கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

மாநிலக் கட்சிகளின் செல்வாக்குப் பிரதேசங்கள்

யோகேந்திர யாதவ் ஸ்ரேயஸ் சர்தேசாய் ராகுல் சாஸ்த்ரி
14 May 2024, 5:00 am
0

க்களவை பொதுத் தேர்தலின் நாலாவது கட்டத்தை ‘உச்சி காலம்’ என்றே அழைக்கலாம்; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணி தவிர, இவற்றுடன் சேராத மாநிலக் கட்சிகளுக்குச் செல்வாக்குள்ள தொகுதிகள் இந்தக் கட்டத்தில் உள்ளன. 

பாஜக, காங்கிரஸ் என்று எந்த அணிக்கும் பெரும்பான்மை வலு கிடைக்காவிட்டால் அடுத்த அரசைத் தீர்மானிக்கக்கூடியவை இந்த ‘அணி சேராத’ கட்சிகளாகும். இரு அணிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காமல் போகக்கூடிய சாத்தியம் ஒரு மாதத்துக்கு முன்னால் இருக்கவில்லை, இப்போது அப்படித் தெரிகிறது. 

முதல் மூன்று கட்டங்களில் பாஜக அணி, தான் முன்னர் வென்ற தொகுதிகளில் 40ஐ இழப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த சரிவை இந்த நாலாவது கட்டத்தில் தடுத்து நிறுத்திவிட அது முயற்சிகளை மேற்கொள்ளும். தெலுங்கு பேசும் மாநிலங்களில் ஓரிரு தொகுதிகளில் கூடுதல் வெற்றிபெற பாஜக முயற்சிக்கக் கூடும். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

வெற்றி வாய்ப்புகள் எத்தகையது?

இந்தக் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் 96 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (யுவஜனா ஸ்ராமிக ரயது காங்கிரஸ்) ஆந்திரத்திலும், பிஜேடி (பிஜு ஜனதா தளம்) ஒடிஷாவிலும், பிஆர்எஸ் (பாரத் ராஷ்ட்ர சமிதி) தெலங்கானாவிலும் முக்கியத்துவம் உள்ளவை. இந்தக் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் 49ஐ பாஜக கூட்டணி கடந்த முறை வென்றது. அதில் 42 பாஜகவுக்கும் 7 அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் கிடைத்தன. 

இந்த 49 தொகுதிகளில் பெரும்பாலானவை உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில்தான் உள்ளன. 2019இல் ‘இந்தியா’ கூட்டணியில் இப்போதுள்ள கட்சிகளுக்குக் கிடைத்தவை 12தான், அவையும் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளால் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டவை எனலாம். எஞ்சிய 35 தொகுதிகள் இரு கூட்டணிகளிலும் சேராத கட்சிகளுக்குக் கிடைத்தவை. அதில் 32 ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவை. 

2019 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அரசியல் செல்வாக்குப் பெருமளவு மாறிவிடவில்லை. ஆந்திரத்திலும் ஒடிஷாவிலும் மக்களவையுடன் மாநில சட்டமன்றங்களுக்கும் பொதுத் தேர்தல் நடக்கிறது. கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்களித்தபடிதான் வாக்குகள் பதிவாகும் என்றால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முன்பு கிடைத்த 49 தொகுதிகளைவிட ஒன்றுகூட அதிகமாகக் கிடைக்க வாய்ப்பில்லை. 

அதேசமயம் ‘இந்தியா’ கூட்டணிக்கு முன்னர் கிடைத்த 12 தொகுதிகளுடன் மேலும் 10 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறாத பிற கட்சிகளுக்குக் கிடைத்த இடங்கள் 35லிருந்து 25 ஆகக் குறையவே வாய்ப்பு.

தேர்தல் களம் எப்படி?

இந்தக் கட்டத்தில் உள்ள தேர்தல் களம் எப்படி என்று பார்ப்போம். ஆந்திர பிரதேசத்தில் மக்களவைக்கும் சட்டமன்றத்துக்கும் சேர்ந்தே பொதுத் தேர்தல் நடக்கிறது. 2019 தேர்தலில் ஐந்தில் நான்கு பங்கு தொகுதிகளை பேரவையிலும், தன்னுடைய மாநில மக்களவைத் தொகுதிகளிலும் கைப்பற்றிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்த முறை கடுமையான அரசியல் எதிர்ப்பைச் சந்தித்துவருகிறது. 

