தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவரும் மணிக்கொடி எழுத்தாளருமாகிய கு.ப.ராஜகோபாலன் தம் முப்பத்திரண்டாம் வயதில் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டார். அத்தனை சிறிய வயதில் கண்புரையால் பாதிக்கப்படுவது அரிது. ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே கண்புரை உருவாகும். எனினும் குடும்ப மரபு காரணமாகவோ வேறு உடல் நோய்கள் விளைவாகவோ இளவயதிலேயே கண்புரை வரும் என்று மருத்துவம் சொல்கிறது.
இப்போது இதற்கு மிக எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. கண் நோயாளர்களில் 63 விழுக்காட்டினர் கண்புரை நோய்க்கு ஆளானவர்கள் என்கிறார்கள். ஓரிரு மணி நேரத்தில் சிகிச்சை செய்து வீட்டுக்கு அனுப்பிவிடும் வகையில் மருத்துவ முறை முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அரவிந்த் மருத்துவமனை உள்ளிட்ட பலர் இந்நோய்க்கு இலவச சிகிச்சை வழங்குகின்றனர்.
கு.ப.ரா.வின் கண் பாதிப்பு
நூறு ஆண்டுகளுக்கு முன் இந்நோய்க்கு எளிதான சிகிச்சை முறை இல்லை. கண்புரை ஏற்பட்ட காலத்தில் வருவாய்த் துறையில் அரசு ஊழியராகக் கு.ப.ரா. பணியாற்றிக்கொண்டிருந்தார். இரு கண்களிலும் புரை முற்றிப் பார்வையே இல்லாமல் போய்விட்டது. அரசுப் பணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை. சொந்த ஊராகிய கும்பகோணத்துக்குச் சென்று பார்வையற்றவராகச் சில காலம் வாழ்ந்தார். அக்காலத்தில்தான் எழுத்தாளராக அறிமுகம் பெற்றார். 1902இல் பிறந்த அவரது முதல் சிறுகதை 1934ஆம் ஆண்டு வெளியாயிற்று. அவர் தங்கை கு.ப.சேது அம்மாள். பிற்காலத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகப் புகழ்பெற்றவர். பார்வையற்று இருந்தபோது கதைகளைக் கு.ப.ரா. சொல்லச் சொல்லக் கு.ப.சேது அம்மாள்தான் எழுதினார் என்று ஒரு தகவல் உண்டு.
பார்வை பறிபோன காரணத்தால் முடங்கி வீட்டிலேயே இருந்த கு.ப.ரா.வுக்கு கண் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்தார். அதனால் கு.ப.ரா.வுக்குப் பார்வை திரும்பியது. அதன் பிறகு சென்னை சென்று சில ஆண்டுகள் பல பத்திரிகைகளில் பணியாற்றினார். பல கதைகளை எழுதினார். மொழிபெயர்த்தார். சென்னைக்குக் குடும்பத்தோடு குடியேறினார். எல்லாவற்றுக்கும் காரணம் பார்வை கிடைத்ததுதான். பார்வை திரும்பக் கிடைக்க அறுவை சிகிச்சை செய்தவர் டாக்டர் ஆர்.மகாலிங்கம் என்பவர். “கும்பகோணத்தில் ஆர்.மஹாலிங்கம் என்ற கண் மருத்துவர் செய்த அரிய சிகிச்சையால் ஓரளவு கண் பார்வை மீண்டது” (கு.ப.ரா., ப.11) என்கிறார் கரிச்சான் குஞ்சு. இந்தத் தகவலை சிட்டியும் (சிறிது வெளிச்சம், xiii) உறுதிப்படுத்துகிறார். மேலும் அவர் “நான் அவரைச் சந்தித்த சில மாதங்களுக்குள் அவர் கண்களுக்கு ஆபரேஷன் நடந்து மீண்டும் பார்வை கிடைத்த மகிழ்ச்சி தரும் செய்தி கிடைத்தது. அவருடைய கண் நோய் ஆரம்பித்த போதே அவரைச் சந்தித்திருந்த சி.சு.செல்லப்பாவும் நானும் இந்தச் செய்தி கேட்டு ஒருவிதப் புத்துணர்ச்சி அடைந்தோம். பார்வை பெற்றவுடன் கு.ப.ரா. இலக்கிய சிருஷ்டியில் தீவிரமாக முனைந்தார்” (சிறிது வெளிச்சம், xii) என்று விரிவாகவும் பதிவுசெய்துள்ளார்.
