கட்டுரை, அரசியல், சட்டம், கல்வி, மொழி, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு
தென்னாப்பிரிக்காவில் மீண்டும் மொழிக் கிளர்ச்சி!
தென்னாப்பிரிக்காவில் இயற்றப்பட்டுள்ள புதிய கல்விச் சட்டம், மொழித் திணிப்பு காரணமாக மக்களால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது; இது ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயும் விரிசலை ஏற்படுத்திவிட்டது.
வெவ்வேறு மொழிகளைப் பேசும் இனங்களைக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஏற்கெனவே ‘இனவொதுக்கல்’ என்று அழைக்கப்படும் நிறவெறிக்கு எதிராகக் கடுமையாகப் போராடி விடுதலை பெற்ற நாடாகும். அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சமநியாயம் வழங்கும் வகையில்தான் புதிய சட்டம் இருக்கிறது என்று முக்கிய ஆளுங்கட்சி கூறினாலும் அதன் தோழமைக் கட்சி உள்பட மற்றவர்கள் ஏற்கவில்லை.அப்பட்டமான பொருளாதார அசமத்துவம் காரணமாக பெரும்பாலான கறுப்பின மக்களால், தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப முடிவதில்லை. எனவே, அவர்களிடையே கல்வியறிவு மிகவும் குறைவாக இருக்கிறது.
கறுப்பின வளரிள மாணவர்களில் 34.7% பேர்தான் 2022இல் உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்தனர், இது 1996இல் இருந்த 9.4% என்ற அளவுடன் ஒப்பிட அதிகம்தான். கறுப்பினத்தவர்களில் 9.3% பேர்தான் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி ஆகிய மூன்று கட்டங்களைத் தாண்டியவர்கள். வெள்ளை இனத்தவர்களிலோ அது 39.8%.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
ரமபோசா நம்பிக்கை
“நாம் கொண்டுவந்திருக்கும் புதிய கல்விச் சட்டம், படிப்பதற்கு அதிகப்படியான கதவுகளைத் திறந்துவைக்கிறது. மிகச் சிறுவயது முதலே கல்வி பயில இது வலுவான அடித்தளம் இடுகிறது. முறையான பள்ளிக்கல்வி பெற இது உதவும்” என்று புதிய கல்விச் சட்டம் குறித்து தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா அறிவித்தார்.
புதிய சட்டத்தை எதிர்ப்பவர்கள் அதிலும் குறிப்பாக ‘ஆப்ரிக்கான்ஸ்’ என்ற மொழி பேசுவோர், பள்ளிக்கூட நிர்வாகத்தில் அரசின் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், தாய்மொழிக் கல்வி பெற முடியாமல் மாணவர்களைத் தடுக்கவும்தான் அதிகம் துணைபுரியும் என்று அச்சப்படுகின்றனர்.
மக்கள் எதிர்க்கும் (பெலா - BELA) ‘அடிப்படைக் கல்வித் திருத்தச் சட்டம்’ என்ன அம்சங்களைக் கொண்டிருக்கிறது, மக்களில் சில குழுவினர் ஏன் எதிர்க்கின்றனர் என்று பார்ப்போம்:
புதிய சட்டம், தென்னாப்பிரிக்காவில் ஏற்கெனவே அமலில் உள்ள ‘தென்னாப்பிரிக்க பள்ளிகள் சட்டம் 1996’, ‘கல்வியாளர்கள் வேலைவாய்ப்பு சட்டம் - 1998’ ஆகிய இரண்டையுமே திருத்துகிறது.
