“ஏழைகளே இல்லை: வறுமையை ஒழித்துவிட்டது இந்தியா” என்று திடீரென ஒரு நாள் காலையில் எல்லா செய்தித்தாள்களும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டால் வியப்பால் வியர்த்துப்போய்விடாதீர்கள்! நீங்கள் அப்படித்தான் நம்ப வேண்டும் என்று நிதி ஆயோக் விரும்புகிறது. ஒரு காலத்தில் மிகவும் மதிக்கப்பட்ட திட்ட ஆணையம் (திட்டக் குழு) இப்போது அரசின் ஊடகத் தொடர்பாளர் நிலைக்குத் தாழ்ந்துவிட்டது.
முதலாவதாக, வருவாய் – கல்வி - சுகாதாரம் உள்ளிட்ட அடித்தளக் கட்டமைப்புகளைப் பெறும் வாய்ப்பு ஆகியப் பன்முக அம்சங்களிலும் வறியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 11.28%தான் என்று அறிவித்தது. அதன் தலைமை நிர்வாகியோ, மொத்த மக்கள்தொகையில் 5% பேர் மட்டும்தான் ஏழைகள் என்று இப்போது கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்.
‘தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம்’ (என்எஸ்எஸ்ஓ) வெளியிட்டுள்ள சமீபத்திய, ‘குடும்ப நுகர்வுச் செலவு ஆய்வறிக்கை’ (எச்சிஇஎஸ்) அடிப்படையில், பிரமிக்க வைக்கும் இந்தத் தகவலை நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாகி அறிவித்திருக்கிறார். குடும்பங்களின் நுகர்வு செலவு ஆய்வறிக்கையில் வியப்பைக் கூட்டும் பல தகவல்கள் இருக்கின்றன என்றாலும் இந்தியாவில் உள்ள மொத்த ஏழைகளின் எண்ணிக்கை வெறும் 5%தான் என்று நம்பும்படியாக - நிச்சயம் இல்லை.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
தரவுகளை ஆராய்ந்தால்…
குடும்பங்களின் நுகர்வுச் செலவுகளைத் தொகுக்கும் ஆய்வு 2022 ஆகஸ்ட் தொடங்கி 2023 ஜூலை வரையில் நடந்திருக்கிறது. 8,723 கிராமங்கள், 6,115 நகர வட்டாரங்களில் 2,61,745 குடும்பங்களிடமிருந்து (கிராமங்களில் 60%, நகரங்களில் 40%) தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. நிறுவனம் கையாண்ட வழிமுறை சரியானது என்றும் ஆய்வு நடத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை போதுமானவை என்றும்கூட கருதுவோம்.
ஆய்வின் நோக்கமானது, இப்போதைய / சாதாரண விலைகள் அடிப்படையில் தனிநபர்களின் (நபர்வாரி) மாதாந்திர செலவு எவ்வளவு என்பதை அறிவது. சராசரியாக, ஒரு தனிநபரின் மாதாந்திரச் செலவு என்பது:
கிராமங்களில் ரூ. |
நகரங்களில் ரூ. |
|
மேல்தட்டு 5% | 10,501 | 20,824 |
சராசரி | 3,773 | 6,459 |
கடைசி 5% | 1,373 | 2,001 |
சராசரி | 3,094 | 4,963 |
வருமான அடிப்படையில் கீழ் வரிசையில் இருக்கும் 20% மக்களை ஆராய்வோம். மாதந்தோறும் உணவு – உணவல்லாத தேவைகளுக்கு ரூ.2,112 அல்லது அன்றாடம் ரூ.70 செலவு செய்யும் கிராமவாசியை ஏழையல்ல என்று வாதிட விரும்புகிறதா நிதி ஆயோக்? அல்லது நகரங்களில் மாதம் ரூ.3,157 அல்லது அன்றாடம் ரூ.100 செலவுசெய்கிறவர் ஏழையல்ல என்று கூறிவிட முடியுமா?
கிராமங்களில் ரூ. |
நகரங்களில் ரூ. |
|
0 முதல் 5% | 1,373 | 2,001 |
5 முதல் 10% | 1,782 | 2,607 |
10 முதல் 20% | 2,112 | 3,157 |
நான் ஒரு யோசனை சொல்கிறேன், நிதி ஆயோக்கின் அதிகாரி எவருக்காவது ரூ.2,100 மட்டும் கொடுத்து கிராமங்களில் தங்கிச் செலவுசெய்துவிட்டு, எவ்வளவுக்குத் தங்களால் பணக்காரராக அங்கே வாழ முடிந்தது என்ற அனுபவத்தைச் சொல்லச் சொல்லி அதன் தலைமை நிர்வாகி கேட்கட்டும்.
உண்மை நிலவரம்
அந்தத் தரவுகளை நிதானமாக ஆராய்ந்தால், கிராமங்களில் வாழ்கிறவர்கள் இதுவரை உணவுக்காகச் செலவிட்டதில் 46%ஐயும், நகரங்களில் வாழ்கிறவர்கள் 39%ஐயும் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். வருவாய் அல்லது செலவுகள் அதிகரித்ததாலோ அல்லது உணவுக்காக செய்யும் செலவு அதே அளவாகவோ அல்லது மிக மெதுவாக உயர்வதாலோ இப்படியாகலாம்.
இதர தரவுகள் நீண்ட காலமாக அவதானிக்கப்பட்ட உண்மைகளைத்தான் உறுதிப்படுத்தியுள்ளன. சமூகக் குழுக்களில், பட்டியல் இனத்தவரும் பழங்குடிகளும் மிகுந்த வறுமையில் உழல்கின்றனர். அவர்கள் சராசரிக்கும் கீழே உள்ளனர். ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ (ஓபிசி) சராசரிக்கு அருகில் இருக்கின்றனர். ‘மற்றவர்கள்’ சராசரிக்கும் மேலே இருக்கின்றனர்.