பார்வை இல்லாமல் கும்பகோணத்தில் கு.ப.ரா. மூன்றாண்டுகள் இருந்திருக்கிறார் எனத் தெரிகிறது. “மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் ஆர்.மகாலிங்கம் அளித்த சிகிச்சையின் பயனாய்க் கு.ப.ரா.வுக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது” என்று இரா.மோகன் (கு.ப.ராஜகோபாலன், ப.15) எழுதுகிறார். பார்வை கிடைத்தாலும் மீண்டும் அரசு வேலையில் சேர முடியவில்லை. அந்த இடைவெளியில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அவர் உருவாகிக் கவனம் பெற்றிருந்தார். ஆகவே, சென்னை சென்று பத்திரிகைத் துறையில் பணியாற்ற முனைந்தார். சென்னையில் இருந்த காலத்தில் எழுதிய பல கதைகள் மிகவும் முக்கியமானவை.
கு.ப.ரா. செலுத்திய நன்றி
இலக்கியத் துறையில் அவர் முனைந்து பணியாற்றுவதற்குக் காரணம் பார்வை திரும்பக் கிடைத்ததுதான் என்பதை மறுக்க இயலாத உண்மை. அறுவை சிகிச்சை செய்த டாக்டரை நன்றியோடு குறிப்பிட்டுக் கு.ப.ரா.வும் பதிவுசெய்துள்ளார். வங்க மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘துர்க்கேச நந்தினி’ நாவலை 1938ஆம் ஆண்டு கு.ப.ரா. மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்நூலின் சமர்ப்பணம் இது: “இலக்கியத் தொண்டிற்கு எனக்குப் பார்வை அளித்த என் நண்பர் கும்பகோணம் டாக்டர் ஆர்.மகாலிங்கம் அவர்களுக்கு இந்த மொழிபெயர்ப்பு சமர்ப்பணம்” (கு.ப.ரா. எழுத்துக்கள் தொகுதி 3, ப.12). “எனக்குப் பார்வை அளித்த என் நண்பர்” என்று கூறுகிறார். கண் சிகிச்சைக்குச் சென்ற பிறகு அவர் நண்பராகியிருக்கலாம். பார்வை திரும்பாதிருந்தால் தன்னால் எழுதியிருக்க முடியாது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான் “இலக்கியத் தொண்டிற்கு எனக்குப் பார்வை அளித்த” என்று குறிப்பிடுகிறார்.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பத்திரிகைத் துறை பாதிக்கப்பட்டிருந்ததால் 1942வாக்கில் அவர் குடும்பத்துடன் மீண்டும் கும்பகோணம் வந்துவிட்டார். அப்போது அவரைச் சந்தித்துப் பழகிய இளைஞர்கள் இருவர். ‘கரிச்சான்’ என்னும் கு.ப.ரா.வின் புனைபெயரைத் தன் அடையாளமாக மாற்றிக்கொண்ட எழுத்தாளர் ‘கரிச்சான் குஞ்சு’, தி.ஜானகிராமன் ஆகியோர்தான் அந்த இளைஞர்கள். கும்பகோணத்தில் தி.ஜானகிராமனுக்கு ஆசிரியப் பணி கிடைத்திருந்தது. 1942ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 1944 ஏப்ரலில் கு.ப.ரா. இறக்கும் வரை ஒன்றரை ஆண்டுகள் அவரோடு இருவரும் நெருங்கிப் பழகினர். அதைப் பற்றி ‘வழிகாட்டி’ என்னும் தன் கட்டுரையில் தி.ஜானகிராமன் விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.
