கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

தமிழாசிரியர்கள் தற்குறிகளா?

பெருமாள்முருகன்
27 May 2023, 5:00 am
5

வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி 25.05.2023 அன்று “தமிழ் நம்முடைய மொழி; ஒவ்வொரு இந்தியனின் மொழி. உலகின் மிகப் பழமையான மொழி. திருக்குறள் மொழிபெயர்ப்பைப் பப்புவா நியூ கினியாவில் வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்று பேசியிருக்கிறார். அவர் தொடர்ந்து தமிழின் பெருமையைப் பேசிக்கொண்டே இருக்கிறார். தமிழரின் பெருமையாகச் செங்கோல் நாடாளுமன்றக் கட்டிடத்தை அலங்கரிக்கப்போகிறது. தமிழை உயிர் என்று மேடைதோறும் நாமும் ஒரு நூற்றாண்டாகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நடைமுறை எப்படி இருக்கிறது? 

இழிவான பேச்சுகள்

மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவில் ஓர் உறுப்பினராகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் கோ.பழனி சேர்க்கப்பட்டுள்ளார். உடனே ஒருவர் “இது அருவருப்பைத் தருகிறது. எவ்வளவு காலம்தான் தற்குறிகளான தமிழ்ப் பண்டிட்டுகளையே முக்கியமான பதவிகளில் நியமித்துக்கொண்டிருப்பீர்கள்? அறிவியல் சார்ந்து இயங்கும் அறிஞர்களைக் கல்விக்குழுவில் நியமிப்பதற்குப் பதிலாகத் தற்குறித் தமிழ்ப் பண்டிட்டுகளையே நியமிக்கும் இழிவு என்றைக்கு முடிவு வரும்?” என்று சமூக ஊடகத்தில் எழுதினார். 

கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் பல தரப்பினரும் இடம்பெற வேண்டும். ஒருதுறை சார்ந்த வல்லுநராக இருப்பது குறைந்தபட்சத் தகுதிதான். அதைக் கடந்து அவருக்குச் சமூகத்தோடு எந்த அளவு உறவு உள்ளது, கல்வி சார்ந்த பார்வை என்ன முதலிய பல கூறுகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். கோ.பழனியைப் பல்லாண்டுகளாக அறிவேன். பயிலும் காலத்தில் என் இளையர். நாடகத் துறை வல்லுநர்; நாட்டுப்புறவியல் ஆய்வாளர். எப்போதும் மக்கள் திரளுடன் இணைந்து செயல்படுபவர். கல்வி குறித்த பார்வைகளும் அக்கறைகளும் உடையவர். கல்விக்குழுவில் இடம்பெற வேறென்ன தகுதி வேண்டும்? தமிழாசிரியராக இருப்பது தகுதிக் குறைவா? 

இதில் ‘தற்குறிகள்’, ‘பண்டிட்டுகள்’ என்றெல்லாம் ஒட்டுமொத்தத் தமிழாசிரியர்களையும் இழிவுபடுத்திப் பேசும் இந்தக் கருத்து ஒரே ஒருவருடையது அல்ல. இதுதான் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுப் பொதுமனதின் கருத்து. இன்றைய கல்விமுறை உருவான காலத்திலிருந்து கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாகத் தமிழாசிரியர்கள் கீழேதான் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிப் புகழ்பெற்றவர் தியாகராச செட்டியார். அதே கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றியவர் பூண்டி அரங்கநாத முதலியார். அவருக்குத் தமிழ் இலக்கிய ஈடுபாடு இருந்த காரணத்தால் அடிக்கடி தியாகராச செட்டியார் வீட்டுக்குச் சென்று அவரிடம் அளவளாவி மகிழ்ந்தார். அதைக் கண்ட சிலர் அவரிடம் சென்று “தியாகராச செட்டியார் வெறும் பண்டிதர்; தாங்களோ பெரிய புரபொஸர். தாங்கள் அவர் வீட்டிற்கு அடிக்கடி போவது தங்கள் கௌரவத்திற்கு ஏற்றதல்ல” என்று சொன்னார்கள். உடன் பணியாற்றும் தமிழாசிரியரின் வீட்டிற்குச் செல்வதே கௌரவக் குறைவாம். அப்படிக் கருத முக்கியமான காரணம் பிற துறை ஆசிரியர்களுக்கு ஊதியம் மிகுதி. தமிழாசிரியர்களுக்கு ஊதியம் குறைவு. “செட்டியாரவர்களுக்கு நம்மைக் காட்டிலும் சம்பளம் குறைவென்ற காரணத்தால் அவர்கள் நம்மிலுந் தாழ்ந்தவர்களென்று கருதுகிறீர்களா?” என்று அரங்கநாத முதலியாரே கேட்டிருக்கிறார். 