‘மாணவர்களுக்குப் பிரம்படி – கசையடி போன்ற உடலைத் துன்புறுத்தும் தண்டனைகளை ஆசிரியர்கள் அளிக்கக் கூடாது, படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாத பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும், பள்ளிக்கூடங்களில் மாணவர்களுடைய கல்வித்திறனை மதிப்பிடும் ‘கிரேடு’ வழங்குவது கட்டாயம், வீடுகளிலிருந்தபடியே சுயமாக படிக்கும் குழந்தைகளைப் பள்ளிக்கல்வித் துறை அடிக்கடி ஆய்வுசெய்ய வேண்டும்’ என்பதே புதிய சட்டம்.
பிரிவுகள் 4 – 5
பள்ளிகளில் பயிற்றுமொழியாகப் பின்பற்ற வேண்டிய மொழிகள், மாணவர்களைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கான விதிமுறைகள் ஆகியவற்றை வலியுறுத்தும் பிரிவுகள் 4, 5 ஆகியவைதான் பலமாக எதிர்க்கப்படுகின்றன. ‘ஆப்ரிக்கான்’ என்ற மொழி பேசும் சிறுபான்மை மக்கள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.
தென்னாப்பிரிக்க அரசு அங்கீகரித்துள்ள 11 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயிற்றுமொழியாக பள்ளிக்கூடங்கள் தேர்வுசெய்துகொள்ளலாம் என்று கூறும் சட்டம், மாணவர்களைச் சேர்ப்பதற்கான கொள்கையாக சிலவற்றைக் குறிப்பிடுகிறது. பள்ளிக்கூட அளவில் மாணவர்களைச் சேர்த்துக்கொண்டாலும், அது தொடர்பான ‘இறுதி அதிகாரம்’ தேசிய அடிப்படைக் கல்வித் துறைக்குத்தான் என்கிறது ஒரு உட்பிரிவு.
இதுநாள்வரையில் பள்ளிக்கூடத்தில் எந்த மொழியில் பாடம் நடத்துவது, என்னென்ன மொழிகளைக் கற்றுத்தருவது என்பதெல்லாம் அந்தந்தப் பள்ளிக்கூட ‘மேலாண்மைக் குழுக்க’ளால் மட்டுமே முடிவுசெய்யப்பட்டுவந்தன. இப்போது அதை ‘கல்வி அமைச்சகம்’ தன் பொறுப்பில் மறைமுகமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. ‘ஆப்ரிக்கான்’ என்ற மொழியில் சரளமாகப் பேசவும் எழதவும் தெரியாத கறுப்பினக் குழந்தைகளைப் பள்ளிக்கூட நிர்வாகங்கள் சேர்க்க மறுப்பதால், கல்விக் கொள்கையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்குப் பிறகு இனவொதுக்கல் கொள்கை மறைந்தது; நல்ல நிதிநிலையுள்ள பள்ளிக்கூடங்களுக்குக் கறுப்பினப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும் அனுப்பத் தொடங்கினர். முன்னர் அந்தப் பள்ளிக்கூடங்களில் வெள்ளை இனக் குழந்தைகள் மட்டுமே சேர முடியும், அங்கே ‘ஆப்ரிக்கான்’ என்பது முக்கியமான பாட மொழியாக இருந்தது.
‘ஆப்ரிக்கான்’ மொழி தெரியாததால் தன்னுடைய குழந்தைக்குப் பள்ளியில் அனுமதி கிடைக்கவில்லை என்று கறுப்பினப் பெற்றோர்களே புகார்செய்தனர். நிற அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவதாக இப்போதும் புகார்கள் வருகின்றன.
பிரிட்டோரியாவில் உள்ள லாயர்ஸ்கூல் டேனி மலானில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க மறுக்கிறார்கள் என்று ஆப்ரிக்கான்ஸ், செட்ஸ்வானா மொழி பேசும் கறுப்பினப் பெற்றோர் பலர் அதன் எதிரிலேயே போராட்டம் நடத்தினார்கள். பள்ளிக்கூட நிர்வாகம் புகாரை மறுத்தது. அதே பள்ளியில் தங்கள் குழந்தைகள் படிப்பதாக வேறு பல கறுப்பினப் பெற்றோர்கள் தொலைக்காட்சி நிருபரிடம் உறுதிப்படுத்தினர். மொழி அடிப்படையில்தான் சில மாணவர்கள் நிராகரிக்கப்பட்டனர் என்பதும் பிறகு தெரிந்தது.