மாநிலவாரியான தரவுகளும், இதுநாள் வரையில் தொடரும் உண்மைகளைத்தான் உறுதிப்படுத்துகின்றன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மேகாலயம் ஆகிய மாநிலங்களில்தான் மிகவும் வறியவர்கள் அதிகம். அங்கே மாதாந்திர நுகர்வுச் செலவு, கிராமப்பகுதிகளில் தேசிய சராசரி செலவைவிடக் குறைவு. நகர்ப்புற வறுமை தரவுகளை உற்றுநோக்கினால் மாநிலங்களின் பெயர்களில்தான் அங்குமிங்கும் மாற்றம் இருக்கிறது.
இந்த மாநிலங்கள் நீண்ட காலமாக பாஜக, அல்லது காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகளின் ஆட்சியில் இருப்பவை. வறுமை ஒழிப்பு தொடர்பாக ஆளும் கூட்டணி சார்பில் வெளிப்படுத்தும் பெருமிதத்தை உடைக்கும் வகையில், 1995 முதல் பாஜகவின் ஆட்சியின் கீழ் இருக்கும் குஜராத் திகழ்கிறது. அங்கே அனைத்திந்திய சராசரி, கிராமங்களில் (ரூ.3,798 எதிர் ரூ.3,773) நகரங்களில் (ரூ.6,621 எதிர் ரூ.6,459) ஆக இருக்கிறது.
ஏழைகளிடம் பாராமுகம்
இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் ஏழைகள் எண்ணிக்கை 5%க்கு மேல் கிடையாது என்ற கூற்று என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. இப்படிச் சொல்வதனால் என்ன ஆகும் என்றால், ஏழைகள் என்றொரு பிரிவே இல்லை – இருந்தாலும் அவர்கள் வறுமையிலிருந்து வேகமாக மீண்டுகொண்டிருக்கிறார்கள், எனவே நம்முடைய திட்டங்களையும் நிதி ஒதுக்கல்களையும் நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் நலன் நோக்கித் திருப்புவோம் என்றாகிவிடும்.
நிதி ஆயோக் தலைமை நிர்வாகி சொல்வதைப் போல ஏழைகள் எண்ணிக்கை 5% அல்லது அதற்கும் குறைவுதான் என்றால்,
- ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மாதந்தோறும் இலவசம் என்று 80 கோடி மக்களுக்கு ஏன் இலவசமாக அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குகிறது? புன்செய் தானியங்களும் அவற்றுக்கான மாற்று உணவுகளும் கிராமங்களில் 4.91% மக்களாலும் நகரங்களில் 3.64% மக்களாலும் மட்டுமே உண்ணப்படுகிறது?
- ஏழைகள் 5%க்கும் அதிகமாக இல்லை என்றால், தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பு-5 அறிக்கையில் பின்வரும் தரவுகள் இடம்பெற்றிருப்பது ஏன்? 6 - 59 மாதக் குழந்தைகளில் 67.1% ரத்த சோகையுள்ளவர்கள் 15-49 வயதுள்ள மகளிரில் 57.0% ரத்த சோகையுள்ளவர்கள் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் 35.5% வயதுக்கேற்ற உயரம் இல்லாதவர்கள் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் 19.5% வயதுக்கேற்ற எடையில்லாத நோஞ்சான்கள்
- தில்லி வீதிகளில் பிச்சை எடுக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நிதி ஆயோக் அதிகாரிகளின் கண்களில் படவில்லையா? ஆயிரக்கணக்கான மக்கள் ஒண்டுவதற்குக் குடிசைக்கூட இல்லாமல் இருக்கிறார்கள், அவர்கள் நடைபாதைகளிலும் மேம்பாலங்களுக்கு அடியிலும் இரவில் படுத்துறங்குகிறார்கள் என்பதாவது நிதி ஆயோக்குக்குத் தெரியுமா?
- ஏழைகள் 5%தான் என்றால், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலைதருமாறு ஏன் 15.4 கோடிப் பேர் தங்களுடைய பெயர்களைப் பதிந்துகொண்டிருக்கிறார்கள்? அரசின் உஜ்வலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் ஏன் ஆண்டுக்கு 3.7 சிலிண்டர்களை மட்டும் சராசரியாக வாங்குகின்றனர்?
பணக்காரர்களுக்கே சேவை செய்வதுதான் நிதி ஆயோக்கின் லட்சியம் என்றால் செய்துகொள்ளட்டும், அதற்காக ஏழைகளை, ‘ஏழைகள் அல்லர் - வசதியாகத்தான் வாழ்கிறார்கள்’ என்று சிறுமைப்படுத்தாமல் இருக்கட்டும். வறுமையை ஒழிப்பதில் இந்த அரசுக்கு வெற்றி கிட்டாது, எனவே வறியவர்கள் இல்லை அல்லது எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்று கூறி அவர்களைக் கண்பார்வையிலிருந்து விலக்கிவிடவே இப்படியெல்லாம் கடுமையாக முயற்சிக்கிறது.
தொடர்புடைய கட்டுரைகள்
உற்சாகம் தராத பொருளாதார வளர்ச்சி வேகம்
அனைத்துமே கறுப்பு அல்லது வெள்ளை!
சுய தம்பட்டப் பொருளாதாரம்!
திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!
பணக்கார நாடா இந்தியா?
நிதி ஒதுக்கீட்டில் கைவிடப்பட்ட ஏழைகள்
நடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்
தங்கள் நல்வாழ்வுக்குத் தாங்களே பணம் தரும் ஏழைகள்
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.