலை இயக்கம்தேசிய நிறுவனங்கள்எரிசக்திகுஜராத் - பில்கிஸ் பானுஜான் பெர்க்கின்ஸ் கட்டுரைபிரதமர்லாலுமீனாட்சி தேவராஜ் கட்டுரைநீலம் புயல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!