மொழிக்கு ஆபத்து!
புதிய கல்விச் சட்டத்தால் தங்களுடைய மொழி அழிந்துவிடும் என்று கறுப்பினத்தவர்களில் சில பிரிவினர் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆங்கில வழியில் கற்குமாறு அதிகாரிகள் எங்களுக்கு நெருக்குதல் அளிக்கின்றனர், அனைவரும் ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்களுக்கு மாறிவிட்டால் மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள ஆப்பிரிக்க குழுக்கள் பேசும் மொழிகள், பண்பாடு, தனி அடையாளம் ஆகிய அனைத்தும் நாளடைவில் மரணித்துவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
‘ஆப்ரிக்கான்’ என்பது - டச்சு (ஹாலந்து - ஒல்லாந்து) மொழியுடன் சிறிதளவு ஜெர்மனி, ஆப்பிரிக்காவிலேயே பேசப்படும் கொய்சான் மொழிகள் ஆகியவை கலந்த - கலப்பு மொழியாகும் (இந்தி, உருதுபோல). 18வது நூற்றாண்டில் இந்தக் கலவை மொழி, அப்பகுதிவாழ் மக்களால் அதிகம் பேசப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் 13% மக்கள் இதைப் பேசுகின்றனர். அப்படிப் பேசுகிறவர்களில் 50% கலப்பு நிறத்தவர், டச்சுக்காரர்களின் வெள்ளை நிற வாரிசுகள் 40%. கறுப்பின மக்களில் 9%, தென்னாப்பிரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் 1% இம்மொழி பேசுகின்றனர். வர்த்தக ஸ்தலங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் ‘ஆப்ரிக்கான்’ அதிகம் பேசப்படுகிறது. கேப் மாநிலத்தின் வடக்கு, மேற்கு பகுதிகளிலும் இதைப் பேசுவோர் அதிகம்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள 23,719 பொதுப் பள்ளிகளில் 2,484இல் ஆப்ரிக்கான் மொழியை மட்டுமேயோ, அல்லது அதை இரண்டாம் மொழியாகவோ கற்றுத்தருகின்றன. மற்ற பள்ளிக்கூடங்களில் பெரும்பாலும் ஆங்கிலம்தான் பாட மொழி, பயிற்றுமொழி. பள்ளிக்கூட மொழியைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்குக் கொடுத்தால் அது அரசியல் நுழையவே வழிவகுக்கும், நாளடைவில் ஆப்ரிக்கான் மொழியைக் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையே குறைந்துவிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். மாணவர்கள் சேர்க்கையிலும் அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் தரப்படுவது கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.
கூட்டணியில் பிளவு
‘இது தேசிய ஒற்றுமைக்கான அரசு அல்ல, தேசிய பிளவுக்கான அரசு’ என்று ‘டெய்லி மாவரிக்’ என்ற தென்னாப்பிரிக்க நாளிதழின் இணையதளத்தில் ஒரு வாசகர் பதிவிட்டுள்ளார். காரணம், தென்னாப்பிரிக்காவை ஆளும் தேசிய ஐக்கிய அரசு (Govt. of National Unity - GNU) கூட்டணியில் தோழமைக் கட்சிகளே அரசின் சட்டத்தை எதிர்க்கின்றன. அதிபர் ரமபோசாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏஎன்சி) கூட்டணியில் பெரிய கட்சி; வேளாண் அமைச்சர் ஜான் ஸ்டீன்ஹியூசன் தலைமையிலான ஜனநாயக கூட்டணி (டிஏ) இரண்டாவது பெரிய கட்சியாகும்.