இந்த நிலை இன்றுவரை மாறவில்லை. அன்றைக்கு ‘வெறும் பண்டிதர்’ என்று இழிவுபடுத்தினர். கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டு கடந்தும் ‘பண்டிட்’ என்னும் இழிவு நீங்கவில்லை. இருபதாம் நூற்றாண்டு இடைக்காலத்தில் அப்படி ஒரு படிப்பு இருந்தது. ஆனால், யாரும் அதைப் பட்டம் என்று கருதுவதில்லை. ஒரு வசைச் சொல்லாகவே பயன்படுத்துகின்றனர். ஊதியத்தில் சமத்தன்மை வந்துவிட்டதா? அரசுப் பணியில் இப்போது ஊதியம் சமமாக வழங்கப்படுகிறது. அதைப் பெறத் தமிழாசிரியர்கள் பல போராட்டங்களை நடத்தினர். இன்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் எல்லோரையும்விடத் தமிழாசிரியர்களுக்கு ஊதியம் குறைவுதான். ஆகவே, மதிப்பும் குறைவு. 

முதல் முதல்வர்கள்

அரசுப் பள்ளிகளில் பணிமூப்பு அடிப்படையில் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால், தமிழாசிரியர்களுக்கு அப்பதவி உயர்வு கிடையாது. ஏனென்றால், தமிழாசிரியர்களுக்கு நிர்வாகம் தெரியாதாம். அதற்கு அவர்கள் தகுதி இல்லையாம். தொடர்ந்து போராடியும் நீதிமன்றம் சென்று வழக்கு நடத்தியும் இந்த நிலைமை மாறியது. தமிழ்நாட்டு அரசுப் பள்ளியில் முதன்முதலாகத் தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற புலவர் ப.சுப்பண்ணன் நாமக்கல்லைச் சேர்ந்தவர். 1986ஆம் ஆண்டு அவர் நாமக்கல், மோகனூர் பாலப்பட்டியில் தலைமையாசிரியராகப் பணியேற்றது வரலாறு. 93 வயதில் வாழும் சாட்சியமாக அவர் இப்போதிருக்கிறார்.

அரசுக் கல்லூரிகளில் தமிழாசிரியர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு எப்போதிருந்து வழங்கப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால், நெடுங்காலம் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது உறுதி. தொடங்கி 183 ஆண்டுகளைக் கடந்த சென்னை மாநிலக் கல்லூரிக்கு இப்போதுதான் தமிழாசிரியர் ஒருவர் முதல்வராக முடிந்திருக்கிறது. 2020இல் முனைவர் கிருஷ்ணன் அக்கல்லூரி முதல்வராகப் பணியேற்றார். அவர்தான் மாநிலக் கல்லூரி முதல்வரான முதல் தமிழாசிரியர். தமிழாசிரியரான முனைவர் இரா.இராமன் தற்போது அக்கல்லூரி முதல்வராகத் திறம்படப் பணியாற்றிக்கொண்டுள்ளார். அகில இந்தியக் கல்லூரிகள் தரவரிசையில் மாநிலக் கல்லூரி இப்போது மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது. தமிழாசிரியரின் தலைமையில்தான் இந்தச் சாதனை நடந்திருக்கிறது. இவையெல்லாம் வரலாற்று நிகழ்வுகள்.

