கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

ராகுல் நடை சாதித்தது என்ன?

யோகேந்திர யாதவ்
03 Jan 2023, 5:00 am
1

ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் பாரத் ஜோடோ யாத்திரை என்கிற பாரத இணைப்பு நடைப்பயணம் தில்லி வந்தாகிவிட்டது. நாட்டின் பிரதான ஊடகங்கள் மிகவும் தாமதமாகவும் முணுமுணுப்போடும்தான் அதைப் பற்றிய செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளன. ஆனால், நாட்டின் மனசாட்சியில் யாத்திரை இடம்பெறத் தொடங்கிவிட்டது. அரசியல் களத்திலும் யாத்திரை நுழைந்துவிட்டது. கோவிட் மீண்டும் பரவுகிறது என்று பூச்சாண்டி காட்டி மோடி அரசு அதைத் தடுக்க பார்த்த நிலையிலும், மக்கள் ஆதரவுடன் தொடர்கிறது. 

யாத்திரை குறித்து நாட்டின் அறிஞர்களில் சிலர் விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருப்பதே அதன் வெற்றிக்கு அடையாளம். இதுவரை யாத்திரை குறித்த தகவல்கள், அதில் பங்கேற்றோர் பதிவிட்ட காணொலிகள், அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல்கள் போன்றவை சில யாத்திரிகர்கள் எழுதிய பயணக் கட்டுரைகள் மூலம்தான் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் சில ஊடகங்களில் வெளியான விமர்சனக் கட்டுரைகள் இந்த விவாதத்தை உயர்நிலைக்கு நகர்த்தியுள்ளன.

ராகுல் காந்தியின் டி- ஷர்ட்டுகள், அவருக்கான கன்டெய்னரில் உள்ள நவீன வசதிகள், யாத்திரை செல்லும் பாதை என்று உபயோகமற்ற விஷயங்களையே பேசிவந்ததிலிருந்து மாறி, இந்த யாத்திரையின் மையத்துக்கு நகர்ந்துள்ளன. தேசிய அரசியல் களத்தில் அடுத்து என்ன என்ற விவாதத்தை யாத்திரைத் தொடங்கியிருக்கிறது. இந்த நாட்டின் குடியரசுத்தன்மையைக் குலைக்க முயலும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, அரசியல்ரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் எதிர்த்து நிற்கக்கூடிய மாற்று சக்தி இருப்பதை யாத்திரை உணர்த்தியுள்ளது.

விமர்சனங்களே விளக்குகள்

பேராசிரியர் சுபாஷ் பல்சிகர், பிரதாப் பானு மேத்தா ஆகியோர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதியுள்ள இரு கட்டுரைகள் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். இந்த யாத்திரை வலியுறுத்தும் அம்சம் மீது அனுதாபம் கொண்டுள்ள இருவரும், இந்த யாத்திரை குறித்து முதல்முறையாக ஆழமான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். யாத்திரையின் பின்னணியை விவரித்து தனது சட்டகத்தை வரைகிறார் சுபாஷ் பல்சிகர். “இன்றைய சவால், அரசமைப்புச் சட்டம் அளித்த திட்டத்தை மீண்டும் வலியுறுத்துவது, இந்தியா என்பது என்ன என்று மறு கற்பனையில் வார்ப்பது, ஜனநாயகத்தின் வரையறை எதுவென்று மறுவிளக்கம் காண்பது” என்கிறார். இந்தச் சவால் எப்படிப்பட்டது என்பதிலிருந்துதான் இந்த யாத்திரை வெற்றிகரமானதா இல்லையா என்பதைக் கணிக்க வேண்டும்.

இந்த யாத்திரை இதுவரை சாதித்தது போதாது என்றே இருவரும் எழுதுகின்றனர். புதிய வகை அரசியல் களத்தை உருவாக்கும் புதிய முயற்சி இந்த யாத்திரை என்று ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், வெறுப்பரசியலுக்கு எதிரான சரியான சமிக்ஞை என்றாலும், ‘நம்பிக்கையளிக்கும் அரசியல் நிகழ்வு’ என்று கூற முடியாது என்கிறார் பிரதாப் மேத்தா. ‘காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் அளிப்பதிலும், நாட்டின் ஜனநாயக தேசியத்தை மீண்டும் அடையாளம் காண்பதிலும் இந்த யாத்திரை முழு அளவில் செயல்படவில்லை’ என்று சாடுகிறார் பல்சிகர்.