தேசிய ஜனநாயக கூட்டணியில், மூன்று முறை முதல்வர் பதவி வகித்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சியும் (ஜேஎஸ்பி) சேர்ந்துள்ளன. தான் அமல்படுத்திய சமூக – பொருளாதார நல்வாழ்வுத் திட்டங்கள் கைகொடுக்கும் என்று ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. 

மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த பாஜகவுக்கு எதிரான அதிருப்தியும் மகளிர், மதச் சிறுபான்மையோர், பழங்குடிகள் ஆகியோரிடையே தங்களுக்குள்ள செல்வாக்கும் வெற்றிக்கு உதவும் என்று முதல்வர் ஜெகன் நம்புகிறார்.

ஆந்திர மாநில அரசுக்கு எதிராக அதிகரித்துவரும் மக்களுடைய அதிருப்தி, மாநிலத் தலைநகரைத் திட்டவட்டமாக இறுதி செய்யாமலிருக்கும் போக்கு, புதிய கூட்டணிக்குள்ள ஆதரவாளர்களின் வாக்குச் சதவீதம், பவன் கல்யாண் கட்சி கொண்டுவரக்கூடிய 20% காபு சமூக மக்களுடைய வாக்குகள் ஆகியவற்றை தெலுங்கு தேசம் – பாஜக தலைமையிலான கூட்டணி பெரிதும் சார்ந்திருக்கிறது. 

கிராமங்களிலும் ராயலசீமையின் தெற்குப் பகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு ஆதரவு அதிகம்; நகர்ப்புறங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகம். 

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 2019 தேர்தலின்போது தனித்தனியே கிடைத்த வாக்குகளைக் கூட்டிப்பார்த்தால், தெலுங்கு தேசத்துக்கு கடந்த முறை கிடைத்த 3 தொகுதிகளைவிட 7 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். 3.1% வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தால்தான் இந்தக் கூட்டணியால் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும்.

பாஜகவின் நிலை?

இந்தக் கூட்டணியில் மிகவும் வலிமை குறைந்த கட்சி பாஜகதான். கடந்த முறை மாநிலத்தின் மொத்த வாக்குகளில் மிகக் குறைந்த அளவே பெற்றாலும் தோழமைக் கட்சிகளின் வலுவால் சில தொகுதிகளை அதனால் பெற முடிந்தது. அதேசமயம், வகுப்பு வெறியைத் தூண்டும்வகையில் தெலங்கானா மாநிலத்தில் பாஜக தலைவர்களும் அமித் ஷாவும் பேசிய பேச்சுகள் முஸ்லிம் வாக்குகள் கிடைப்பதைத் தடுத்துவிடும். 

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா உதவியால் ஆந்திர பிரதேசத்தில் தன்னுடைய செல்வாக்கை அதிகப்படுத்திவிடலாம் என்று காங்கிரஸ் நம்புகிறது. ஆனால், அதிகமான தொகுதிகள் கிடைப்பது நிச்சயமில்லை.

தெலங்கானாவில் சட்டமன்ற பொதுத் தேர்தலில் கிடைத்த பெரு வெற்றியை அப்படியே தொடர காங்கிரஸ் விரும்புகிறது. அத்துடன் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவருவதால் நிச்சயம் பயன் இருக்கும் என்று நினைக்கிறது. ஆனால், அது மெத்தனமாக இருக்கக் கூடாது. சட்டமன்ற தேர்தல்போல அல்லாமல் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையில்தான் போட்டி. 

கடந்த பத்தாண்டுகளில் வளர்ச்சி அடைந்த பாரத் ராஷ்ட்ர சமிதி, தான் வளர்ந்த முறையாலேயே இப்போது பின்னடைவுகளைச் சந்திக்கிறது. அது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரைத் தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு காங்கிரஸைத் தோற்கடித்தது. இப்போது அதே உத்தியைக் காங்கிரஸ், பாஜக இரண்டும் கடைப்பிடிக்கின்றன. 

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பிஆர்எஸ் கட்சியிலிருந்து வந்தவர்கள்தான். மாநிலத்தில் பாஜக கட்சிக்கு அமைப்புகளும் தொண்டர்களும் இல்லாததால் ஏற்கெனவே அறிமுகமான இந்தப் பிரமுகர்களும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராகத் தாங்கள் செய்துவரும் பிரச்சாரமும் பெரும்பான்மை மத வாக்காளர்கள் முன்பைவிட அதிக எண்ணிக்கையில் தங்களை ஆதரிக்க வழிவகுக்கும் என்று நம்புகிறது பாஜக.

