கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

தலித் அரசியலின் எதிர்காலம்

சமஸ் | Samas
15 Nov 2023, 5:00 am
1

சென்னையில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘வாக்குச்சாவடி நிர்வாகிகள் மாநாடு’ இந்தியா முழுவதும் உள்ள தலித் அமைப்புகளுக்கு ஒரு முக்கியமான செய்தி என்றுதான் சொல்ல வேண்டும். வாக்குச்சாவடிகள் அளவுக்கு தன்னுடைய நிர்வாகக் கட்டமைப்பை ஒரு கட்சி விஸ்தரித்துச் செல்வது சாதாரண பணி இல்லை; கிட்டத்தட்ட தெருவுக்குத் தெரு கட்சி அமைப்பைக் கொண்டுசெல்லும் பூத காரியம் அது.

இன்றைக்கு நாட்டின் வலுவான கட்சியாகத் திகழும் பாஜக எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் ஆழ வேரூன்றி இருக்கிறதோ அங்கெல்லாம் வாக்குச்சாவடிகள் அளவிலான நிர்வாகக் கட்டமைப்பை அது கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் திமுக, அதிமுக இரண்டு மட்டுமே அத்தகைய விரிந்த கட்டமைப்பை இன்று பெற்றிருக்கின்றன (மதிமுக, தேமுதிக இத்தகு அமைப்பைக் கடந்த காலத்தில் நெருங்கின என்றாலும், காலப்போக்கில் அவை சிதைந்தன). இப்போது அடுத்தகட்டமாக விசிக அப்படி ஒரு முயற்சியில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குச்சாவடி நிர்வாகிகள் அமைக்கப்படும் முறைக்கு மாறாக, எல்லாக் காலகட்டங்களிலும் செயல்படும் நிரந்தர நிர்வாகக் கட்டமைப்பாக இதை உருவாக்குகிறது விசிக. தொழில்முறை அரசியல் வியூகர் ஆதவ் அர்ஜுன் தலைமையிலான அணியின் வசம் இந்த ஒருங்கிணைப்புப் பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மாறிவரும் டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப கட்சி அமைப்பு நவீனப்படுத்தப்பட்டிருக்கிறது.

தேர்தல் சமயத்தில் தேர்தல் பணிகளிலும், தேர்தல் அல்லாத காலத்தில், அரசியல் கொள்கை வகுப்புகளை முன்னெடுக்கும், கட்சியின் அரசியல் லட்சியங்களைப் பரப்பும் பணியிலும் இந்த நிர்வாகிகள் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 68,436 வாக்குச்சாவடிகளில், முதல் கட்டமாக 13,000 வாக்குச்சாவடிகளுக்கு இப்படி நிர்வாகிகளை நியமித்ததோடு அவர்களைச் சென்னைக்கு அழைத்து அரசியல் வகுப்பும் நடத்தினார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். தன்னுடைய இலக்கில் பாதியை எட்ட முடிந்தாலேகூட அது, மக்களை அரசியல்மயப்படுத்துவதில் முக்கியமான முயற்சியாக இருக்கும். “தேர்தல் பயணத்துக்கு இணையாகக் கட்சியின் கொள்கைப் பயணமும் இருக்க வேண்டும்” என்று பேசிய திருமாவளவன், “வெறும் தேர்தல் பணிகளில் மட்டும் ஈடுபடுபவர்களாக தலித் அரசியல் கட்சியினர் ஒருபோதும் செயல்பட முடியாது; அப்படியான செயல்பாடு அமைப்பை நாசமாக்கிவிடும்; விசிக நிர்வாகிகள் சித்தாந்த பலம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.

இதையும் வாசியுங்கள்... 30 நிமிட வாசிப்பு

அரசியலதிகாரமே வலிய ஆயுதம்: திருமா பேட்டி

சமஸ் | Samas 01 Apr 2016

அம்பேத்கர் பாதையும் கன்ஷிராம் பாதையும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெகுஜன மக்கள் பரப்பில் காலடி எடுத்துவைத்த 1999க்குப் பிறகான இந்த 25 ஆண்டுகளில், அது இன்று வந்தடைந்திருக்கும் நிலைப்பாடு அகில இந்திய அளவில் சமூக நீதிப் பரப்பில் செயலாற்றும் கட்சிகளின் வரலாற்றில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.

நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட இந்தியாவின் தேர்தல் பாதையில் தலித் இயக்கங்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் ஒரு காலகட்டம் இது. தலித்துகளுடைய அரசியல் எழுச்சியில் முதல் பாய்ச்ச்சல் அம்பேத்கர் உருவாக்கியது என்றால், அடுத்த பாய்ச்சல் கன்ஷிராம் உருவாக்கியது. 

லட்சியம் எனும் அளவில் தலித்துகளுக்கான ஞானச் சூரியனாக அம்பேத்கர் என்றும் ஒளிர்வார். ஆனால், நடைமுறை அரசியல் களத்தில் அம்பேத்கர் உருவாக்கிய பாதை போதுமானதாக இல்லை. அம்பேத்கரின் ‘குடியரசுக் கட்சி’யால் பெரிய அளவில் முன்னகர முடியவில்லை. “பேர சக்தியே இல்லாமல் தலித் அரசியல் இயக்கத்தினர் அண்டிப் பிழைக்க வேண்டிய நிலையே இருந்தது. 1971இல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டது குடியரசுக் கட்சி; மொத்தமுள்ள 521 தொகுதிகளில் 520 இடங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு வேலை பார்த்து, வெறும் 1 இடத்தில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றிருந்தது  குடியரசுக் கட்சி. துடித்துப்போனேன்” என்று ஒரு பேட்டியில் கன்ஷிராம் குறிப்பிட்டார்.

கன்ஷிராம் 1984இல் உருவாக்கிய பகுஜன் சமாஜ் கட்சியானது நடைமுறை அரசியலில், இந்தச் சூழலை மாற்றியமைத்தது. அதிகாரமே பிரதானம் என்று வெளிப்படையாகச் சொன்ன கன்ஷிராம், சித்தாந்தத்தைத் தேவையற்ற சுமையாகக் கருதினார் என்றும்கூட சொல்ல முடியும். “முதலாளித்துவம், பொதுவுடமைத்துவம் என்ற பிரிவினைக்குள் எல்லாம் அகப்பட்டுக்கொள்வதைக் காட்டிலும் சந்தர்ப்பத்துவம் எனும் பாதையே அழுத்தப்பட்ட சமூகங்கள் மேலேறி வர சரியான வழியாக இருக்கும்” என்றார்.

அம்பேத்கரால் வழங்கப்பட்ட ‘தலித் அரசியல்’ என்ற சொல்லாடலைக் காட்டிலும் ‘பகுஜன் அரசியல்’ என்ற சொல்லடாலே கன்ஷிராமுடைய விருப்பத்துக்குரியதாக இருந்தது. ‘தலித் அரசியல்’ எனும் சொல்லாடல் தலித்துகளை ஒரு வட்டத்துக்குள் குறுக்கிவிடும் என்று அவர் எண்ணினார்.  ‘பெரும்பான்மையினர் அரசியல்’ என்ற அர்த்தத்தைத் தரும் ‘பகுஜன் அரசியல்’ எனும் சொல்லாடலின் கீழ் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் எனப் பல தரப்பு விளிம்புநிலையினரையும் உள்ளடக்க முடியும் என்று அவர் நம்பினார். கன்ஷிராமுடைய இந்த வழியில் பயணப்பட்டுத்தான் நாட்டின் முதல் தலித் பெண் முதல்வராக மாயாவதி உத்தர பிரதேசத்தில் அதிகாரத்தில் அமர முடிந்தது.

வெறும் பாதை மாறுபாடு என்று மட்டும் இதைக் காணலாகாது.

அம்பேத்கர் சாதியமைப்பை அழிக்கப் பேசினார் என்றால், சாதியமைப்பின் தலைகீழாக்கத்தைப் பேசினார் கன்ஷிராம்; இந்தத் தலைகீழாக்கத்துக்கு சாதிகளை அணித்திரட்டுவதும், அந்த வகையில் சித்தாந்தரீதியாகவே சாதிகளின் இருப்பும் அவசியமாக இருந்தது.