யாத்திரையில் கலந்துகொண்டவர்கள், இவ்விருவரின் கருத்துகளையும் ஏற்க முடியாது என்று சண்டைக்குப் போகலாம். இந்த யாத்திரை எந்த நிலையில் தொடங்கப்பட்டது என்பதை இருவருமே முழுதாக உணரவில்லை; யாத்திரை சாதித்திருக்கக்கூடும் என்று அவர்களாக கற்பனை செய்துவைத்திருப்பது, யாத்திரையை நடத்தியவர்களுக்கு எது சாத்தியம் என்பதை அவர்களால் தெரிந்துகொள்ள முடியாமல் போனதால் ஏற்பட்ட குழப்பம் என்பதே உண்மை. யாத்திரையெல்லாம் முடிந்த பிறகுதான் அதன் விளைவுகள் தெரிய ஆரம்பிக்கும் என்றுகூட வாதிடலாம், மேத்தாவே அதைக் கட்டுரையில் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், இவையெல்லாம் அர்த்தமற்ற விவாதங்கள், காரணம் யாத்திரை இன்னமும் முடிந்துவிடவில்லை. இறுதியான இடமான ஸ்ரீநகரையும் தாண்டி, ஒவ்வொரு இந்தியனின் சிந்தனைக்குள்ளும் யாத்திரை செல்ல வேண்டியிருக்கிறது. இந்த இடைக்கால விமர்சனங்களை, இனி போக வேண்டிய பயணத்துக்கான கலங்கரை விளக்காகவே கருத வேண்டும்.

இந்த யாத்திரையின் புவியியல், அரசியல், அறிவார்ந்த மனவியல் எல்லைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று பல்சிகர் கூறுவதை யாத்திரையில் பங்கேற்ற அனைவருமே வரவேற்பார்கள். இந்த யாத்திரை புதிய சித்தாந்த கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறதா, அரசியல் செயல்பாடுகளுக்கு வேகம் ஊட்டியிருக்கிறதா, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு மையப் புள்ளியாக உருவெடுத்திருக்கிறதா என்று மூன்று கேள்விகளைக் கேட்டு, யாத்திரையின் வெற்றிக்கான விடையை அதில் தேடச் சொல்கிறார்.

இந்த விமர்சனரீதியிலான கட்டுரைகள் யாத்திரை இதுவரை சாதித்தது என்ன என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வைத்திருக்கின்றன. அரசியல் சித்தாந்தரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் யாத்திரை சாதித்திருக்கிறது. புத்தாண்டுக்குப் பிறகு யாத்திரையை மீண்டும் தொடங்கும்போது இந்தக் கேள்விகள் தொடர்பாக கவனம் செலுத்தியாக வேண்டும்.

அதிகம் பேரை அடைய வேண்டும்

பாரத் ஜோடோ யாத்திரைக்கு எதிரான சித்தாந்த சவால் வலுவானது. அதனால்தான் ஏராளமான மக்கள் இயக்கங்களும் அமைப்புகளும் யாத்திரைக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளன. யாத்திரைக்குக் கிடைக்கும் எந்தவிதமான வெற்றியும் காங்கிரஸுக்கு மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளுக்குமே பலன் தரக்கூடியது. யாத்திரையின் பெரிய சாதனையே ஆர்எஸ்எஸ் – பாஜகவின் சித்தாந்த மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்பதுதான். பாஜகவை எதிர்க்கும் சில எதிர்க்கட்சிகள்கூட அதன் இந்துத்துவக் கொள்கையை அப்பட்டமாகப் பின்பற்ற நினைக்கின்றன என்னும்போதுதான் இதன் ஆபத்து எப்படிப்பட்டது என்று புரிகிறது.

அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட லட்சியங்களைக் காப்போம், மதச்சார்பின்மையை உறுதியுடன் வளர்ப்போம் என்று யாத்திரை தொடர்ந்து அறிவித்துவருகிறது. அரசிடம் சலுகை பெற்று முன்னேற்றம் காணும் முதலாளித்துவத்துக்கு எதிராக நீண்ட காலத்துக்குப் பிறகு ஓர் இளம் அரசியல் தலைவர், பொது மேடைகளில் கண்டித்துப் பேசிவருகிறார். இந்த யாத்திரை கூறவரும் செய்திகள் - மேடையில் நிகழ்த்தும் பொதுக் கூட்ட உரை, பேட்டி, அறிக்கைகள் ஆகியவற்றோடு முடிந்துவிடவில்லை. வார்த்தைகள் இல்லாமலே இது பேசுகிறது; இந்த யாத்திரையே ஒரு தவம், இந்த யாத்திரை உருவாக்கியிருக்கும் ஒற்றுமை பாஜகவின் சித்தாந்த மேலாதிக்கத்தை நசுக்கிவிட்டது. அன்பு, ஒற்றுமை என்ற வார்த்தைகளை இந்த யாத்திரை மீண்டும் மக்களிடையே பரப்பிவருகிறது. இந்தியா என்பது விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகளுக்கானது என்பதை வலியுறுத்திவருகிறது. வெறுப்பரசியலுக்கு எதிராகப் பேச இது வழியேற்படுத்தித் தந்திருக்கிறது. இது சாதாரண சாதனையல்ல.

இந்த உணர்வு தேசிய அளவில் கொண்டு செல்லப்பட நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் செய்தியைவிட செய்தியைச் சொல்கிறவர்தான் பெரிதாக கவனிக்கப்படுகிறார். அதுவும் அவசியம்தான் காரணம், செய்தி என்ன என்பதை மக்கள் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக செய்தியைச் சொல்கிறவரை மட்டம் தட்டியே பேசிவருகிறது பாஜக. ஆனால், செய்தியை சுருக்கென்று தைக்கும் விதத்திலும் மேலும் கோடிக்கணக்கானவர்களை எட்டும் விதத்திலும் சொல்வது எப்படி என்று யாத்திரை கண்டுபிடித்துவிட்டது. யாத்திரை எதற்காக, அது சொல்லும் செய்தி என்ன என்பது தொடர்பாக தெளிவில்லாமல் இல்லை. யாத்திரை குறித்து செய்யப்படும் பொய்ப் பிரச்சாரங்களால் அதன் தகவல்கள் சற்றே நிறம் மங்கித் தெரியலாம். பெரும்பாலான ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தாலும், செய்தியைத் துலக்கமாகவும், நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வழியை யாத்திரையே கண்டுபிடித்துவிட்டது.

அரசியல் களத்திலும் அபூர்வமான ஒன்றை யாத்திரை சாதித்துவிட்டது. ஆம், ஏராளமானோரை வீதிக்கு வரவழைத்துவிட்டது. மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக, சுதந்திரத்துக்காக வீதிக்கு வரும்போதுதான் குடியரசு உயிர் பிழைக்க முடியும். பாரத் ஜோடோ யாத்திரை அதைச் சாதிக்கிறது.

மோடியின் ஆயுதம் கூர் மழுங்கியது

இந்த யாத்திரையால் தேர்தலில் என்ன விளைவுகள் ஏற்படும், காங்கிரஸின் எதிர்காலம் என்னவாகும்?

மக்கள் சமூகத்தைச் சேர்ந்த யாத்ரிகர்களுக்கு அவை அவசியமான கேள்விகளாகக்கூட இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாட்டை நேசிக்கும் எந்தக் குடிமகனும் காங்கிரஸுக்கு என்ன ஆனால் எனக்கென்ன என்று அக்கறையில்லாமல் இருந்துவிட முடியாது. இப்போதைய நிலையில் நாட்டின் தலையெழுத்தே காங்கிரஸின் எதிர்காலத்துடன்தான் பின்னிப் பிணைந்திருக்கிறது. இந்த அம்சத்தில் யாத்திரை சாதித்துவிட்டது. காங்கிரஸ் ஆதரவாளர்களும் விசுவாசம் மிக்க தொண்டர்களும் கட்சி மீது மீண்டும் நம்பிக்கை வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துவிட்டார்கள். தொண்டர்களும் அதன் கீழ்நிலை நிர்வாகிகளும் கட்சி மீது நம்பிக்கை வைத்து ஒன்று திரள ஆரம்பித்துவிட்டார்கள். கட்சி தன்னுடைய தலைமை மீது நம்பிக்கை பெறத் தொடங்கிவிட்டது. ராகுல் காந்தி தன்னம்பிக்கையோடு பேசுகிறார், செயல்படுகிறார். இவையெல்லாம் காங்கிரஸின் உள் விவகாரம், தேர்தல் முடிவுகளை மாற்றிவிட இது போதவே போதாது. ஆனால், கட்சியை வலுப்படுத்த இதுதான் அவசியமான முதல் நடவடிக்கை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