இவ்விரு தோழமைக் கட்சிகளிடையிலேயே இந்தச் சட்டம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருக்கும்போது இதை அமல்படுத்தத் துடிப்பது சரியல்ல என்று ஜான் ஸ்டீன்ஹியூசன் கண்டித்துள்ளார். “இந்தச் சட்டம் இறுதியாக அமலுக்கு வந்தால் உரிய பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ள ஜான் ஸ்டீன்ஹியூசனே, ‘ஆப்ரிக்கான்’ பேசும் கறுப்பர். இதே கட்சியைச் சேர்ந்த கல்வி அமைச்சர் சிவிவி கருபே, பிரிட்டோரியாவில் இந்தச் சட்டம் கையெழுத்தான நிகழ்ச்சியில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் - பங்கேற்கவில்லை.
உணர்ச்சிகரமனது மொழி
மொழிப் போராட்டம் என்பது தென்னாப்பிரிக்காவிலும் உணர்ச்சிகரமாகவே நினைவுகூரப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே இது தொடங்கியது. தங்களுக்கான அரசு நிர்வாகம், மொழி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் உரிமை தங்களுக்குத்தான் உண்டு என்பது தென்னாப்பிரிக்கர்களின் நீண்ட கால நிலைப்பாடு. நிற அடிப்படையிலும் இன அடிப்படையிலும் வெள்ளைக்காரர்கள் தங்களைத் தனிமைப்படுத்தியதையும் சிறுமைப்படுத்தியதையும் தென்னாப்பிரிக்கர்கள் மறந்துவிடவில்லை.
ஆப்ரிக்கான் என்ன மொழி: ஆப்ரிக்கான் என்ற மொழியின் முதுகெலும்பு டச்சு மொழிதான்; உரிய இலக்கணம் இல்லாமல் பேச்சு வழக்காக அது பரவிவிட்டது. அதைச் சமையலறை மொழி என்றே அந்த நாளில் கூறுவார்கள். காரணம் டச்சுக்காரர்களின் வீடுகளில் வேலை செய்த கறுப்பர்களுடன் அவர்கள் பேசியதே நாளடைவில் அந்த மொழியாகிவிட்டது.
தென்னாப்பிரிக்காவில் குடியேறிவிட்ட டச்சுக்காரர்கள் ‘போயர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். 1800களின் இறுதிப் பகுதியில், அவர்களையும் காலனிவாசிகளாக சிறைப்பிடித்த பிரிட்டிஷாருக்கு எதிராக இரண்டு போர்களை நடத்தினர். பிறகு சுதந்திரம் பெற்றனர். வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற ‘போயர்கள்’, ‘ஆப்ரிக்கான்’ (பேச்சு வழக்கு) மொழியையே சுதந்திர மொழியாகக் கருதினர். எனவே, அது 1925இல் அரசின் மொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட்டது.
நிறவெறி உச்சத்திலிருந்த காலத்தில், ஆப்ரிக்கான் மொழியைப் பேசுகிறவர்களைக்கூட தென்னாப்பிரிக்க பூர்வகுடிகள் ஆதிக்கர்களான டச்சுக்காரர்களுடன் சேர்த்து அடையாளம் கண்டனர். எனவே, உள்ளூர அந்த மொழி மீது வெறுப்பும் உண்டு. ஆப்ரிக்கான், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளைக் கட்டாயப்படுத்திய நிறவெறி அரசு, அவற்றைப் பேச முடியாத பூர்வகுடிகளைத் தொலைதூரங்களில் குடியமர்த்தியது. அவர்கள் வசித்த இடங்களை ‘பண்டுஸ்தான்’ என்றும் அழைத்தது.
சொவேட்டோ எழுச்சி, பலி 700!
அன்றைக்கு இருந்த பள்ளிக்கூடங்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் அனைத்துப் பாடங்களையும் நடத்தின. கறுப்பின மக்களின் மேன்மைக்கு ஆங்கிலம்தான் உதவும் என்று கூறப்பட்டது.