பிராமணர்கள் - பனியாக்கள் - பிற்படுத்தப்பட்டோர் - தலித்துகள் எனும் சாதி அதிகார அடுக்கை ‘பிற்படுத்தப்பட்டோர் + தலித்துகள் கூட்டு’ பரிசோதனை முயற்சி மூலம் தலைகீழாக்க முடியும் என்று கன்ஷிராம் நம்பினார். அது அப்படி நடக்கவில்லை. பிற்பாடு மாயாவதி காலத்தில் ‘பிராமணர்கள் + தலித்துகள் கூட்டு’ பரிசோதனை முயற்சி வரை ‘பகுஜன் அரசியல்’ சென்றது. கன்ஷிராம் குறிப்பிட்ட சந்தர்ப்பத்துவப் பாதையானது படிப்படியாக பகுஜன் சமாஜ் கட்சியின் சித்தாந்த வேர்களையே அரித்தது.

அமிலச் சோதனைக்கான காலம்   

எதிரிகளாலும் தீர்மானிக்கப்படுவது அரசியல்.

எப்போதும் நல்வாய்ப்புகளில் மட்டுமே அரசியல் கட்சிகள் பயணிக்க முடியாது. பாஜக போன்ற ஒரு சித்தாந்த வலுவான கட்சி பகாசுர பலத்துடன் மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியில் அமரும் காலகட்டத்தில், சித்தாந்த அரசியலுக்குப் போதிய கவனம் கொடுக்காதவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.

மோடியின் காலகட்டத்தில் உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் வீழ்ச்சிக்கும், தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எழுச்சிக்கும் பின்னுள்ள பல காரணங்களில், பொதுவான மையச் சரடு இதுதான். அந்த வகையில், தலித் அரசியல் வரலாற்றில் மூன்றாவது பாய்ச்சல் திருமாவளவன். ஆயினும், சித்தாந்த அளவில் அம்பேத்கருக்கு அடுத்த அடுத்த நிலையில் திருமாவளனையே சுட்டிடத் தோன்றுகிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இயல்பான கூட்டாட்சி சக்தி 

அரசியல்ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் அம்பேத்கரிடமிருந்து திருமாவளவன் மாறுபடும் இரு புள்ளிகள் மிக முக்கியமானவை.

அம்பேத்கர் வழங்கிய, தலித்துகளுக்கான அரசியல் தத்துவத்தில் உள்ள பெரிய போதாமை, அது இந்தியாவின் இயல்புக்கேற்ற கூட்டாட்சிப் பாதையை மையப்படுத்தி அமையாதது. அம்பேத்கருடைய அரசியல் பாதையின்படி தேசியக் கட்சிகளாகவே தலித் இயக்கங்கள் செயல்பட முடியும்; மாநிலங்களிலிருந்து அந்தந்த மாநிலத்தின் இயல்புத்தன்மையைச் சுவீகரித்து வளர்வதற்கேற்ற சட்டகம் அம்பேத்கரின் மாதிரியில் இல்லை.

கன்ஷிராம் உத்தர பிரதேசம் எனும் மாநிலத்தை மையமாகக் கொண்டே பகுஜன் சமாஜ் கட்சியைக் கட்டினாலும், அது சிந்தனை அளவில் ஒரு தேசியக் கட்சிக்கான மாதிரியையே கொண்டிருந்தது. அம்பேத்கர் வழியில் பிராமணியத்தையும், இந்துத்துவத்தையும் கடுமையாகச் சாடுபவராகவே இருந்தார் கன்ஷிராம். ஆனால், பல முக்கியமான தேசிய விவகாரங்களில் பாஜகவுக்கும், அவர் உருவாக்கிய கட்சிக்கும் எந்தப் பார்வை மாற்றமும் இல்லை.

திருமாவளவன் மிக இயல்பாக தலித்துகளுக்கான அரசியல் தத்துவத்தில் கூட்டாட்சிப் பாதையைப் பொருத்தினார். பிராந்திய மொழிகள் முக்கிய இடம் வகிக்கும் இந்தியச் சமூகத்தில், மொழி வழி அரசியலுக்கான முக்கியத்துவத்தையும் அங்கீகரித்தார். மையத்திலிருந்து மாநிலங்களைப் பார்க்கும் பார்வைக்குப் பதிலாக மாநிலங்கள் சங்கமிக்கும் இடமாக மையத்தை அவர் அர்த்தப்படுத்தினார்.

