கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

குமார் கந்தர்வரின் திகட்டாத இசை!

ராமச்சந்திர குஹா
20 Oct 2024, 5:00 am
0

ழைப்பின் பேரில் எல்லா ஊர்களுக்கும் சென்று பேச்சுக் கச்சேரி செய்வதில் உள்ள ஆபத்து என்னவென்றால், ‘நினைவுப் பரிசு’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தருவதைப் பெறுவதும் - அதைப் பாதுகாப்பாகத் தொடர்ந்து காப்பதும்தான்; சில நேரங்களில் இவை கனமாகவும், எதற்கும் பயன்படாமல் இடத்தை அடைத்துக்கொள்வதாகவும்கூட அமைந்துவிடும்.

நிகழ்ச்சியை நடத்திய நிறுவனத்தின் பெயர், ஆண்டு – தேதி, நிறுவனத்தின் இலச்சினை ஆகியவற்றை உலோகத் தகட்டில் பொறித்து, அதை ஒரு மரத்தாங்கியில் வைத்துக் கொடுத்துவிடுவார்கள். எப்போதாவது அவை அழகியல் உணர்ச்சியோடு வடிவமைக்கப்பட்டிருப்பதும் உண்டு. சில வேளைகளில் மலர்க் கொத்துகளாகவும் இருக்கும். பெங்களூரைத் தவிர பிற ஊர்களில் தரும் மலர்க் கொத்துகள் ஊர் திரும்புவதற்குள் வாடி உதிர்ந்தும்விடும்.

கடந்த முப்பதாண்டுகளில் (இது இப்போதும் தொடர்கிறது) நான் பெற்ற மிகவும் அருமையான நினைவுப்பரிசு, நான் படித்த டெல்லி பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றதுதான். அது 2000வது ஆண்டு. எதைப் பற்றிப் பேசினேன் என்பது நினைவில் இல்லை, ஆனால் என்னை அழைத்தவர்கள் வழங்கிய பரிசு மட்டும் நினைவில் அழியாமல் பதிந்திருக்கிறது. அது இந்துஸ்தானி இசைக் கலைஞர் குமார் கந்தர்வா பாடிய பாடல்களைக் கொண்ட எட்டு சி.டி. தொகுப்பு (குறுவட்டு, ஒலித்தட்டு).

அந்தப் பரிசை எனக்காகத் தேர்வுசெய்தவர் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியை அனிதா ராம்பல். நானும் அவரும் சமகால மாணவர்கள். அடிக்கடி என்னை இந்துஸ்தானி கச்சேரிகளில் பார்த்திருக்கிறார். சில சமயம் அவருடைய சிநேகிதரும் - எதிர்காலக் கணவருமான வினோத் ரெய்னாவுடனும் பார்த்திருக்கிறார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

குமார் கந்தர்வா கச்சேரி

ஒருமுறை, குமார் கந்தர்வாவின் கச்சேரிக்கு சென்றிருந்தேன், அவருடைய மனைவி வசுந்தரா கோம்காளியும் உடன் பாடினார். டெல்லியில் ‘மண்டி ஹவுஸ்’ என்ற இடத்துக்குப் பக்கத்தில் எஃப்ஐசிசிஐ நிறுவன அரங்கில் அந்தக் கச்சேரி இரண்டு மணி நேரம் நடந்தது. குமார் இயற்றிய பஜன்களும் பாடப்பட்டன. அத்துடன் மேடைக் கச்சேரிக்கேற்ப மாற்றப்பட்ட, நாட்டுப்புறப் பாடல்களும் இடம்பெற்றன. ரசிகர்கள் அனைவரும் மெய்மறந்து கேட்டோம். கடைசி வரிசையில்தான் அமர்ந்திருந்தேன் என்றாலும் அந்த இனிமை மிக்க இசை, அரங்கம் முழுவதும் பரவி அனைத்து ரசிகர்களுடைய நெஞ்சங்களையும் நிறைத்தது.

அனிதா ராம்பல் அளித்த ஒலித்தட்டுகளில், குமார் கந்தர்வா நான் நேரில் கேட்ட கச்சேரியில் பாடிய பஜன்களுடன் மேலும் பல பாடல்களையும் கொண்டிருந்தன. ‘ஜோட்’ ராகங்களில் அவரே இயற்றிய சில பாடல்கள் கேட்பதற்கு அற்புதமாக இருக்கும். ‘அமீர்’, ‘சங்கரா’ ராகங்களிலும் பல பாடல்கள்; ‘நந்த்’ ராகத்தில், ‘ராஜன் அப்கோ ஆ ரே’ என்ற பாடல் இணையற்றது. மிகவும் அபூர்வமாக பாடப்படும் அல்லது இசைக் கருவிகளில் வாசிக்கப்படும் ‘பத்மாஞ்சரி’ ராகத்தில் 15 நிமிடங்களுக்குத் தொடரும் அப்பாடலை மிகவும் விரும்பிக் கேட்பேன்.