அரசுக் கல்லூரிகளில் பணிமூப்புத் தரவரிசை அடிப்படையில் முதல்வர் பதவி உயர்வு வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர் குழுவிலும் ஏதாவது ஒரு துறையைச் சார்ந்தவர்கள் பணிமூப்புப் பட்டியலில் மிகுதியாக முன்னுரிமை பெறுவது இயல்பாக இருந்துவருகிறது. அவ்வகையில் பெரும்பான்மையான அரசுக் கல்லூரிகளில் இயற்பியல் ஆசிரியர்களே சில ஆண்டுகள் முதல்வர்களாக இருந்தனர். வணிகவியல் ஆசிரியர்கள் பெரும்பான்மை முதல்வர்களாக இருந்ததும் உண்டு. 1996இல் அரசுக் கல்லூரிப் பணியில் சேர்ந்த குழு ஆசிரியர்களுக்கு 2020இல் முதல்வர் பதவி உயர்வு வாய்ப்பு வந்தது. 46 பேர் கொண்ட பட்டியலில் 38 பேர் தமிழாசிரியர்கள். நெடுங்காலம் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பிராயச்சித்தம் போல அப்பட்டியல் அமைந்தது.    

அப்பட்டியலில் நானும் ஒருவன். வெவ்வேறு துறை ஆசிரியர்கள் இப்படிக் கொத்தாகப் பதவி உயர்வு பெற்ற காலத்தில் எல்லாம் வராத விமர்சனமும் முணுமுணுப்புகளும் நாங்கள் பணியேற்றபோது வந்தன. வேறு துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் “இது மாபெரும் துயரம்” என்று என்னிடமே சொன்னார். “உங்களுக்குத்தானே துயரம், அனுபவியுங்கள்” என்றேன். “தமிழாசிரியர்களுக்கு வந்த வாழ்வு” என்று வயிறெரிந்தார் ஒருவர். நாமக்கல், அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியேற்றேன். அக்கல்லூரியில் பல்லாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவன் நான். கல்லூரியைப் பற்றியும் அதன் பிரச்சினைகள் குறித்தும் நன்கறிந்தவன். ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றியெல்லாம் எனக்கு நல்ல அனுமானம் உண்டு. ஆனால், முதல்வராக என் வருகையைப் பெரும்பாலானோர் ரசிக்கவில்லை. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்

பெருமாள்முருகன் 22 Apr 2023

நகைச்சுவை பாத்திரமா தமிழாசிரியர்கள்?

தமிழாசிரியர் எப்படி நிர்வாகம் செய்வார்? மாணவர்களைக் கட்டுப்படுத்த இயலுமா? கல்லூரியில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் நடக்குமா? ஆங்கிலக் கடிதங்களை அவரால் வாசிக்க முடியுமா? அலுவலகம் அவர் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா? இப்படி எத்தனை எத்தனை சந்தேகங்கள்! வேறு துறை ஆசிரியர்கள் மட்டும் எங்கே நிர்வாகம் கற்றுவந்தார்கள்? எல்லோருமே ஆசிரியராகப் பணியாற்றிப் பதவி உயர்வு பெற்றவர்கள்தானே? முதல்வராக இருந்த வேறு துறை ஆசிரியர்கள் பலர் கோப்புகளில் கையொப்பமிடும் பொம்மைகளாக இருந்து சென்றவர்கள்தான். அறையைவிட்டு வெளியில் வராமல் நாற்காலி தேய்த்துக் காலம் போக்கியவர்கள்தான். ஆனால், தமிழாசிரியர் மீது மட்டும் இத்தனை சந்தேகங்கள். 

