கட்டுரை, அரசியல், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

அயலுறவில் ‘பெரியண்ணன்’ அணுகுமுறை!

ராமச்சந்திர குஹா
25 Aug 2024, 5:00 am
0

ரேந்திர மோடியின் முதல் ஐந்தாண்டு பதவிக் காலத்திலும் இரண்டாவது ஐந்தாண்டு பதவிக் காலத்திலும் அரசைப் பாராட்டிப் பேசுகிறவர்கள், இந்தியா விரைவிலேயே ‘விஸ்வ குரு’ (உலக ஆசான்) ஆகிவிடும் என்றனர். நம்முடைய நாகரிகத்தின் தொன்மை, பழமையான பண்பாட்டு மரபு, ஆன்மிக நடைமுறைகள் நம்மை பண்பாட்டு தளத்தில் முதன்மையான இடத்தில் வைத்திருக்கின்றன என்றே பேசினர். இந்தியா சமீபத்தில் அடைந்துவரும் பொருளாதார வெற்றிகளும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் நமக்கு உலகத் தலைமைப் பதவியிடத்தைப் பெற்றுத்தந்துவிடும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

இதை இன்னமும் தனிநபருக்கேற்றி, இந்தியா அல்ல – மோடிதான் உலகுக்கே இப்போது வழிகாட்டுகிறார் – தலைமை தாங்குகிறார் என்று பேசுகின்றனர். ‘ஜி20’ உச்சி மாநாட்டு நிகழ்வுகளை காணொலியாக வெளியிட்டபோதும்கூட அவருக்கு முதன்மையான இடம் தந்து, மிகப் பெரிய மாளிகையின் முன்னால் அவர் முதலில் நடப்பதைப் போலவும் அமெரிக்க அதிபர், பிரெஞ்சு அதிபர், பிரிட்டிஷ் பிரதமர் உள்ளிட்டோர் பணிவோடு அவரைப் பின்பற்றுவதைப் போலவும் காட்சிப்படுத்தினர்.

இவற்றுக்கெல்லாம் பயன் இல்லாமல் இல்லை, டெல்லி மெட்ரோவில் நடந்த உரையாடலின்போது, “உனக்குத் தெரியுமா – மோடி இப்போது இந்தியாவுக்கு மட்டுமல்ல இருபது நாடுகளுக்குப் பிரதமர்” என்று ஒருவர் கூறியதாக, என்னுடைய நண்பர் (2023இல்) கூறினார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

விஸ்வ குரு

இந்தியாவை, ‘உலக ஆசான்’ என்று (விஸ்வ குரு) கூறியவர்கள் இப்போது, ‘உலக நண்பன்’ (விஸ்வ மித்ரன்) என்று கூறத் தொடங்கிவிட்டனர். மோடி ஆட்சியின் உள்ளக்கிடக்கையை இது நிச்சயம் கீழிறக்கிவிட்டது. இருந்தாலும், நடைமுறைக்கேற்ப மாற்றப்பட்டிருக்கிறது. உலக ஆசானாவதற்கான நிலையில் இந்தியா இல்லை என்பதால் உலக நண்பனாக சித்தரிக்கப்படுகிறது.

ஏன் இப்படி இந்தியா தன்னை மாற்றி அழைத்துக்கொள்ள வேண்டும்? ‘ஜி20’ மாநாட்டுத் தலைமை என்பது தாற்காலிகமானது என்பது, அரசின் புகழ்பாட அமர்த்தப்பட்டிருந்த மக்கள் தொடர்பு அதிகாரிக்குத் தெரியாதா? அல்லது உலக ஆசானாக இருப்பதற்கான தகுதியைப் பெறும் வகையில் நம்முடைய பொருளாதாரம் வளரவில்லையா? நம்முடைய எல்லையை சீனம் ஆக்கிரமித்திருப்பதாலும் – அதைப் பற்றிப் பேச பிரதமர் மோடி தயங்குவதாலும் – ‘உலகத் தலைவர்’ என்று சொல்லிக்கொண்டால் மிகையாக இருக்கும் என்று உணர்ந்துவிட்டதாலா?

எது எப்படியோ, அரசின் உரையாடலில் தொனி மாறியிருக்கிறது. ஆனால், அரசை ஆதரிக்கும் வட்டத்தில் இருக்கும் பலர் இன்னமும் அந்த நம்பிக்கையிலேயே வாழ்கின்றனர்; ‘பண்டைக்காலத்தில் புஷ்பக விமானத்தை முதலில் பயன்படுத்திய நாடு பாரதம் – அறுபட்ட மூக்கின் இடத்தில், தொடையில் இருந்து தோலை எடுத்துப் பதிய வைக்கும் (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சையை முதலில் செய்தது பாரதம் (சுஸ்ருதர் மூலம்) என்பதால் விரைவிலேயே உலக ஆசானாகிவிடும்’ என்று நம்புகின்றனர்.