அக்கட்டுரையில் கு.ப.ரா.வின் கண் பிரச்சினையைப் பற்றி “அப்பொழுது ராஜகோபாலன், கண் பார்வையே போய்விடும் நிலையிலிருந்து சிகிச்சையால் மீண்டு கும்பகோணத்தில் வசித்துவந்தார்” (தி.ஜானகிராமன் கட்டுரைகள், ப.49) என்று ஒரே ஒரு வரி மட்டும் தி.ஜானகிராமன் எழுதியுள்ளார். ஆனால், கு.ப.ரா.வின் தோற்றத்தைத் தெளிவான சித்திரமாக வடித்திருக்கும் தி.ஜா. அவரது கண்களைப் பற்றிக் கூறும்போது “கண்ணுக்குத் தடிக் கண்ணாடிகள். கண் சதையை அறிந்த பின்பு அணியும் பூதக்கண்ணாடி. அதற்குப் பின்னால் இரண்டு கண்களும் இரண்டு மடங்கு பெரிதாகத் தெரியும். சிந்தனையில் ஆழ்ந்த கண்கள். அவருடைய உடலில் பெரிதாக இருந்தது கண் ஒன்றுதான். உலகத்தைப் பார்ப்பதுதான் பிழைப்பு என்று சொல்வது போல அந்தக் கண்ணாடியும் கண்களைப் பெரிதாக்கிக் காட்டும்” (மேற்படி, ப.50) என விரிவாக எழுதியுள்ளார்.
டாக்டர் கதாபாத்திரம்
கு.ப.ரா.வின் கண் சிகிச்சை பற்றியும் அவர் கண்களின் தோற்றம் பற்றியும் எழுதினாலும் சிகிச்சை அளித்த மருத்துவரைப் பற்றித் தி.ஜா. எதுவும் கூறவில்லை. கட்டுரையில் அவரைக் குறிப்பிட்டு எழுதவில்லை என்றால் என்ன? தம் புனைவில் ஒரு பாத்திரமாக அவரை வைத்து தி.ஜா. சிறப்புச் சேர்த்துள்ளார். தி.ஜா. எழுதியுள்ள குறுநாவல்களில் குறிப்பிடத்தக்கது ‘அடி’. திருமணமாகிக் குடும்பமாக வாழும் ஓர் ஆணுக்கும் அவரால் உயர்வு பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுக்கும் இடையே மலரும் காதல், காமம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் நாவல் இது. இராணுவத்தில் வேலை செய்பவர் செல்லப்பா. கிராமத்தில் அவர் தாய் மட்டும் தனியாக வசிக்கிறார். தாய்க்குக் கண்புரை ஏற்பட்டு சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. வடநாட்டில் வசிப்பதால் அவரோ அவர் குடும்பத்தினரோ வந்து உடனிருந்து பார்த்துக்கொள்ள இயலவில்லை. தாய் தனி ஆளுமை கொண்டவர். தம் உறவுக்காரப் பெண்ணாகிய பட்டு, அவள் கணவன் சிவசாமி ஆகியோர் உதவியுடன் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார். நாவலில் இவ்விரு பாத்திரங்களும் அறிமுகமாகிக் கடைசி வரை வருவதற்கான திருப்பம் தாயின் கண்புரை அறுவை சிகிச்சைதான்.
கதைக்குப் பெரிதாகத் தொடர்பில்லை என்றாலும் கண்புரை அறுவை சிகிச்சை செய்த மருத்துவரைப் பற்றித் தாயின் கூற்றாகத் தி.ஜா. விரிவாகக் கூறியுள்ளார். “மகாலிங்க டாக்டர்னா மகாலிங்க ஸ்வாமி தாண்டா. குருடுக்கெல்லாம் கண் கொடுக்கிற கை அது. ராசின்னா அப்படியாப்பட்ட ராசி” (தி.ஜானகிராமன் குறுநாவல்கள், ப.267) என்று தாயின் வார்த்தைகளில் டாக்டர் மகாலிங்கம் தம் பெயரோடு அறிமுகம் ஆகிறார். டாக்டரின் குணம் எப்படி? தாய் சொல்கிறார், “வார்த்தையிலேதான் எத்தனை குளுமை, எத்தனை கரிசனங்கறே! வயத்தில பொறந்த பிள்ளை மாதிரி, அம்மா அம்மான்னு நாலு வார்த்தைக்கு ஒரு அம்மா. நீங்க பயப்படாதீங்கோம்மா பயப்படாதீங்கோம்மான்னு தயார் பண்ணிண்டேயிருந்தார்” (மேற்படி).
