கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்டுவது எப்படி?

டி.கே.சிங்
06 Feb 2024, 5:00 am
0

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ நியாய்’ யாத்திரை தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் பல குற்றங்களைக் கண்டுபிடித்து தொடர்ந்து எழுதுகின்றனர். ‘அதைத் தொடங்கியிருக்கும் நேரல் சரியல்ல, அது செல்லும் பாதை சரியல்ல, அது வலியுறுத்தும் கொள்கை சரியல்ல’ என்று விமர்சனங்கள் பல. ‘மும்முரமாக போர் தொடங்கியிருக்கும் வேளையில் படையின் தலைமைத் தளபதி எப்படிக் களத்தைவிட்டு விலகி, சொந்தமாக எங்கோ செல்ல வேண்டும்? எதிரியின் தாக்குதலுக்கு வீரர்களால் பதில் தந்துவிட முடியுமா?’ என்றும் ஒருவர் கேட்டிருக்கிறார். 

‘அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு’, ‘அனைவருக்கும் பொதுவான சிவில் சட்ட அறிமுகம்’, ‘ஞானவாபி மசூதியில் இந்துக்களும் வழிபட மாவட்ட நீதிமன்றம் அனுமதி’ என்று அடுத்த மக்களவை பொதுத் தேர்தலுக்கான களம் சூடேறிக்கொண்டிருக்கும் வேளையில், ராகுல் தன்னுடைய அரசியல் விழுமியங்களுக்காக, கௌதம் அதானியைக் குறிவைத்துப் பேசிக்கொண்டிருந்தால் எப்படி என்றும் கேட்கின்றனர்.

அடுத்து வரும் மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல - 2029 பொதுத் தேர்தல் அல்லது அதற்கும் பிறகு வரவுள்ள தேர்தல் என்று எல்லாவற்றுக்குமான விவாதப் பொருள்களையும் எல்லைகளையும் பாஜக சிந்தித்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இதைப் பற்றி சிறிதும் சிந்தனையே இல்லாமல் எப்படிக் காங்கிரஸால் அரசியல் செய்ய முடியும் என்று காங்கிரஸின் நலன் விரும்புகிறவர்கள் கவலைப்படுகிறார்கள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினால், விரக்திதான் வார்த்தைகளாக வெடிக்கிறது. “எங்களால் என்ன செய்ய முடியும்? மோடியின் புகழ் உச்சத்தில் இருக்கிறது, பாஜகவின் பேரினவாதமே மக்களை இப்போது ஈர்த்துக்கொண்டிருக்கிறது, தங்களுக்கு எது நல்லது – எது கெட்டது என்று வாக்காளர்களுக்கும் தெரியவில்லை, எங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்கின்றனர்.

வாக்காளர்களுக்கு நல்லது கெட்டது தெரியவில்லை என்னும்போது ஒருவித இகழ்ச்சி குரலில் தொனிக்கிறது.

அரசியல் நடவடிக்கைகளுக்கு, ‘கால தாமதம்’ என்று ஏதுமில்லை, எனவே காங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்டும் செயல்களை இப்போதே தொடங்கலாம். அதற்குக் காங்கிரஸ் கட்சி – அதாவது ராகுல் காந்தி குறைந்தபட்சம் ஏழு கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்

ஆசிரியர் 29 Jan 2024

அந்த ‘ஏழு’ கடமைகள்

முதலாவதாக, மோடி தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறட்டும் என்று காத்திருக்கக் கூடாது. அது எப்போது நிகழும் 2029இலா, 2034இலா என்று எவராலும் கூற முடியாது. அப்படியே மோடி ஓய்வுபெற்றாலும் பாஜக உடனடியாக வலிமையிழந்து உடைந்து நொறுங்கிவிடாது. பிரசாந்த் கிஷோர் ஒரு பேட்டியில் என்னிடம் தெரிவித்தவாறு, கட்சியின் செல்வாக்கு தொடர மோடி நான்கு பெரிய தூண்களின் மீது பாஜகவை ஏற்றி நிறுத்தியிருக்கிறார். அவை முறையே இந்துத்துவம், தேசியவாதம், அரசின் மக்கள் நல நடவடிக்கைகளால் பயன்பெற்றவர்களின் தொடர் ஆதரவு, வற்றாத நிதி வசதி.