கள நிலைமையை நன்கு உணர்ந்த, எது சாத்தியமோ அதை மட்டுமே நம்புகின்ற, அரசியல்ரீதியாக சரியாக சிந்திக்கத் தெரிந்த ஆளுங்கட்சித் தலைவர்கள், ‘விஸ்வ குரு அல்ல விஸ்வ மித்திரன்தான்’ இந்தியா என்று பேசத் தொடங்கியுள்ளனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

சொன்னதைச் செய்திடுமா இந்தியா?

ப.சிதம்பரம் 18 Sep 2023

வங்கதேசப் புரட்சி

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள மாணவர்களின் ஜனநாயக ஆதரவுப் புரட்சி காரணமாக, விஸ்வ மித்திரன் என்ற அடையாளத்தைக்கூட இந்தியா கவனமாகத்தான் பயன்படுத்த வேண்டும். வங்கதேசத்தில் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் இந்தியாவை நம்பிக்கைக்குரிய நாடாகப் பார்க்கவில்லை. 

சர்வாதிகாரியான ஷேக் ஹஸீனா வாஜித்தை மோடி அரசு ஆதரித்ததால் இந்தியாவின் உள்நோக்கங்களை அவர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம், எதிர்க்கட்சிகள் எதுவும் போட்டியிடாமல் புறக்கணித்த நிலையில் நடந்த வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் - நல்ல முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதாக - இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த சான்றிதழ் அந்நாட்டு மக்களை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது.

இலங்கை - நேபாளம்

ஆசிய கண்டத்தில் மிகப் பெரிய நாடும் தங்களுக்குப் பக்கத்தில் இருப்பதுமான இந்தியா, அகம்பாவத்துடனேயே நடந்துகொள்வதாகவும் தங்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து உள்விவகாரங்களில் தேவையின்றித் தலையிடுவதாகவும் பக்கத்து நாடுகளான இலங்கை, நேபாளம் ஆகியவையும் கருதுகின்றன. கொழும்பு, டாக்கா, காத்மாண்டு நகரங்களில் இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், உளவுத் துறையினரின் தலையீடுகள் காரணமாக தங்களுடைய நாட்டில் முடிவில்லாத குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கும் சர்வாதிகார ஆட்சிகளுக்கும் இந்தியாவும் முக்கியக் காரணம் என்றும் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள் கூட்டாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சிலவற்றையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு இந்திய அரசு கடந்த பத்தாண்டுகளாக முட்டுக்கொடுத்து, இந்தியாவுக்குச் சாதகமான அரசியல் – பொருளாதார சலுகைகளைப் பெற்றது என்பது வங்கதேசிகள் வைக்கும் குற்றச்சாட்டு.

இந்திய அமைதிகாப்புப் படை இலங்கையில் கால் வைப்பதற்கு முன்னாலும், வைத்த பிறகும் இலங்கை அரசியலில் இந்தியா நிகழ்த்திய நேரடி தலையீட்டால் நாடு பெரும் இன்னல்களுக்கு ஆளாகியது, இப்போதோ இந்தியப் பெருந்தொழில் நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைக்க அரசு தீவிரமாகப் பாடுபடுகிறது என்று இலங்கைவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

நேபாளத்தில் ஒரு காலத்தில் ராஜதந்திரிகள் மூலமும் ஆர்வக்கோளாறு மிக்க அரசியல்வாதிகள் மூலமும் இந்தியா நேரடியாகத் தலையிட்டது. இப்போது இந்திய உளவுத் துறையும் ஆர்எஸ்எஸ் போன்ற இந்து தன்னார்வ அமைப்புகளும் புகுந்து குழப்புகின்றன என்கின்றனர். கடுமையான நிலநடுக்கத்தால் நாடே நிலைகுலைந்த நிலையில்கூட 2015இல் நேபாளத்துக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, குழந்தைகளுக்கான உணவு, பழங்கள் – காய்கறிகள், மருந்து - மாத்திரைகள், பெட்ரோல் – டீசல் - கெரசின் போன்ற அவசியப் பொருள்கள்கூட கிடைக்காமல் மிகப் பெரிய போக்குவரத்துத் தடையை இந்திய அரசு ஆதரித்தது. இந்தியாவின் விருப்பத்துக்கேற்ப நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத் திருத்தம் இல்லை என்பதுதான் இந்த தடை நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என்று நேபாள அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஜனநாயகமே பற்றாக்குறை!