தமிழாசிரியருக்கு ஒன்றும் தெரியாது என்பது பல்லாண்டுகளாக நிலவிவரும் பொதுமனக் கருத்து. இது எப்படி உருவாயிற்று என்பது தெரியவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் தமிழாசிரியர்களுக்குச் சரியான ஊதியம் வழங்காமல், சமமாக நடத்தாமல் விட்டதன் தொடர்ச்சி இன்று வரைக்கும் வருகிறது போலும். எத்தனைதான் தமிழ்ப் பெருமை பேசினாலும் உள்நாட்டு மொழிகளை இழிவாகக் காணும் காலனிய மனோபாவம் இன்னும் போகவில்லை. தமிழ்த் திரைப்படங்கள் இந்த இழிவை நகைச்சுவையாக்கிப் பரப்பின. தமிழாசிரியர் பாத்திரம் என்றாலே அதற்கு ஒரு நகைச்சுவை நடிகரைப் பிடித்துவிடுவார்கள். வெண்ணிற ஆடை மூர்த்தி அநேகப் படங்களில் தமிழாசிரியராக நடித்திருக்கிறார். ரஜினிகாந்தே தமிழாசிரியராக (தர்மத்தின் தலைவன்) நடித்தாலும் அது நகைச்சுவைப் பாத்திரமாகிவிடும். தமிழாசிரியர் வேட்டிதான் கட்டுவார்; பழைய பஞ்சாங்கமாக இருப்பார். என்ன செய்வது, தமிழ்ச் சமூகத்தின் மனவார்ப்பு அப்படி.

தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் கற்றவர்களை இழிவாகப் பார்ப்பார்கள். ஆங்கிலம் கற்றவர்களுக்கு அந்த இழிவு கிடையாது. அதுவும் மொழிதானே? அவர்களும் மொழி ஆசிரியர்கள்தானே? அவர்களுக்கு எங்கிருந்து கொம்பு முளைத்தது? ஐயா, ஆங்கிலம் என்பது அகில உலக மொழி; அது பொருளுற்பத்தி மொழி என்று கம்பி கட்ட வருவார்கள். இருக்கட்டும். அகில உலகம் முழுக்க ஆங்கிலம் பொருளுற்பத்தியைப் பெருக்கட்டும். தமிழ் மட்டும் அறிந்த தமிழ்நாட்டு மக்கள் எந்தப் பொருளையும் உற்பத்தி செய்வதில்லையா? ஐயா, தம் உணவுக்கான வேலையில் தமிழ் மட்டும் தெரிந்த மக்கள் ஈடுபடுகிறார்களே, அது உற்பத்தியில் சேராதா? வேளாண் குடிகள் ஆங்கிலம் பேசியா விளைவிக்கிறார்கள்?  மொழி எப்படி உற்பத்தியில் ஈடுபடும்? அதைப் பேசும் மக்கள் மூலம்தானே? தமிழ் நிலப்பரப்புக்குள் தமிழ் உற்பத்தி மொழியாகாதா? ஆங்கிலப் பூச்சாண்டியைக் காட்டிக் காட்டித் தமிழாசிரியர்களைப் பயமுறுத்தும் காலம் என்று முடியுமோ? என் பணிக்குத் தேவையான அளவு எனக்கு ஆங்கிலம் தெரியும். போதாதா? “எனக்குத் தமிழ் வராது” என்று சிரித்துக்கொண்டே சொல்வோருக்கு, தாய்மொழி அறிவற்றவர்களுக்கு இல்லாத தாழ்வுணர்ச்சி எனக்கு ஏன் வர வேண்டும்? 

கணினிப் பயன்பாடு

முதல்வருக்கென்று தனிக் கணினி வேண்டும் என்று கேட்டு என்னருகில் வைத்துக்கொண்டேன். பல தகவல்களைக் கணினியில் சேமித்தேன். முதல்வருக்கென்று தனி மின்னஞ்சல் உருவாக்கிக்கொண்டேன். அவசியமானவற்றை நானே கணியச்சு செய்துகொண்டேன். கணினியைத் தமிழாசிரியர் பயன்படுத்துகிறார் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அறிவியல் ஆசிரியர் ஒருவர் “தமிழாசிரியருக்குக் கம்ப்யூட்டரா?” என்று கேட்டார். “ஏன், தமிழாசிரியர் கணினியைப் பயன்படுத்தக் கூடாதா? கடையில் பில் போடுவதற்குக்கூடக் கணினி பயன்படுகிறது. எனக்கு அந்த உரிமை இல்லையா?” என்று கேட்டேன். அந்த ஆசிரியருக்கு மின்னஞ்சல் பார்க்கவும் தெரியாது. மாணவர்கள் யாராவது உதவ வேண்டும். 