காங்கிரஸின் நிலை?

கிராமப் பகுதிகளில் அதிக செல்வாக்குடன் வென்ற காங்கிரஸ், ஹைதராபாத் பெருநகரப் பகுதியில் அதிக வெற்றிகளைப் பெற முடியவில்லை. எனவே, பிஆர்எஸ் கட்சியில் முன்னர் இருந்து அதிருப்தியால் விலகியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறது. முஸ்லிம்களுடைய ஒட்டுமொத்த ஆதரவும் தங்களுக்குக் கிடைக்கும் என்றும் நம்புகிறது. 

எனவே, காங்கிரஸ் கட்சிக்குக் கடந்த தேர்தலில் கிடைத்த 3 தொகுதிகளைவிட அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி ஓரிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுவிடும், பிஆர்எஸ் கட்சி ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டாலே திருப்திப்பட வேண்டியதுதான்.

ஒடிஷா மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகளிலும் 28 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்தக் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெற்கு உள்பகுதிகளிலும் கடலோரங்களிலும் இத்தொகுதிகள் இருக்கின்றன. 2019லேயே கடும் போட்டி இருந்தது. பாஜக – பிஜு ஜனதா தளம்தான் முதல் இரண்டு இடக் கட்சிகள். அடுத்து வரும் 3 கட்டங்களிலும் ஒடிஷாவில் வாக்குப்பதிவு படிப்படியாக நடைபெறுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 14 தொகுதிகளில் 4 தொகுதிகளுக்கு இந்தக் கட்டத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. இவற்றில் 3 பழங்குடிகள் (சிங்பூம், குந்தி, லோகர்டக்கா) தெற்குப்புறத் தொகுதிகள், பலாமு என்பது பட்டியல் இனத்தவருக்கான வட ஒடிஷா தொகுதி. அடுத்த கட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்க இந்தத் தொகுதிகளில் வெற்றிபெறுவது இந்தியா கூட்டணிக்கு மிகவும் அவசியம்.

2019 தேர்தலில் சிங்பூமை வென்ற காங்கிரஸ் குந்தி, லோகர்டக்கா தொகுதிகளைக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தது. பலாமுவில் ஆர்ஜேடியை பிஜேபி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் இருப்பதால் வாக்காளர்களின் அனுதாப வாக்குகளால் அதிக தொகுதிகளைக் கைப்பற்றிவிடலாம் என்று இந்தியா கூட்டணி நம்புகிறது.

மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பிஹாரில் கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்ற இந்தியா கூட்டணிக்கு வாய்ப்புகள் அதிகம். மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறும் தொகுதிகள் மாநிலத்தின் மத்தியில் உள்ளவை. தேர்தல் நடைபெறும் 8 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் 5 இடங்களை வென்றன. அதில் 4 திரிணமூல் காங்கிரஸுக்கும், 1 தொகுதி காங்கிரஸுக்கும் கிடைத்தன. பாஜக 3இல் வென்றது. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளின்படி திரிணமூல் காங்கிரஸ் மேலும் 3 தொகுதிகளைக் காங்கிரஸ், பாஜகவிடமிருந்து பறிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பிஹார் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் 5 தொகுதிகளும் மிதிலையை ஒட்டிய பிரதேசங்களாகும் கடந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தபடியே இந்த முறையும் மக்கள் வாக்களித்தால் இந்தியா கூட்டணிக்கு ஒரு தொகுதி கிடைக்கும். 2% முதல் 3% வரையில் கூடுதல் வாக்குகள் இந்தியா கூட்டணிக்குக் கிடைத்தால் 5 தொகுதிகளுமேகூட அதற்குக் கிடைக்கும், அதற்கும் வாய்ப்பிருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

பாஜகவின் கோட்டைகள்!

மத்திய பிரதேசத்தில் மால்வா, பழங்குடிகள் மால்வா பகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பேரவைத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை காங்கிரஸ் தக்கவைத்துக்கொண்டாலும் ஆம்ஆத்மி கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் கூட்டணிக்கு அப்படியே விழுந்தாலும் தர், கார்கோன் என்ற இரண்டு பழங்குடி தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றிவிடும். சிறிதளவு கூடுதல் வாக்குகள் கிடைத்தாலும் போதும் ரட்லம் தொகுதியில்கூட காங்கிரஸ் வெற்றிபெற்றுவிடும். உஜ்ஜைன், தேவாஸ், இந்தூர் தொகுதிகள் பாஜகவின் கோட்டைகள். இவற்றில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்புகள் குறைவு.