பல் மருத்துவர் ஒருவரிடம் சென்று சிகிச்சை பெற்ற அனுபவத்தை அந்தத் தாய் டாக்டர் மகாலிங்கத்திடம் சொல்கிறார். “மகாலிங்கம் டாக்டர் கிட்டவும் சொன்னேன். அவர் விழுந்து விழுந்து சிரிச்சார். அது என்ன தாஷ்ணாப் பொடின்னு கேட்டார். சொன்னேன்” (மேற்படி, ப.268) என்பது தாய் விவரிக்கும் காட்சி. தாஷ்ணாப் பொடியின் செய்முறையைக் கேட்ட டாக்டர் மகாலிங்கம் “எனக்குக்கூட அந்த மாதிரி ஏதாவது பண்ணிண்டா தேவலை போலிருக்கு. எங்காத்து சமையக்காரம்மா முறுக்கு பண்றேன்னு பண்ணிக் கொடுக்கறா. அதைக் கடிக்கவாவது உங்க தாஷ்ணாப் பொடி வைத்யம் பண்ணிக்கணும் போலிருக்கு” என்று சொல்லிச் சிரிக்கிறார். தாய் விடவில்லை. டாக்டரின் புராணத்தைத் தொடர்கிறார். “டாக்டர்னா அப்படீன்னா இருக்கணும். ஆபரேஷன் பண்றப்பக்கூட பேசிண்டே இருந்தார். அஞ்சு நிமிஷம்கூட ஆகல்லெ. கட்டுப் போட்டாச்சு. இத பாருங்கோ இதுதான்; பாட்டி கண்ணை மறைச்சுதுன்னு அந்தக் குட்டிக்கிட்டேயும் அவ ஆமடையான் கிட்டயும் காமிச்சாரம். என் காதிலெ விழுந்தது. பார்க்க முடியல. அதுதான் கட்டுப் போட்டாச்சே” (மேற்படி) என்பது தாயின் விவரிப்பு.
டாக்டர் மகாலிங்கத்தைப் பற்றித் தாய்க்குப் பேசித் தீரவில்லை. ஏதேதோ இடையூறுகள் வந்தாலும் மீண்டும் மீண்டும் டாக்டரைப் பற்றிப் பேசுவதைத் தாய் மறக்கவில்லை. “மகாலிங்கம் டாக்டரைப் பற்றித் தாயார் தொடர்ந்து பேசத் தொடங்கினார்” (மேற்படி, ப.269) என்று சொல்லும் தி.ஜா. அதைத் தொடர விடவில்லை. கதைக்குத் தேவையில்லாமல் டாக்டர் மகாலிங்கம் பற்றி நிறையப் பேசிவிட்டோம் என்னும் உணர்வு தோன்றியிருக்கக்கூடும். அத்துடன் அதை விட்டுவிட்டுக் கதையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
தி.ஜா.வின் வழிகாட்டி
இந்தக் குறுநாவலில் பாத்திரமாக வரும் டாக்டர் மகாலிங்கம் புனைவல்ல. கு.ப.ரா.வுக்குப் பார்வை கொடுத்த டாக்டர் ஆர்.மகாலிங்கம்தான். அவரைப் பற்றிக் கு.ப.ரா. சொல்லத் தி.ஜா. கேட்டிருக்க வேண்டும். கும்பகோணத்தில் இருந்த காலத்தில் கு.ப.ரா.வோடு சென்று அவரைச் சந்தித்திருக்கலாம். அவரைப் பற்றி நல்லதொரு சித்திரம் மனதில் இருந்து இந்நாவலில் அது வெளிப்பட்டிருக்கிறது. ஒன்றரை ஆண்டுகள் கு.ப.ரா.வுடன் பழகிய காலத்தில்தான் டாக்டரைத் தி.ஜா. அறிந்திருக்கிறார். அதன் பிறகு கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து 1979இல் எழுதிய ‘அடி’ நாவலில் டாக்டரை அதே பெயரில் பாத்திரமாக்கி இருக்கிறார்.