அரசு அலுவலகத்தில் கடிதங்கள் எல்லாம் தமிழில்தான் இருக்க வேண்டும். பல ஆசிரியர்களுக்குத் தமிழில் கணியச்சு செய்யத் தெரியாது. அப்படி வாய்ப்பு இருக்கிறது என்பதைக்கூட அறியாதவர்களும் இருந்தனர். அது தொடர்பான மென்பொருள்கள் அறிமுகம் இல்லை. கையால் எழுதிக்கொண்டு வருவார்கள். என்எச்எம் ரைட்டரைப் பலருக்கு அறிமுகப்படுத்தினேன். என் மாணவர் ப.நல்லுசாமி அதே கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரைப் பல துறைகளுக்கும் அனுப்பித் தமிழில் கணியச்சு செய்யக் கற்றுக்கொடுக்கச் சொன்னேன். ஆத்தூர், அரசுக் கல்லூரியில் நான் பணியாற்றியபோது தேசியத் தர நிர்ணயக் குழுவின் அங்கீகாரம் பெற விண்ணப்பம் செய்தோம். அப்போது கணினி சார்ந்த பல பணிகளை முன்னெடுத்துச் செய்த குழுவில் தமிழாசிரியர்களான தமிழ்ச்செல்வனும் உதயகுமாரும் முக்கியமானவர்களாக இருந்தனர். கணினியில் அடிப்படை விஷயங்களைக்கூடப் பலருக்கும் சொல்லித் தர வேண்டியிருந்தது. அதைச் செய்தவர்கள் தமிழாசிரியர்கள். 

ஒவ்வொரு துறையிலும் கிட்டத்தட்ட இருபத்தைந்து விழுக்காடு ஆசிரியர்கள் தொழில்நுட்பம் உட்படப் பலவற்றைக் கற்றுக்கொண்டு சமகாலத்தன்மை கொண்டிருப்பார்கள். ஐம்பது விழுக்காடு ஆசிரியர்கள் தம் பணிக்குத் தேவையானதை மட்டும் கற்றுக்கொண்டு வண்டியோட்டுவார்கள். எதையும் கற்றுக்கொள்ளாமல் தம் வாழ்நாளை வீணே கழிப்போர் இன்னொரு இருபத்தைந்து விழுக்காடு. இதில் தமிழ்த் துறை, பிற கலைத் துறை, அறிவியல் துறை என்றெல்லாம் வேறுபாடு கிடையாது. இந்தக் கடைசி இருபத்தைந்து விழுக்காட்டை வேண்டுமானால் ‘தற்குறிகள்’ என்று வகைப்படுத்தலாம். அதில் தமிழாசிரியர்கள் மட்டுமல்ல, எல்லாத் துறை ஆசிரியர்களும் அடங்குவார்கள். ஆனால், பிற துறை ஆசிரியர்களை ‘நான் அறிவியல் ஆசிரியர்’, ‘நான் வணிகவியல் ஆசிரியர்’, ‘நான் ஆங்கில ஆசிரியர்’ என்னும் கவசம் காப்பாற்றும். தமிழ்த்துறைக்கு அந்தக் கவசம் பயன்படாது. தமிழ்தான் இழிவானது ஆயிற்றே. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

தமிழ்ச் சொல் நன்று

பெருமாள்முருகன் 25 Mar 2023

தன்மானப் போராளிகள்

தமிழாசிரியராகிய நான் முதல்வராக என்னளவில் சிறப்பாகவே பணியாற்றினேன். எல்லாத் துறைகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தேன். சமூகம் அறிவியலால் மட்டும் இயங்குவதல்ல. அதேபோல, கலைத் துறைகள் மட்டும் இருந்தால் போதாது. விளையாட்டு, நூலகம் உட்பட எல்லாத் துறைகளுக்கும் சமமான முக்கியத்துவம் தேவை. எல்லாம் பின்னிப் பிணைந்தவை. எவரும் மேலும் அல்ல; எவரும் கீழுமல்ல. ‘தமிழாசிரியர்’ என்று கீழாகப் பார்த்தவர்கள் தம் கருத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் என் செயல்பாடுகள் அமைந்தன. நான் விருப்ப ஓய்வுபெற்றபோது பிற துறை ஆசிரியர்களே பெரிதும் வருந்தினர். அவர்கள் அன்புமழை என்னைப் பெரிதும் குளிரச் செய்தது. பெருந்திரளாக என் வீடு வரை வந்து வழியனுப்பிச் சென்றனர்.