விளைவாக தன்னுடைய கட்சியின் சிந்தனையையே ‘அணிப் பார்வை’ என்பதாக வடிவமைத்தார் திருமாவளவன். அரசியல் சூழல் சார்ந்து அல்லாமல், கொள்கை அளவிலேயே மத்தியில் மட்டும் அல்லாது; மாநிலத்திலும் கூட்டணி அரசைக் கோரும் இயக்கம் விசிக என்பதும், ‘தனிப் பெரும்பான்மை இருந்தாலும், கூட்டணியரசைக் கூட்டணித் தலைமைகள் சிந்திக்க வேண்டும்’ என்று பல சமயங்களில் அது குறிப்பிட்டிருப்பதும் இங்கே சுட்டப்பட வேண்டியன. 

தலித்துகள் விடுதலை / மேம்பாட்டுக்கான தீர்வுகளில் ஒன்றாக மத மாற்றத்தை அம்பேத்கர் கண்டார். திருமாவளவன் மாறுபடுகிறார். பண்பாட்டுரீதியாக செழுமையான நாட்டார் மரபைக் கொண்டிருக்கும் தலித்துகள் ‘இந்து’ என்ற பெயரில் பிராமணிய சடங்குகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல், தங்களுடைய தனித்துவமான பண்பாட்டுப் பாதையில் சென்றாலே போதும்; புதிய மத அடையாளம் ஒன்றுக்குள் தலித்துகள் செல்வது அவர்களுடைய மரபை வேரறுத்துவிடுவதுடன், சமூகத்தைப் பிளவுக்குள்ளும் தள்ளிவிடும்; தலித்துகளை எண்ணிக்கைரீதியாகப் பலவீனப்படுத்தும்; எல்லாவற்றுக்கும் மேல் உள்ளிருந்து கேள்வி கேட்கும் - எதிர்க்கதையாடலை உருவாக்கும் தலித்துகளின் உரிமை முக்கியமானது என்கிறார் திருமாவளவன்.     

விளைவாகத்தான் இந்தியாவிலேயே இன்று பாஜகவால் பலவீனப்படுத்த முடியாத தலித் சக்தி எனும் இடத்தில் விசிக இருக்கிறது. பல குறைகள் உண்டென்றாலும், மாநிலங்களிலிருந்து உருவாகியிருக்கும் சிறந்த மாதிரி என்று விசிகவைக் கூறிட முடியும். தேர்தல் பாதையில், பெரிய கட்சிகளுடன் கூட்டணி எனும் வாகனத்தையே திருமாவளவன் தேர்ந்தெடுக்கிறார் என்றாலும், களத்தில் ஓர் அழுத்த குரலுக்கான தீவிரத்துடனேயே கட்சியை வைத்திருக்கிறார். 

தலித்துகளுக்கான அமைப்புகள் எந்தக் காரணத்தின் அடிப்படையிலும், தன்னுடைய  தலித் அடையாளத்தைப் பின்னுக்குத் தள்ளிட முடியாது; ஏனைய சமூகங்களுடன் நல்லுறவுக்கான வாகனமாக தலித் அமைப்புகள் செயல்பட முடியும்; சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் கூட்டு சேர்ந்து அணியாக அவை குரல் கொடுக்க முடியும் என்றாலும், தலித்துகளின் மேம்பாடும் தீண்டாமை ஒழிப்புமே அவற்றின் மைய லட்சியமாக இருக்க முடியும் என்பதில் திருமாவளவனுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை.  

தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 20% பங்கு வகிக்கும் தலித்துகளுடைய ஓட்டுகளில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு விசிகவின் வாக்குவங்கியாக இருக்கிறது. சென்னையைத் தொட்டபடி படர்ந்திருக்கும் 17 தொகுதிகள், காவிரிப் படுகையில் 2 தொகுதிகள் என்று 19 தொகுதிகளில் முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாக அக்கட்சி உருவெடுத்திருக்கிறது. இந்த வலுவால் விசிகவின் பேர சக்தி மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. 

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட கவனம்

திருமணமா, இயக்கமா? திருமாவளவன் பேட்டி

ஆசிரியர் 15 Oct 2021

முன்னோடிகளிடமிருந்து பெற்ற பாடம்

இந்தியாவின் மக்கள்தொகையில் 16.6% பங்கை தலித்துகள் வகிக்கிறார்கள் என்றாலும், இந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிபாதியினர் ஐந்து மாநிலங்களுக்குள் வந்துவிடுவார்கள். மாநிலத்தின் மக்கள்தொகையில் 20%க்கும் அதிகமாக தலித்துகள் வசிக்கும் பஞ்சாப் (32%), இமாச்சல் பிரதேசம் (25.2%), வங்கம் (23.9%), உத்தர பிரதேசம் (20.70%), தமிழ்நாடு (20%), ஹரியாணா (20%) போன்ற மாநிலங்களில் மட்டும் அல்லாமல், மக்கள்தொகையில் வெறும் 6.7% பங்கை மட்டும் வகிக்கும் குஜராத் போன்ற மாநிலங்களிலும் விசிக மாதிரியை முயற்சிக்க முடியும். 