இந்த ஒலித்தட்டுகளைப் பெற்ற பிறகு, சுமார் பத்தாண்டுகளுக்கு அவ்வப்போது திரும்பத் திரும்ப வீட்டிலிருக்கும்போதெல்லாம் கேட்பது வழக்கம். 2010இல் ‘ஐ பாட்’ வாங்கியதும் இந்தப் பாடல்களையெல்லாம் அதிலும் பதிவுசெய்துவிட்டேன். விமானத்தில் நீண்ட தொலைவுப் பயணம் செய்யும்போது அலுப்பில்லாமல் இருக்க இதைக் கேட்கிறேன். அவருடைய ‘நிர்குண’ பஜனைப் பாடல்கள் உள்பட விரிவாக பலவற்றைத் தொகுத்து சேமித்துவைத்திருக்கிறேன். ஆனால், அவற்றில் ஒரு பாடல் கிடையாது, அது அவர் இயற்றியதல்ல என்றாலும் அவரால் மிகச் சிறப்பாக பாடப்பட்டு அவருடைய ரசிகர்களால் திரும்பத் திரும்ப விரும்பிக் கேட்கப்படும் பாடல்தான் – ‘ஜமுனா கினாரே மோரா காவோன்’ (யமுனை என் கிராமத்தில் ஓடுகிறது).

தனிப்பட்ட விருப்பமும்கூட

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம். டேராடூனில் வன ஆராய்ச்சிக் கழக வளாகத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். அந்த வளாகம் முடியும் வட கோடியில்தான் என் பெற்றோர் வசித்தார்கள். அந்த இடம் ஒரு மலைக்குன்றின் உச்சி, அங்கிருந்து பார்த்தால் ‘டன்ஸ்’ (அல்லது டோன்ஸ்) ஆறு நன்றாகத் தெரியும். உள்ளூர் மக்கள் அதை ‘டான்ஸ்’ என்று அழைப்பார்கள். மேற்கு உத்தராகண்டில் சில ஆறுகளுக்கு இந்தப் பெயர். (யமுனைக்கு துணை ஆறாக ஓடும் இதே பெயருள்ள பெரிய ‘டான்ஸ்’ ஆற்றுடன் இதைக் குழப்பிக்கொள்ளக் கூடாது). எங்கள் பகுதியில் ஓடும் சிற்றாரில், தண்ணீர் எப்போதாவதுதான் பெருவெள்ளமாகப் பாயும். மற்ற காலங்களில் நீர்ப்பெருக்கு இருக்காது. ஆனால், அதே பெயருள்ள துணை ஆறு, ஆண்டு முழுக்க நீர் நிரம்பி ஓடும்.

என்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஆறு, மேற்கில் உள்ள ஆசான் ஆறுடன் போய்க் கலக்கும். அங்கிருந்து அவை இரண்டும் கலந்த ஆறு, மேலும் சில கிலோ மீட்டர்கள் பாய்ந்த பிறகு யமுனையில் சேரும். எனவே, ‘ஜமுனா கினாரா மோரா காவோன்’ என்பது என்னுடைய ஊருக்கும் பொருந்தும் என்று அடக்கத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதனால் அந்தப் பாடலுடன் உணர்வுபூர்வமான நெருக்கம். பொழுதுபோக்க குடும்பத்துடன் அந்த ஆற்றங்கரைக்குச் செல்வோம். அங்கே சீக்கியர்களின் ‘பவோந்தா சாஹிப்’ என்ற குருத்வாரா இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் யமுனை மலையிலிருந்து சமவெளியில் பொங்கிப் பாயும் அழகை ரசிக்கலாம்.

மனதுக்குச் சுமையான பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருந்தால் அதற்கும் முன்னால் குமார் கந்தர்வா பாடல்களைக் கேட்டு மனதை அமைதிப்படுத்திக்கொள்வது வழக்கம். அவருடைய மகன் பாடிய பாடல்களையும் எப்போதாவது கேட்பேன். முகுல் சிவபுத்திரா பாடிய ‘ஜமுனா கினாரே’ வேறு விதமாக இருக்கும், அதுவும் உணர்ச்சிவசப்பட வைக்கும். அது நெடியதாகவும் நிதானமானதாகவும் ஆழ்நிலையில் தியானம் செய்ய வைப்பதாகவும் இருக்கும்.