தெற்கு மேலே: தேவை புதிய கற்பனை

யோகேந்திர யாதவ் 22 Sep 2022

காங்கிரஸுக்கு வெளியிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது யாத்திரை. பாஜகவுக்கு எதிரான, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளின் முகாம்களிலும் புதிய நண்பர்கள் தோன்றத் தொடங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் இயக்கங்களும் அமைப்புகளும் காங்கிரஸுடன் கூட்டுசேர்ந்து செயல்படத் தயாராகிவருகின்றன. அவர்களைத் தன் பக்கம் ஈர்ப்பதில் ராகுல் காந்தி வெற்றிபெற்றுள்ளார். இந்த யாத்திரை ராகுல் காந்தி குறித்து கட்டி எழுப்பப்பட்டிருந்த, பக்குவமில்லாதவர் என்ற பிம்பத்தை உடைத்துவிட்டது. மோடியின் மிகப் பெரிய ஆயுதம் கூர்மழுங்கிவிட்டது. இது காங்கிரஸுக்கு மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பெரிய உதவியாகும்.

உண்மைதான், இந்த யாத்திரையோடு எல்லாம் முடிந்துவிடவில்லை, இது தொடக்கம்தான். யாத்திரை வெற்றிகரமாக நடந்துவிட்டால் தேர்தலிலும் வெற்றி என்பது நிச்சயமில்லைதான். இனி அடுத்த கட்டம், பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகள் சந்தித்துப் பேசுவதுதான். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் சேருவது அவசியமில்லை, அதேசமயம் பொதுவான நோக்கம் அவசியம். மதில் மேல் இருக்கும் வாக்காளரை நம்பவைத்து நம் பக்கம் திருப்புவதெற்கெல்லாம் இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.

இந்த யாத்திரை, பொய்களாலும் வெறுப்பரசியலாலும் எழுப்பப்பட்ட சுவரில் துளையிட்டிருக்கிறது. இந்த சுவர்தான் நம்முடைய குடியரசை மூடி மறைக்க எழுப்பப்படுகிறது. அந்த ஓட்டை வழியாக இப்போது நம்பிக்கை ஒளிக்கீற்றும் சுகந்தமான காற்றும் நுழையத் தொடங்கியுள்ளன. யாத்திரைக்குப் பிறகுதான் முக்கியமான பணிகள் காத்திருக்கின்றன. பல்சிகர் எச்சரித்ததைப் போல இந்த நிகழ்வுடன் நாம் ஓய்ந்துவிடக் கூடாது, இது வெறும் யாத்திரையாக முடிந்துவிடாமல் பெரிய இயக்கமாக வளர வேண்டும். 

 

தொடர்புடைய கட்டுரைகள்

தெற்கு மேலே: தேவை புதிய கற்பனை
காங்கிரஸ் அழிய வேண்டும் என்று ஏன் எழுதினேன்?
வீதி வேடிக்கையா ராகுலின் பாத யாத்திரை?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Sridevi   2 years ago

கட்டுரை மொழிபெயர்ப்பு அருமை. இது எந்த இதழ் (அ) தினசரி நாளிதழில் வெளியானது என்பதை ‌‌சேர்த்து வெளியிட்டால் மூலக் கட்டுரையை படிக்க உதவியாக இருக்கும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

பொருளாதார சீர்திருத்தம்ராய்பரேலிகர்ப்ப காலம்திரைதிரைப்படக் கல்வியாளர்காதல் திருமணங்கள்இயற்கை வேளாண்மையிலும் பிற்போக்குத்தனம் இருக்கிறது:பிலஹரி ராகம்ஆளும் கட்சிஆப்பிள் இறக்குமதிபுதிய தாராளமயக் கொள்கைபோராட்டம் என்றாலே வன்முறை?சௌஹான்இரட்டைத் தலைமைமாநிலப் பெயர்ஒப்பந்தங்கள்டாஸ்மாக்சிஎஸ்டிஎஸ்இந்திரா என்ன நினைத்தார்?நாடாளுமன்ற ஜனநாயகம்மதமும் மொழியும் ஒன்றா?கிரிக்கெட் அரசியல்கடகம்அஜீத் தோவலின் ஆபத்தான கருத்துவிவசாயிகளின் வருமானம்மேதா பட்கர்பிராஜெக்ட் நிம்பஸ்நம்பிக்கையில்லாத் தீர்மானம்மியூசிக் அகாடமிராஜஸ்தான் முன்னேறுகிறது

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!