ஆனால் 1961 முதல் ஆங்கிலம், ஆப்ரிக்கான் ஆகிய இரண்டு மொழிகளும் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக்கப்பட்டன. கறுப்பின மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் சொவேட்டோ நகரில் இதை முதலில் அமல்படுத்த நிறவெறி அரசு முடிவுசெய்திருந்தது. இதை எதிர்த்து கறுப்பின மாணவர்கள் 1976 ஜூனில் பெரிய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கூட மாணவர்கள் என்றும் பாராமல் அந்நாளைய நிறவெறி அரசு கடுமையான ஒடுக்குமுறையைக் கையாண்டது. அந்தக் கிளர்ச்சியில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 176 முதல் 700 வரை என்று வெவ்வேறு தரப்புகள் தெரிவிக்கின்றன. உலக வரலாற்றில் மொழிப் போரில் அதிகம் பேர் உயிரிழந்த துயரம் அங்குதான் அரங்கேறியது. ‘சொவேட்டோ எழுச்சி’ என்றே பின்னாளில் அது வரலாற்றில் பதிவானது.
மாணவர்களுடைய கிளர்ச்சியை அடுத்து அரசு தனது இரட்டை மொழித் திணிப்புக் கொள்கையை 1976 ஜூலையில் கைவிட்டது. கறுப்பர்களுடைய பள்ளிகளில் பயிற்று மொழியை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 90% பள்ளிக்கூடங்கள் ஆங்கிலத்தையே பயிற்றுமொழியாக ஏற்றன. நிறவெறி அரசு பரிந்துரைத்த இதர ஆப்பிரிக்க மொழிகளான ஜோசா என்கிற ஜூலு போன்றவற்றை கறுப்பர்கள் நிராகரித்தனர்.
கறுப்பின மக்களிடையே வேற்றுமையை விதைக்க, பழங்குடி மொழிகளை அரசு தந்திரமாக கையாள்கிறது என்று குற்றஞ்சாட்டினர். சேப்பாடி, செசோத்தோ, செட்ஸ்வானா, சீஸ்வதி, ஷிவேண்டா, இட்சோங்கா, டெபேலி ஆகிய ஆப்பிரிக்க மொழிகளையும் அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் அரசு அப்போது சேர்த்தது.
அடுத்து என்ன?
அரசின் வெவ்வேறு உறுப்புகள், புதிய கல்விச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய 4, 5வது பிரிவுகளை விவாதிக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டாலும் சட்டம் அமலுக்கு வந்துவிடும் என்கிறார் அதிபர் சிரில் ரமபோசா. இந்தச் சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று ஆஃப்ரிஃபோரம் போன்ற மனித உரிமைக் குழுக்கள் அறிவித்துள்ளன.
அரசின் நடவடிக்கையால் ஆப்ரிக்கான் மொழி பல்கலைக்கழகத்தில் வழக்கொழியும் அளவுக்குத் தேய்ந்துவிட்டது என்று ஆஃப்ரிஃபோரம் அமைப்பின் ஆலனா பெய்லி குற்றஞ்சாட்டுகிறார். ஆஃப்ரிக்கான் மொழியில் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. இதற்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்போம் என்கிறார் ஆலனா பெய்லி.
தொடர்புடைய கட்டுரைகள்
மண்டேலா, வின்னி: இணையற்ற இணையர்!
ஆப்பிரிக்க டயரி குறிப்புகள்
தான்சானியா: அரசியலும், புவியியலும்
நைரேரேவின் விழுமியங்களும், திட்டங்களும்
ஜூலியஸ் நைரேரே: தான்சானியாவின் தேசத் தந்தை
ருவாண்டா: கல்லறையின் மீதொரு தேசம்
தமிழில்: வ.ரங்காசாரி
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.