பிரசாந்த் கிஷோரின் கருத்துகளுடன் உடன்படாதவர்கள்கூட இவை உண்மை என்று ஒப்புக்கொள்வார்கள். மோடி ஓய்வுபெற்ற பிறகும்கூட கட்சி வலிமையாக இருக்க இந்த நான்கும் தொடர்ந்து உதவும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காங்கிரஸும் காந்திகளும்

இரண்டாவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் இனி கட்சிக்காக உழைக்க வேண்டும்; நேரு குடும்பத்தவருக்காக மட்டும் அல்ல. ராகுல் காந்திக்கு மக்களிடையே நல்ல பெயர் கிட்ட வேண்டும் என்பதிலேயே காலத்தையும் ஆற்றலையும் செலவிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி மட்டும்தான் வழிபடும் கடவுளாக, ஒரு தேவதையாக மக்களால் மதிக்கப்பட்டார். இந்திராவுக்கும் ராகுலுக்கும் இடைப்பட்ட காலத்தில் பாஜகவில் பலர் தலைவர்களாகினர், இன்னும் வந்துகொண்டிருக்கின்றனர். நான் வலியுறுத்த விரும்புவது எதையென்றால், காங்கிரஸ் கட்சியின் பலம் எது – பலவீனம் எது என்று அடையாளம் கண்டு தக்க பரிகார நடவடிக்கைகள் எடுங்கள், காந்தி குடும்பத்தவர் மீதே கவனத்தைக் குவிக்காதீர்கள் என்பதே ஆகும். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் குறிவைக்கும் 255 தொகுதிகள்

கௌசிக் தேகா 18 Jan 2024

காங்கிரஸும் கூட்டணியும்

மூன்றாவதாக, இந்தியா கூட்டணி உடைவதற்காக  காங்கிரஸ் வருந்த வேண்டியது இல்லை. காங்கிரஸ் கட்சியை வலுவிழக்கச் செய்துவிட்டு தாங்கள் எப்படி மேலும் பலம் பெறுவது என்றுதான் மாநிலக் கட்சிகள் பல உள்ளூர சிந்தித்துச் செயல்படுகின்றனர். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மால்டா வடக்கு, மால்டா தெற்கு மக்களவைத் தொகுதிகளை மட்டுமே விட்டுத்தர முடியும் என்கிறார்.

மம்தா சொல்லாமல் தவிர்ப்பது எதையென்றால் 1999 முதல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி தொடர்ந்து வெற்றி பெறும் பெஹ்ராம்பூர் தொகுதியைக் காங்கிரஸுக்குத் தர முடியாது என்பதைத்தான். இதே பாணியில்தான் இந்தியா கூட்டணியின் பிற கட்சிகளும் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகளை நடத்திவருகின்றன. 

ஆர்எஸ்எஸ் ஒரு பாடம்!

நாலாவதாக, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை (ஆர்எஸ்எஸ்) மோசமாக சித்தரித்து வசை பாடுவதை விட்டு, அது எப்படிச் செயல்படுகிறது என்று பார்த்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தனிநபரான மோடியையும் நிறுவன அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸையும் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்பதே ராகுலின் நோக்கம் என்றாலும், அதையே தன்னுடைய அரசியல் பிரச்சாரத்தின் மையக் கருவாகத் தொடர்வது புத்திசாலித்தனமான செயல் அல்ல. இப்படித் தொடர்ந்து தாக்கிப் பேசி, ஆர்எஸ்எஸ் என்றால் என்னவென்று தெரியாத ஊர்களில், தெரியாத மக்களுக்குக்கூட ஆர்வத்தை ஏற்படுத்தி அதற்கு விளம்பரம் தேடித்தரும் வேலையைத்தான் செய்கிறார்.

ஆர்எஸ்எஸ் இன்று என்ன செய்கிறது, நேற்று என்ன செய்தது என்று ராகுல் சொல்வதில் உண்மை இருக்கலாம், ஆனால் இப்படியே தொடர்ந்து பேசுவதால் என்ன பயன், காங்கிரஸுக்கு இதனால் ஆதரவு பெருகிவருகிறதா, வாக்குகள் குவிகின்றனவா? 

மக்களை எப்படி அணுகுவது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் எப்படி இரண்டறக் கலப்பது என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதன் சித்தாந்த போதனைகளைப் பின்பற்றத் தேவையில்லை. ஆர்எஸ்எஸ்ஸையே தொடர்ந்து வசை பாடிக்கொண்டிருக்காமல், அதைப் போன்ற அமைப்பைக் காங்கிரஸ் கட்சிக்குள் உருவாக்க வேண்டும், மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களை சமூக-கலாச்சார - பொருளாதார அம்சங்களில் முன்னேற்றும் சேவைகளில் ஈடுபட வேண்டும்.