நான் மட்டுமல்ல, இப்போது அரசுக் கல்லூரிகளில் முதல்வர்களாகப் பணியாற்றும் தமிழாசிரியர்கள் பெரும்பாலோர் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றனர். நவீன கால நிர்வாகத்தை முழுக்கத் தொழில்நுட்பம் ஆக்கிரமித்திருக்கிறது. அதற்கு ஈடுகொடுத்தும் இழிவாகக் கருதியோர் ஏற்றுப் போற்றும்படியும் என் நண்பர்கள் அற்புதமாகச் செயல்பட்டுக்கொண்டுள்ளனர். சும்மா கிடைக்கவில்லை, தமிழ்ச் சமூகத்தின் பொதுமனக் கருத்துக்கு எதிராகப் போராடிப் போராடி இப்போதைய இடத்தைப் பெற்றிருக்கிறோம்.  

எந்தப் போராட்டத்திலும் முன்னிற்பவர்கள் தமிழாசிரியர்களாகவே இருப்பர். எஸ்மா, டெஸ்மா என்று எல்லோருடனும் இணைந்து போராடியது மட்டுமல்ல, தனிப்பட்ட இழிவுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்திருப்பவர்கள் தமிழாசிரியர்கள். தமிழாசிரியர்கள் ஒருபோதும் தற்குறிகள் அல்ல. சமகாலத்தை உள்வாங்கிச் செயல்படும் தன்மானப் போராளிகள். 

 

பயன்பட்ட நூல்: 

ப.சரவணன் (ப.ஆ.), டிங்கினானே (உ.வே.சாமிநாதையர் எழுதிய வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்), 2016, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

குழந்தைத் திருமணப் ‘பெருமைகள்’
நீதிமன்றமே நல்லது
உயர்கல்விப் பாடத்திட்டத்தில் பன்மைத்துவம் அழிகிறதா?
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசின் கடைக்கண் பார்வை கிடைக்குமா?
தமிழ்ச் சொல் நன்று

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


2

2





பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

அரிஅரவேலன்   1 year ago

தமிழாசிரியரைக் கோமாளியைக் காட்டிய முதல்வர் பி.ஆர்.ராசமய்யர் என்று நினைக்கிறேன். அவரது கமலாம்பாள் சரித்திரம் அல்லது ஆபத்துக்கிடமான அபவாதம் என்ற புதினத்தில் ஆடுசாபட்டி அம்மையப்பப்பபிள்ளை என்ற கதைமாந்தர் வழியாக தமிழாசிரியரை கிண்டல் செய்யும் வழக்கத்தை அவர் தொடங்கிவைத்தார். இன்று வரை அதனைப் பலரும் தொடருகின்றனர். ஆனால் கல்வி, திறன், உரிமைநாட்டம், சமுதாயப்பொறுப்புணர்வு ஆகியவற்றில் தமிழாசிரியர் யாருக்கும் சலைத்தவரல்லர் என்பதை பாரதி, பாரதிதாசன், சி.இலக்குவனார், சாலை இளந்திரையன் ஆகியோரைப் போன்றோர பெருந்தொகையினர் தொடங்கி எண்ணற்றோர் திகழ்கின்றனர் என்பதனை தமிழாசிரியர் தொடர்ந்து எடுத்துரைக்கதன் விளைவே எவ்விடத்தும் அவரை ஏளனமாய் நோக்குகின்றனர். மேலும் 'தமிழ்'க்கல்வி வேலைவாய்ப்பிற்கு பயன்படாது என்னும் எண்ணம் நிலவுவதும் தமிழாசிரியரை பயனற்றவர் எனக் கருத்தக் காரணமாய் இருக்கிறது. அவற்றையெல்லாம் தமிழாசிரியர்தான் மாற்ற வேண்டும். அவ்வகையில் தங்களின் இக்கட்டுரை ஒரு தொடக்கம். தொடர்க!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