முகுலின் பாடல்களும் யூட்யூபில் கிடைக்கின்றன. அவை அவருடைய வித்தியாசமான, ஆழங்காண முடியாத, அவ்வளவு எளிதில் யாருக்கும் கற்றுத்தந்துவிட முடியாத வகையில் இருக்கும். அவர் பாடிய ‘ஜெய்ஜெயவந்தி’, ‘கேதார்’ – ‘கமாஸ்’ ராகப் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

குமாரின் மகள்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் குமார் கந்தர்வாவின் மகள் கலாபினி கோம்காளி பாடிய பாடல்களைக் கச்சேரியில் நேரில் கேட்டேன். அவருடைய தந்தையின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை ஒட்டி பெங்களூரில் அந்தக் கச்சேரி நடந்தது. இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக, குமார் கந்தர்வாவின் புகைப்படத் தொகுப்பைத் திரையிலிட்டு அவரைப் பற்றிய அறிமுகத்தைச் செய்தார்கள். தார்வாட் நகரில் 1991இல் மல்லிகார்ஜுன் மன்சூருடன் குமார் கந்தர்வா இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் வழிந்தது.

இசைக்கு ஐவர்

மைசூரு ராஜதானியில் ‘பம்பாய்-கர்நாடகம்’ என்று அழைக்கப்பட்ட வட பகுதியில் பத்து – பதினைந்து ஆண்டுகளுக்குள் ஐந்து பெரிய இசை மேதைகள் பிறந்தனர். அவர்களில் மிகவும் மூத்தவர் மல்லிகார்ஜுன் மன்சூர். தார்வாட் நகரம் மிகப் பெரிய கலாச்சார கேந்திரம். அந்த ஐவரில் மிகவும் இளையவர் குமார் கந்தர்வா. கங்குபாய் ஹங்கல், பீம்சேன் ஜோஷி, பசவராஜ் ராஜ்குரு மற்ற மூவர்.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் குமார் கந்தர்வா தன்னுடைய வீட்டுக்கு வந்தபோது, அண்ணனான தன்னைக் கடைசி முறையாகப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறான் தம்பி என்றே நினைத்தார் மன்சூர். வயதில் மூத்தவரான மல்லிகார்ஜுன் தொடர்ச்சியாக புகைபிடித்துக்கொண்டே இருப்பார். இதனால் இதயம் வலுவிழந்து மிகவும் பாதிக்கப்பட்டார். மரணத்தை நெருங்கும் தன்னைப் பார்த்துவிட்டுப் போகத்தான் தம்பி கந்தர்வா வந்திருக்கிறார் என்று கருதி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். உபசரிப்பு, உரையாடல்கள் என்று சந்திப்பு நிறைவுபெற்றது. அந்தோ, குமார் கந்தர்வா அமரரானார் என்ற செய்தி வந்தபோது மல்லிகார்ஜுன் மன்சூர் இதயமே வெடித்துவிடும்போல தேம்பித் தேம்பி அழுதார். ‘தம்பி, நான்தான் முதலில் விடைபெறுவேன் என்று நினைத்தேன், என்னை வழியனுப்ப உடன் இல்லாமல் இந்தச் சிறுவயதில் போய்விட்டாயே?’ என்று மிகவும் அரற்றி வேதனைப்பட்டார். (அதற்குச் சில நாள்களுக்கெல்லாம் மல்லிகார்ஜுன் மன்சூரும் இயற்கை எய்தினார்).

கலாபினி கோம்காளி பெங்களூர் கச்சேரியைத் தன்னுடைய தந்தையார் இயற்றிய மூன்று பாடல்களைப் பீம்பிளாஸ் ராகத்தில் பாடி, தொடங்கினார். மிகவும் கனமான, நுணுக்கங்கள் நிறைந்த ராகம் பீம்பிளாஸ் (பீம்பிளாசி – இந்துஸ்தானி). அந்த ராகத்துக்குரிய லட்சணங்களுடன் அதை இசைத்தார். குமார் கந்தர்வா இயற்றிய பாடலை ‘ஜோட்’ ராகம் ஒன்றில் (ஸ்ரீ கல்யாண்) பாடினார். மத்திய பிரதேசத்தின் வறட்சி பகுதி என்று அறியப்பட்ட ‘மால்வா’ பகுதியின் பின்னணியில் நாட்டுப்புறப் பாடலை அடுத்து பாடினார். பம்பாய் நகரில் இசைப் பயிற்சி செய்த குமார் கந்தர்வா, இதய நோய்க்காக மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் சிறிது காலம் மால்வா பகுதியில் இளைப்பாறத் தங்கினார்.

இதையும் வாசியுங்கள்... 25 நிமிட வாசிப்பு

ஹார்மோனியத்தின் கதை

பழ.அதியமான் 31 Oct 2021

‘ஆப் கி பர்மாயிஷ்!