இதைச் செய்வதற்கு முன்னால், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சேவா தள அமைப்பை முழுதாகக் கலைத்துவிட வேண்டும், இனி சீரமைக்க முடியாத அளவுக்கு அது செயலிழந்து கிடக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்

சமஸ் | Samas 12 Apr 2023

புதிய கருத்தியல் அவசியம்

ஐந்தாவதாக, அரசியல் லாபத்துக்கேற்ப செயல்படுவதும் சந்தர்ப்பவாதமும் கட்சியின் கருத்தியலாக இருக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கட்சியின் நிலை என்ன என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானிக்க வேண்டும். 

மக்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, தன்னுடைய தலைமையகத்துக்குக் கல்லெறி தொலைவில் ஷாஹீன்பாக் பகுதியில் எதிர்ப்பாளர்கள் திரண்டு சாலையை மறித்து தர்ணா செய்தபோது, ஒரு காந்தியும் அதில் போய் பங்கேற்கவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு முழுக்க முழுக்க அரசியல் செயல்பாடு என்று கண்டித்த காங்கிரஸ் தலைமை, ஒரு காங்கிரஸ்காரர்கூட அதில் பங்கேற்கக் கூடாது என்று அறிவிக்கும் துணிச்சலைப் பெறவில்லை.

இப்படிக் கொள்கைகளில் தெளிவில்லாமல் அலைபாய்வதால் இந்து, முஸ்லிம் என்று இரண்டு தரப்பினருக்குமே அது மகிழ்ச்சியைத் தருவதில்லை.

காங்கிரஸ் கட்சி எந்தவிதச் சமரசத்துக்கும் தயாராக இல்லாத மதச்சார்பற்ற கட்சியாகவும் கருத்து சுதந்திரத்தை எல்லா வகையிலும் தொடர்ந்து ஆதரிக்கும் இயக்கமாகவும் மாற வேண்டும்.

குஜராத்தில் மதக் கலவரக்காரர்களால் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பில்கிஸ் பானு வீட்டுக்கும், உதய்பூரில் இரண்டு முஸ்லிம்களால் கொல்லப்பட்ட தையல்காரர் கன்னையா லால் வீட்டுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சென்றிருக்க வேண்டும். இருவர் வீட்டுக்கும் போகாமல் தவிர்த்தது முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் அதிருப்தியைத்தான் தந்திருக்கும்.

காங்கிரஸ் கற்க வேண்டியவை

ஆறாவதாக, மக்களைக் கவரும் விதத்தில் எப்படிப் பேசுவது என்ற கலையைக் காங்கிரஸ் கற்க வேண்டும். வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவை அதிகரித்துவிட்டது, இந்த அரசு தீர்க்கவில்லை என்று மேடைக்கு மேடை பேசுவதால் பயனில்லை. நாடு சுதந்திரம் அடைந்தது முதலே இதைப் பல்வேறு மேடைகளில் கேட்டுக்கேட்டு மக்களுடைய காதுகள் புளித்துவிட்டன.

மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க தங்களிடம் உள்ள மாற்று திட்டங்கள் என்ன, புதிய நிர்வாகக் கொள்கைகள் என்ன என்று இனி விளக்க வேண்டும். வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை தருவோம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் போடப்படும் என்பதெல்லாம் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்ல.

மோடி அரசு இயற்றியுள்ள புதிய தண்டனைச் சட்டங்கள் கொடூரமானவை, கடுமையானவை என்று மட்டுமே பேசினால் போதாது. இது மக்களுடைய உரிமைகளைப் பறித்துவிடும், நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது என்பதையெல்லாம் மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள். மாறாக அந்தச் சட்டத்தின் உண்மைத் தன்மையைப் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க வேண்டும்.