டாக்டர் மகாலிங்கம் எப்படிப்பட்டவர்? வார்த்தையில் குளுமை; கவனிப்பில் கரிசனம். நோயாளியை மன அளவில் தயார்செய்யும் திறன்; நோயாளிகளிடம் சிரித்துப் பேசும் குணம்; நல்ல நகைச்சுவை உணர்வு; வெளிப்படையாக எதையும் தெரிவிக்கும் சிகிச்சை முறை. இத்தகைய இயல்புகள் எல்லாம் கொண்டவர் டாக்டர் மகாலிங்கம். தாயின் சொற்களில் சொன்னால் அவர் ‘மகாலிங்க ஸ்வாமி’. தி.ஜா.வின் சொற்கள் மூலம் டாக்டரைப் பற்றி நம் மனதில் உருவாகும் சித்திரம் இது.
கு.ப.ரா.வைத் தம் எழுத்துலக வழிகாட்டியாகக் கொண்டவர் தி.ஜானகிராமன். அவர் இறப்புக்குப் பிறகு இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து 1969இல் வெளியான ‘சிறிது வெளிச்சம்’ தொகுப்புக்கு எழுதிய பின்னுரைக்கு ‘வழிகாட்டி’ என்றே தலைப்பு கொடுத்திருந்தார். தி.ஜானகிராமன் தொடக்க காலத்தில் எழுதிய சிறுகதைகள் கு.ப.ரா.வின் பார்வைக்குச் சென்ற பின்னரே வெளியாகி இருக்கின்றன. “ராஜகோபாலனைப் போல ஒரு கதை, ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகுகால ஆசை. அது நிறைவேற மறுத்துக்கொண்டேயிருக்கிறது” (தி.ஜானகிராமன் கட்டுரைகள், ப.52) என்று சொல்லும் அளவு கு.ப.ராவின் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர் தி.ஜா.
கம்பருக்கும் சடையப்ப வள்ளலுக்குமான உறவைப் பற்றி ஒரு கதை உண்டு. கம்பர் வீட்டு விசேஷத்திற்குச் சடையப்ப வள்ளல் சென்றிருந்தாராம். மூவேந்தர் உட்படப் பல மன்னர்கள் வந்திருந்தனர். சடையப்ப வள்ளலுக்கு உட்கார இருக்கை கிடைக்கவில்லை. நின்றுகொண்டே இருந்தாராம். அதைப் பார்த்த கம்பர் “அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பேன்” என்று சொன்னாராம். அதே போலக் கம்பராமாயணத்தில் ஆயிரம் பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலின் பெயர் வரும்படி வைத்துப் பாடல் எழுதினாராம். அதேபோலத் தம் வழிகாட்டியாகிய, குருவாகிய கு.ப.ரா.வுக்குக் கண் கொடுத்த டாக்டர் ஆர்.மகாலிங்கத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து ‘மகாலிங்க ஸ்வாமி’ என்று தி.ஜானகிராமன் போற்றியிருக்கிறார்.
பயன்பட்ட நூல்கள்:
1. கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா., 1990, சென்னை, வானதி பதிப்பகம்.
2. கு.ப.ராஜகோபாலன், சிறிது வெளிச்சம், 1969, சென்னை, வாசகர் வட்டம்.
3. இரா.மோகன், கு.ப.ராஜகோபாலன், 1994, புதுதில்லி, சாகித்திய அகாதெமி.
4. கு.ப.ராஜகோபாலன் எழுத்துக்கள் தொகுதி 3, 2002, சென்னை, அல்லயன்ஸ் கம்பெனி.
5. சுகுமாரன் (தொ.ஆ.), தி.ஜானகிராமன் கட்டுரைகள், 2021, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.
6. தி.ஜானகிராமன் குறுநாவல்கள், 2022, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம், ஆறாம் பதிப்பு.
தொடர்புடைய கட்டுரைகள்
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
தமிழ்ச் சொல் நன்று
தனிப்பாடல் எனும் தூண்டில் புழு
2
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
RAJA RAJAMANI 1 year ago
மிக அருமை அய்யா. இப்பதிவிற்கு மிக்க நன்றி. இம்மாதிரி இலக்கிய விவரங்களுக்கு எவ்வளவு குறைவான வாசிப்பு இருக்குன்னு நினைத்தால் மனம் நோகுகிறது.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.