அம்பேத்கர், கன்ஷிராம் இருவருடைய பலங்கள் – பலவீனங்களிலிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறார் திருமாவளவன் என்று சொல்லலாம். விசிக செல்ல வேண்டிய பயணம் நீண்டது, அதுவும் அதற்கே உரிய பல குறைகளைக் கொண்டிருக்கிறது; பல பெரும் சவால்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது என்றாலும், இந்தியாவின் தலித் அரசியலின் எதிர்காலத்துக்குத் தமிழ்நாட்டிலிருந்து ஒளி பாய்ச்சுபவராக இன்று திருமாவளவன் உருவெடுத்திருக்கிறார்! 

- ‘குமுதம்’, நவம்பர், 2023

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மனுஸ்மிருதி எதிர்ப்பு: வரலாறும் இன்றைய தேவையும்
மாமன்னன்: உதயநிதிகள் நிஜத்தில் பேச வேண்டும்
திருமணமா, இயக்கமா? திருமாவளவன் பேட்டி
அரசியலதிகாரமே வலிய ஆயுதம்: திருமா பேட்டி
புனா ஒப்பந்தம்: தலித்துகளை ஏமாற்றினாரா காந்தி?
எப்போது கிடைக்கும் உரிய பிரதிநிதித்துவம்?
அம்பேத்கரை அறிய புதிய நூல்
இளையபெருமாள்: காங்கிரஸ் அம்பேத்கரியர்
கான்ஷிராம்: அரசியல் ஸ்திரத்தன்மை என்னும் ஆபத்தை உணர்த்தியவர்
கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு ஸ்டாலின்: திருமாவளவன் பேட்டி
சாதி, மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அரசியலுக்கு இருக்கிறதா?
சாதி ஒழிப்பில் நெருக்கக் கூட்டாளி திராவிட இயக்கம்!: தொல்.திருமாவளவன் பேட்டி

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   8 months ago

தலித் அரசியல் செல்ல வேண்டிய பாதையை அழகாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். தொல் திருமாவளவனின் அணுகுமுறை கன்சிராமின் அணுகுமுறைக்கு ஒத்துப்போவது, தலித் அரசியலுக்கு நல்லது. மட்டுமல்ல அதுவே வெற்றிக்கான வழியாகவும் அமையும் எனக்கொள்ளலாம். இதற்கிடையில் திமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியின் அங்கமாக திருமாவளவனையும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை இந்துத்துவ சக்திகள் தீவிரப்படுத்தியுள்ளன என்பதையும் காணமுடிகிறது. துரதிருஷ்டவசமாக பல்வேறு தலித் அமைப்புகளும் இச்சதித்திட்டத்திற்கு பலியாகி உள்ளன என்பதும், வரும் மக்களவைத் தேர்தலில் தலித் ஓட்டுகளை சிதறடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன என்பதையைம் காணமுடிகிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

தமிழ்ச் சமூகத்தில் முதியவர்களின் எதிர்காலம்?சுவீடன்ஊர்வசி புட்டாலியாசெந்தில் முருகன்மிஸோரம்தொடர் கொலைகள்சமஸ் புதிய தலைமுறைப் பேட்டிசெலன்ஸ்கிசினைமுட்டைதென்னகம்: உறுதியான போராட்டம்வைக்கம் போராட்டம்தான்சானியா: அரசியலும்writer samasபொருளாதார தாராளமயம்உணவுப் பற்றாக்குறைபி.ஆர். அம்பேத்கர்தாளித்தல்அண்ணா சாலைநீராற்றுராணுவ ஆட்சிமனித உரிமை நிறுவன நினைவகம்நிமோனியாலதாமத்திய மாநில உறவுஒலிஉடல் தானம்ஸ்காண்டினேவியன்சுற்றுலா தலம்புதிய நாடாளுமன்றத்தில் ஒளி எங்கே?சிவில் உரிமைகளுக்கான மையம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!