ப.சிதம்பரம் 11 Aug 2024

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துமே உண்மையானவை, துல்லியமானவை. நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய மூன்று நாடுகளிலும் நிறைய நாள்கள் இருந்திருக்கிறேன், ஏராளமான நண்பர்களுடன் உரையாடியிருக்கிறேன். இந்த மூன்று நாடுகளையும் சேர்ந்த எழுத்தாளர்கள், அறிஞர்கள் கூறுவதைப் போல இந்திய அரசு ‘பெரிய அண்ணன்’ மனோபாவத்தில் உள்நாட்டு நடவடிக்கைகளில் தலையிட்டிருக்கிறது. மெக்ஸிகோ நாட்டின் அதிபராக 19வது நூற்றாண்டில் பதவி வகித்த ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. “பாவம் மெக்ஸிகோ, கடவுளிடமிருந்து வெகு தொலைவிலும் - அமெரிக்காவுக்கு மிகச் சமீபத்திலும் இருக்கும் நிலை அதற்கு வாய்த்துவிட்டது” என்று.

வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஏராளமான அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தியா பக்கத்து நாடாக இருப்பதால் அவற்றில் பலவற்றைத் தீர்த்துக்கொள்ள முடியாமலும் அவை திணறுகின்றன.

மோடிக்கு முன்பிருந்தே

இப்படிச் சொல்வதுடன் இன்னொன்றையும் நான் சொல்லியாக வேண்டும். நம்முடைய பக்கத்து நாடுகளுடனான நம்முடைய அணுகுமுறை நரேந்திர மோடி பிரதமராக வருவதற்கு முன்பிருந்தே இப்படித்தான் இருக்கிறது. இலங்கைக்கு இந்திய அமைதிகாப்புப் படையை அனுப்பியவர் ராஜீவ் காந்தி. நேபாளத்தின் மீது முதல் முறை பொருளாதாரத் தடையை அமல்படுத்தியவரும் ராஜீவ் காந்திதான்.

அவருக்கும் முன்னால், நம் நாட்டின் முதல் பிரதமரும் முதல் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஜவஹர்லால் நேருதான் இதற்கெல்லாம் அச்சாரமிட்டார். சம அந்தஸ்து இல்லாத பக்கத்து நாடுகள் ஒன்றுக்கொன்று சுமுகமாக உறவுகொள்வதுதான் மிகவும் கடினமான செயல் என்பதை நேருவும் அங்கீகரிக்கவில்லை, அவருக்கு நெருங்கிய ஆலோசகர்களும் அவரிடம் அதைத் தெரிவிக்கவில்லை என்று சிறந்த ராஜதந்திரியான ஜகத் மேத்தா ஒருமுறை வருத்தப்பட்டார்.

வரலாறு மட்டுமல்ல, புவியியலும்கூட சீனத்துடனும் பாகிஸ்தானுடனுமான நம்முடைய உறவு இப்படியேதான் சிக்கலாகத் தொடரும் என்பதை உறுதிசெய்துவிட்டன. ‘மெக் மோகன்’ நில எல்லைக் கோட்டை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் சரியென்று ஏற்றுக்கொள்ளவேயில்லை. எனவே இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு இது அடிப்படைக் காரணம்.

மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் செல்வாக்கு காரணமாக ஏற்பட்ட உடன்பாட்டில் முந்தைய சீன அரசு நெருக்குதலின்படி செய்துகொண்ட உடன்பாட்டை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து நிராகரிக்கிறது. 1962ஆம் ஆண்டு சீனா நிகழ்த்திய ஊடுருவல் இந்தியர்களின் மனங்களில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டது. பாகிஸ்தான் தொடர்ந்து பல பத்தாண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக (காஷ்மீரில் மட்டுமல்ல) பல பகுதிகளில் பயங்கரவாதிகள் மூலம் நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது, எனவே அந்நாட்டுடன் சுமுக உறவை வளர்ப்பது மிக மிகக் கடினம்.

ஆனால் இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் அப்படி நமக்கு பெரிய தொடர் பிரச்சினைகள் எதுவுமே இல்லை. அதேசமயம் அவற்றுடன் சுமுகமான, வலுவான உறவை வளர்த்துக் கொள்வதற்கான அம்சங்கள் பல இருக்கின்றன. நேபாளத்துடன் இந்தியாவுக்கு மிகப் பெரிய நில எல்லை இருக்கிறது, இரு நாட்டவர்களும் வெகு இயல்பாக கலந்து பழகிவருகின்றனர், வணிகத் தொடர்பு, போக்குவரத்து, ஆன்மிக சுற்றுலா என்று உறவு வலுப்பட சாதகமான அம்சங்கள் பல இருக்கின்றன. இரு நாடுகளின் பண்பாடும் கலாச்சாரமும் ஒன்றானவை.

வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற உதவிய நாடு இந்தியா. அதன் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவத் தயாராக இருக்கிறது. இலங்கையுடன் இந்தியாவும் காலனியாக இருந்த நாடு. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இரு நாடுகளின் வரலாறும் அரசமைப்புச் சட்டச் செயல்பாடும் கல்வி வளர்ச்சியும் ஒன்றாகவே திகழ்ந்தன. இந்த மூன்று நாடுகளுடன் இந்தியாவுக்குச் சுமுக உறவு இல்லை என்றால் இந்தியாதான் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மிகப் பெரிய, வலிமையான நாடு என்பதால் இந்தியாதான் இதில் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா வல்லரசா?

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2007 - 2008 காலத்தில் நன்றாக இருந்தபோது, இந்தியா விரைவிலேயே பொருளாதார வல்லரசாகிவிடும் என்று பேசினர். ‘இப்போதே இப்படிப் பேசுவது தவறாகப் போகக் கூடும்; முதலில் இந்தியா தன்னுடைய சமூக – பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டாக வேண்டும், பிறகே உலக அரங்கில் நம்முடைய நிலை குறித்துப் பேச வேண்டும்’ என்றேன். ஆனால், நரேந்திர மோடியின் முதல் ஐந்தாண்டு காலத்தில் அந்தப் பேச்சு மீண்டும் தோன்றி, அதற்கு சுதேசிப் பெயரும் (விஸ்வ குரு) சூட்டப்பட்டது.

உலகத்துக்கே இந்தியா தலைமை தாங்குவதாகப் பேசுவதும் கற்பனை செய்வதும் பித்துக்குளித்தனமானது. இந்தியாவில் காலங்காலமாக சுதந்திரமாகச் செயல்பட்ட அமைப்புகள் அழிந்துவருகின்றன, மக்களிடையே வருவாய் – செல்வ வளத்தில் ஏற்றத்தாழ்வுகள் பெரிதாகிவருகின்றன, ஊழலும் ஒட்டுண்ணி தொழிலதிபர்களை ஆதரிக்கும் போக்கும் நிர்வாகத்தில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளன, எல்லா மாநிலங்களிலும் எல்லாப் பகுதிகளிலும் சுற்றுச்சூழல் வேகமாக நாசமாக்கப்படுகிறது. எனவே, இந்த நிலையில் இந்தியா தன்னுடைய நிலை குறித்து தனக்குள் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். 

‘விஸ்வ குரு’ என்பது எரிச்சலூட்டுவது, ‘விஸ்வ மித்திரன்’ என்ற நிலைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்வது வரவேற்கத்தக்கது. எல்லா நாடுகளாலும் விரும்பப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பினால், முதலில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளுடனான கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டு அவற்றுடன் சுமுக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக இலங்கை, நேபாளம், வங்கதேசத்துடன் நல்லுறவு ஏற்பட வேண்டும். அதற்கு முதல் படியாக அந்த நாடுகளை சமமாக மதிப்பதுடன் அந்த நாட்டு அரசின் நம்பிக்கையைப் பெறுவதைப் போல - நாட்டு மக்களின் நம்பிக்கையையும் வென்றாக வேண்டும்.

© த டெலிகிராப்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

சொன்னதைச் செய்திடுமா இந்தியா?
மகிழ்ச்சி சரி, எக்காளம் கூடாது
ஜனநாயகமே பற்றாக்குறை!
தெற்காசியாவில் ஜனநாயக அழுகல்!
வங்கதேசம்: இது சக்கரவர்த்திகளுக்கான காலம் இல்லை
இரு நாடுகள் கொள்கைக்குப் புத்துயிர்?

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

1






பிராமண சமூகம்சமூக ஜனநாயகக் கட்சிவெளி மாநிலத்தவர்பிங்க் சிட்டிபிரதமர் நேருவின் 1951 - 1952 பிரச்சாரம்தேசத் துரோகச் சட்டம்தலைவர்கள்தமிழ் வம்சாவளிதமிழர்கள்கவிஞர்வியாபாரம்இந்துமத தேசியவாதம்பின்லாந்து பிரதமர்வேளாங்கண்ணிஅரசியலர்இரா.செழியன் கட்டுரைவீழ்ச்சிவெற்றிடங்கள்பிட்டா லிம்ஜரோன்ரெட்நோய்கள்துஷார் ஷா திட்டம்பேரரசர்விமானம்பள்ளிக்கல்விஅக்னி வீரர்கள்முரசொலி செல்வம்புதிய உத்திகள்வங்கதேச வளர்ச்சிபிராமணர் என்பது ஜாதியாசீனா எப்படிக் கண்காணிப்புக்குப் பழகியிருக்கிறது?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!