கச்சேரி மேலும் தொடர்ந்தபோது, ‘ஜமுனா கினாரே’ பாடலைப் பாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. சிறுவயதாக இருந்தால், ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் உள்ள இடைவெளி நேரத்தில், ‘அதைப் பாடுங்கள்’ என்று உரக்க கத்தியே இருப்பேன், அல்லது துண்டுச் சீட்டிலாவது எழுதி அனுப்பியிருப்பேன். வயது ஏற ஏற பொதுவெளியில் சற்றே பொறுப்புடன் நடக்க வேண்டியிருக்கிறது, எனவே சும்மா இருந்துவிட்டேன்.

கச்சேரியின் இறுதியில் ‘ஜமுனா கினாரே’ பாடலை அவர் பாடத் தொடங்கியதும் உள்ளம் உணர்ச்சியில் கொப்பளித்தது; நான் மட்டுமல்ல அங்கு வந்திருந்த ரசிகர்களில் பெரும்பாலானவர்களுடைய எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்ததைக் காண முடிந்தது. கண்களை மூடி, என்னுடைய சிறுவயது நினைவுகளில் மூழ்கியபடியே அந்தப் பாட்டைக் கேட்டேன். நாங்கள் வசித்த மலைப் பகுதியின் அனைத்து இடங்களையும் மனதாலேயே நடந்தேன், யமுனை (ஜமுனா) ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை.

அடுத்த நாள் காலையில் யூட்யூபில், ‘குமார் கந்தர்வா - வசுந்தரா கோம்காளி பஜன் இசை நிகழ்ச்சி புது டெல்லி 1978’ என்று தேடினேன். உடனே ஓர் இணைப்பு உயிர்பெற்றுவந்தது. அன்று குமார் கந்தர்வா நிகழ்த்திய முழுக் கச்சேரியும் (19 பாடல்கள் - 110 நிமிடங்கள்) அதில் பதிவாகியிருந்தன. இசையை நன்கு ரசிக்கும் விஜய்பாடீல் என்பவர் அதைப் பதிவேற்றியிருந்தார். அந்தக் கச்சேரி 1978 ஆகஸ்ட் 20இல் நடந்தது என்ற தேதியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மாட்டில் ஒலிக்கும் தாளம்

டி.எம்.கிருஷ்ணா 23 Jan 2022

டெல்லி பல்கலைக்கழகத்தில் நான் படித்த கடைசி ஆண்டு அது. குமார் கந்தர்வா பாடிய இதர பாடல்களுடன் இந்த இணைப்பையும் சேர்த்துக்கொண்டுவிடுவேன். பேராசிரியை அனிதா ராம்பல் அளித்த 8 ஒலித்தகடுகளும் என்னுடைய ‘ஐ பாடில்’ கேட்கும்படியான வகையில் இன்னமும் இருக்கின்றன.

குமார் கந்தர்வாவின் பாடல்களைக் கேட்டே வளர்ந்தேன், காலத்தால் அழிக்க முடியாத அவருடைய இசை என்னுடைய வாழ்நாளின் கடைசி நாள் வரையில் உடன் வரும். இந்த உலகைவிட்டு நான் விடைபெறும் நாள் வரும்போது என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ நண்பர்களோ, இந்தப் பாடல்களை ஒலிக்கச் செய்வார்கள் – செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்; அதிலும் குறிப்பாக அந்த - ஜமுனா கினாரே மோரா காவோன்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

சங்க இலக்கிய இசைக் கச்சேரி
அப்துல் காதிரும் தியாகராய கீர்த்தனைகளும்
தவிலுக்கு ஒரு சரியாசனம் தந்த ஷண்முகசுந்தரம் பிள்ளை
ஹார்மோனியத்தின் கதை
மாட்டில் ஒலிக்கும் தாளம்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி







நிர்வாகத் துறைசமஸ் நயன்தாரா குஹாதேசிய உணர்வுஆரிய வர்த்தம்சட்டத் சீர்திருத்தம் அவசியம்அபுனைவுபாரத்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்லீ குவான் யுபதப்படுத்தும் தொழிற்சாலைகள்அதிருப்திடி.எம்.கிருஷ்ணா கட்டுரைகண்ஏறுகோள்ஆதரவாளர்கள்வர்ண கோட்பாடுஎழுபத்தைந்தாவது ஆண்டுஜெய்பீம்ராஜ் சுப்ரமணியம்அறுவை மருத்துவம்ஞாலப் பெரியார்பிரிவு 348(2)பெரியார் சமஸ்பாலசுப்ரமணியம் முத்துசாமிமோனு மனோசர்அலகாபாத்கிராமக் கூட்டுறவுதமிழன்டெல்லிவாய்வுத் தொல்லை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!