இந்தக் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் 13 உத்தர பிரதேச தொகுதிகளும் 11 மஹாராஷ்டிர தொகுதிகளும் இந்தியா கூட்டணி வெல்லக்கூடிய வகையில் இல்லை. உத்தர பிரதேசத்தில் தோஆப், அவத் பகுதிகளிலும் பூர்வாஞ்சலின் ஒரு பகுதியிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. 2019 மக்களவை பொதுத் தேர்தல் 2022 சட்டமன்ற பொதுத் தேர்தல் இரண்டிலுமே இங்கு பாஜக வலிமையாக இருக்கிறது.

இருந்தாலும் இப்பகுதியின் 13 எம்.பி.க்களில் 11 பேரை மீண்டும் களம் இறக்கியிருக்கிறது பாஜக. இதை வாக்காளர்கள் விரும்பவில்லை, எனவே அது தேர்தல் முடிவில் எதிரொலிக்கலாம். பாஜகவுக்கு எதிராக 2% வாக்காளர்கள் திரும்பினால் 4 தொகுதிகளையும் 3% வாக்காளர்கள் திரும்பினால் 6 தொகுதிகளையும் அது இழந்துவிடும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

மஹாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாகப் பிரிந்திருந்தாலும் 2019 சட்டமன்ற தேர்தல் வாக்குகளைப் பார்த்தால் இந்தியா கூட்டணிக்கு அதிக சாதகத்துக்கு வாய்ப்புகள் இல்லை. மராத்வாடா, மேற்கு மஹாராஷ்டிரம், வடக்கு மஹாராஷ்டிரம் பகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

கடந்த முறை பாஜகவும் பிளவுபடாத சிவசேனையும் சேர்ந்து 9 தொகுதிகளை இப்பகுதியில் கைப்பற்றின. ஜல்காவோன், ரேவர், ஜல்னா, அகமதுநகர், புணே, பீத் ஆகியவை பாஜகவுக்கு வலிமையான தொகுதிகள். நந்துர்பார், சீரடி, அவுரங்காபாத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிக்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதிக ஆதாயம் இந்தக் கட்டத்தில் இந்தியா கூட்டணிக்குக் கிடைக்க வாய்ப்புகள் குறைவு.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பாஜக, இந்தியா கூட்டணி இரண்டுக்குமே அதிக லாபமும் இழப்பும் இல்லாத வகையில் இந்தக் கட்ட முடிவுகள் இருக்கும். அப்படியே அவற்றுக்குக் கூடுதலாக ஓரிரு இடங்கள் கிடைத்தாலும் அது பிற சிறிய கட்சிகளிடமிருந்து பெற்றவையாக அமையக்கூடும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பாஜகவுக்கு இப்போதே 272 நிச்சயமில்லை
முதல் கட்டம்: ‘இந்தியா’ அணிக்கே ஆதாயம்
இரண்டாம் கட்டம்: பாஜகவுக்குப் பிரச்சினைகள்
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை
சமூகத்தின் முன்னத்தி ஏர் பிரதமர்: சமஸ் பேட்டி
வடக்கு: மோடியை முந்தும் யோகி

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






இந்தி அரசியல்மூடுமந்திரமான தேர்வு முறைகோடி மீடியாசூழலியர் காந்திமாமா என் நண்பன்!நியாயமாக நடக்காது 2024 தேர்தல்!உங்களுடைய மொபைல் உளவு பார்க்கப்படுகிறதா?நீரிழப்புசிவாஜி பூங்காதிருக்கோவிலூர்பிரியங்கா காந்தி அரசியல்அழகு நீலா பொன்னீலன் கட்டுரைஏறுகோள் என்னும் ஜல்லிக்கட்டுதமிழால் ஏன் முடியாது?பிரதமர்கள்அரசியல் நகர்வுமம்தாபிடிஆர் சமஸ்வெள்ளி விழாஈஷா ஆஷ்ரம்கரிகாலச் சோழன் பொங்கல்ஸ்பிங்க்டர்ஹெப்பாடிக் என்கெபலோபதிமஞ்சள்இந்திய தேசிய காங்கிரஸ்கட்சித்தாவல்பிரதீப்சோழர்கள்மாதவிபிராமி எழுத்து

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!