கட்டுரை, கல்வி, பொருளாதாரம் 2 நிமிட வாசிப்பு
அகில இந்திய ஒதுக்கீடு நோக்கித் தமிழக மாணவர்கள் கவனம் திரும்ப வேண்டும்
அகில இந்திய ஒதுக்கீட்டில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5225 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 15% அதாவது 784 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடாகவும், எஞ்சிய 85% இடங்கள் அதாவது 4,441 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடாகவும் பிரித்து மாணவர் சேர்க்கைகள் நடைபெறவிருக்கின்றன. இதற்கு நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.
அதிக மதிப்பெண் பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் அகில இந்திய ஒதுக்கீட்டில் தங்களுக்கான இடங்களை எடுப்பதில்லை; இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை; சமூக உணர்வு குறைந்தும் காணப்படுகின்றன. இதனால், அகில இந்திய அளவில் - அகில இந்திய ஒதுக்கீட்டில் படிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயேகூட வெளிமாநிலத்தவர்கள் அதிக இடங்களைப் பிடிக்கின்றனர்.
கடந்த ஆண்டு 784 இடங்களில் சுமார் 100 இடங்களில் மட்டுமே தமிழக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விளிம்புநிலைச் சமுதாயங்களிலிருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில்தான் சேர்ந்துள்ளனர். ஏறக்குறைய 675 இடங்களைப் பிற மாநிலத்தவர் பிடித்திருக்கின்றனர்.
வேண்டும் விழிப்புணர்வு!
மாணவர் - பெற்றோர் விழிப்புணர்வு இல்லாமையால், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட 85% மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களையே பெற முயற்சிக்கின்றனர். மேலும் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவை மட்டுமே சிறந்தவை எனப் பிழையான கருத்தை வைத்திருக்கின்றனர்; தலைநகரை நோக்கித் தள்ளப்படும் சமூக அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, சேலம், திருநெல்வேலி, கோவை, திருச்சி, தூத்துக்குடி எனத் தமிழகத்தில் பல நகரங்களில் உள்ள கல்லூரிகளிலும் அதிகப் படுக்கைகளும் வசதிகளும் கொண்டு சிறப்பாகவே இயங்குகின்றன. மட்டுமல்ல, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் ஒன்றிய மருத்துவக் கவுன்சில் மூலம் தரக் கட்டுப்பாடு செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அண்மையில் கண்காணிப்பு காமிரா வேலை செய்யவில்லை; டிஜிட்டல் வருகைப் பதிவேடு இல்லை போன்ற சிறிய பிரச்சினைகளுக்கும் ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி போன்ற மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகார ரத்து என ஊடகங்களில் செய்தி பரவியது, பிறகு சரிசெய்யப்பட்டது பலருக்கும் நினைவிருக்கலாம்.
தமிழகத்திலுள்ள எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின்படிதான் இயங்குகின்றன; அதாவது செயல்பாட்டு அமைப்பில் பெரிய வேறுபாடுகள் இல்லை; பெருநகரங்களில் செலவும் கவனக்குலைவும் அதிகம். தங்களுடைய வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள கல்லூரிகளில் படிப்பதுதான் சிறந்த அணுகுமுறைகூட.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்கிறார்கள் நம் மாணவர்கள்?
23 Nov 2022
நீட் தேர்வில் 610 மதிப்பெண் பெற்ற பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் நாகை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, அரியலூர் போன்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு வந்து படிக்கும்போது, அந்தந்தப் பகுதிகளில் உள்ள தமிழக மாணவர்கள் ஏன் இந்தக் கல்லூரிகளைப் புறந்தள்ளிவிட்டு சென்னையை நோக்கி ஓட வேண்டும்?
ஒரு மாணவர் மருத்துவராகத் தமிழக அரசுக்கு ரூ.60 லட்சம் செலவாகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தோராயமாக ஒரு தொகுதிக்கு சுமார் 784 × 60 = 470 கோடி ரூபாயை நாம் பிற மாநிலத்தவருக்காகச் செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. தமிழக மக்களின் வரிப் பணத்தைத் தமிழக மாணவர்கள் பயன்படுத்துவதற்குத் தேவை: ஒரு விழிப்புணர்வு இயக்கம்.
அந்த விழிப்புணர்வு இயக்கத்தை தமிழக அரசே முன்னின்று நடத்த வேண்டும்! உதாரணமாக, அகில இந்திய ஒதுக்கீட்டில் சேரும் மருத்துவ மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்பதாக அறிவிக்க வேண்டும்! இதன் மூலம் இதுகுறித்த கவனமும் முனைப்பும் அதிகரிக்கும்!
தொடர்புடைய கட்டுரைகள்
நீட்: உலகம் எப்படி அணுகுகிறது?
ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்கிறார்கள் நம் மாணவர்கள்?
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.