யோகேஷ்.பு   1 year ago

கடுமையான சூழலை, காட்டாக எடுத்துரைக்கிறது கட்டுரை ஐயா. முதுகலை தமிழ் முடித்து வீட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏதேனும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அலுவலகம் ஒன்றிற்கு சென்றேன். நேர் முகத் தேர்வு, அதை கடும் கோபத்துடனே சொல்கிறேன் ஐயா. "நீங்க MA Tamil literature போட்டு இருக்கீங்க, அத MA மட்டும் போடுங்க, தமிழுன்னு போட்டா எல்லாம் மூஞ்சி சுழிப்பாங்க..." எதிர் கொண்ட மனமும், முகமும் மாறுவது கண்டு தேர்வாளர் பேச்சு அறுபட்டது ஐயா. எத்தனையெத்தனை சாதனைகள் தமிழில் நிகழ்ந்தாலும், இவ்விதமான மனக் கசப்பான நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லை ஐயா. அந்த அலுவலகத்தில் தேவையான கணினி தகுதி இருந்த தமிழ் மாணாக்கர் யான் ஐயா.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

நா. முத்துநிலவன்   1 year ago

மிக அருமையான கட்டுரை அய்யா. நான் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராக 34ஆண்டுகள் 'வாழ்ந்தேன்'. (பதவி உயர்வை மறுத்துவிட்டேன்) 2000ஆம் ஆண்டு முதல் -தங்களைப்போல- சொந்தக் கணினி வாங்கி, முதலில் பாமினி யிலும் பிறகு ஒருங்குறியிலும் தட்டச்சு செய்யப் பழகி, அய்யா அருள் முருகன் வழிகாட்டலில் "கணினித் தமிழ்ச் சங்கம்" வைத்து, பயிற்சி தந்தோம். பல போராட்டங்களை -உள்ளும் புறமும்- நடத்தித் தான் நமக்கான மரியாதையைப் பெறமுடிந்தது. தங்கள் கட்டுரையின் உண்மை என்னைக் குளிர்வித்தது. பலரையும் சுடும், சுட வேண்டும் 🤝👍🙏

Reply 8 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   1 year ago

இந்த கட்டுரையை படித்த பின் தான் இப்படி ஒரு ஏற்ற தாழ்வு இருப்பது தெரிகிறது. ஏனென்றால் நான் படிக்கும் காலத்தில் 11,12 ம் வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியர் அரசு பள்ளியில் இல்லை. நான் நிர்வாக குறை என நினைச்சேன்... இப்போது தான் புரிகிறது.. ஆனால் ஒன்று, இப்போது MRB யில் டாக்டர் recruitment தேர்வில், 1000 பேரை Selection செய்ய, 26000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களை வடிகட்ட, தமிழ் இலக்கண, இலக்கியத்தில் மிக மிக கடினமான கேள்விகளைக் கேட்டு, filter செய்து உள்ளனர்.... (இப்போது தான் டாக்டர்களுக்கு தமிழின் அருமை புரிகிறது)

Reply 10 2

Login / Create an account to add a comment / reply.

Krishnamoorthy Muniyappan   1 year ago

well said sir

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

புத்தக வாசிப்புகாங்கிரஸ் தோல்விவிண்வெளி வாணிபம்கழுத்து வலிமேயர் பிரியா2019 ஆகஸ்ட் 5தேசத் தந்தைவாசகர்களின் சந்தாக்கள்இன்சுலின்இளம் வயது மாரடைப்புஅமைச்சரவைகலைஞர் கருணாநிதிராஜ் சுப்ரமணியம்தனிநபர் துதிமாதாந்திர நுகர்வுச் செலவுவருவாய் புலனாய்வு இயக்குநரகம்மோடியின் செயல்திட்டம்உண்மை போன்ற தகவல்நவீன் பட்நாயக்மேற்கு வங்க காங்கிரஸ்ரத்தசோகைஆப்பிரிக்காடீசல்மாரி!அருஞ்சொல் தமிழ்நாடு நவ் ப.சிதம்பரம் பேட்டிஉயர்கல்விஆளுமைகள்பிரதமர் மோடிஅகிம்சையை கொல்ல வேண்டிய தேவை என்ன?சட்டமன்றத் தேர்தல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!