முன்பெல்லாம் ஒரு குற்ற வழக்கில் காவல் துறையினர் கைதுசெய்தால் 15 நாள்கள் மட்டுமே காவலில் வைத்திருப்பார்கள், புதிய சட்டப்படி இந்தக் காலம் 60 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை நீடிக்கிறது என்று பொட்டில் அறைந்தார்போலப் பேச வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்

சமஸ் | Samas 01 Mar 2023

நாட்டின் அடையாளச் சின்னமான நிறுவனங்களில் அரசின் தலையீடு அதிகரித்துவிட்டது, அவற்றையெல்லாம் தங்களுடைய அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்து கட்டுப்படுத்த முயல்கிறது என்று குற்றஞ்சாட்டுகிறார் ராகுல் காந்தி. இந்திய நிர்வாகவியல் கழகங்களின் (ஐஐஎம்) தலைமை நிர்வாக வாரியமும் அதன் இயக்குநர்களும் அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் செயல்பட்டாக வேண்டும் என்று வலியுறுத்தும் ‘இந்திய மேலாண்மைக் கழக (திருத்த) மசோதா, 2023’ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அவர் ஏதும் பேசவுமில்லை, எதிர்க்கவுமில்லை.

நாட்டை பாதிக்கும் உண்மையான பிரச்சினைகள் குறித்துப் பேசினால்கூட மக்கள் ஏன் அதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று காங்கிரஸ் கட்சி தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

மக்களுடைய மனங்களில் பதியும் வண்ணம், அவர்கள் நம்பும் வகையில் எப்படிப் பேச வேண்டும் என்பதில் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அயோத்தி: தேசத்தின் சரிவு

ஆசிரியர் 22 Jan 2024

ஒரு கேள்வி!

ஏழாவதாக, அரசியலையும் தேர்தலையும் ‘கருத்துகள் மோதும் களம்’ என்று ராகுல் காந்தி சொல்வதைப் போல மாற்றிவிடாதீர்கள். நாட்டை எப்படி வளப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை ராகுலிடம் இருக்கலாம், ஆனால் அரசியல் அதிகாரம் இல்லாமல் அதை நிறைவேற்ற முடியாது. சித்தாந்தத்துக்கும் அரசியல் அதிகாரத்துக்கும் தொடர்பில்லை என்று அவர் தொடர்ந்து பேசிவந்தால் வாக்காளர்களுக்குச் சோர்வு தட்டிவிடும். தாங்கள் அளிக்கும் வாக்குகள் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் தங்களுடைய வாழ்க்கைத் தரம் எப்படி மேம்படும் என்று பார்க்கவே மக்கள் விழைகிறார்கள்.

எல்லோருடைய மனங்களிலும் இப்போது ஒரு கேள்வி பெரிதாகிக்கொண்டேவருகிறது: அமைப்புரீதியாக கட்சிக்குப் புத்துயிர் அளிக்காமல், பாஜகவை எப்படிக் காங்கிரஸால் வீழ்த்த முடியும் என்பதே அது. இந்தக் கேள்விக்கு விடை காண்பது எளிதல்ல. மிகப் பெரிய மக்கள் இயக்கத்தால் உருவான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு பலம் வாய்ந்த தொண்டர்கள் அமைப்பு இருந்ததில்லை.

பாஜகவுக்கு மாற்றான தேசியக் கட்சியாக வளர வேண்டும் என்றால் நம்பிக்கைக்குரிய எதிர்க்கட்சியாக அது உருவெடுப்பது முக்கியம்.

காங்கிரஸ் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அதன் தலைமை தொடங்கி வாக்குச்சாவடி குழு வரையிலான அமைப்பை உருவாக்கிவிடலாம். காங்கிரஸ் எந்தக் கொள்கைகளை ஆதரிக்கிறது, மக்கள் ஏன் அதற்கு வாக்களிக்க வேண்டும் என்பது தெளிவாவது முக்கியம். இதைச் சொன்னால், ‘கோழி முதலா? - முட்டை முதலா?’ என்ற வாக்குவாதம்போலத் தோன்றும், நிச்சயமாக அப்படியல்ல.

© த பிரின்ட்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

காங்கிரஸ் குறிவைக்கும் 255 தொகுதிகள்
2024 தேர்தலுக்கு காங்கிரஸ் எப்படித் தயாராகிறது?
தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்
எப்படி இருக்க வேண்டும் காங்கிரஸின் சமூக நீதிப் பாதை?
சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்
ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்
தமிழகத்திலிருந்து ராகுலுக்கு சில பாடங்கள்
காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு!
அயோத்தி: தேசத்தின் சரிவு
மோடியை வீழ்த்த வரலாற்றிலிருந்து ஒரு பாடம்
யதேச்சதிகாரத்தின் பிடியில் நாடாளுமன்றம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

2

1





இந்தியப் பெரியவர்கள்தேவை கூட்டாட்சிக்காகப் பணியாற்றும் ஓர் ஒன்றியப் பிசர்க்கரைவாக்காளர் பட்டியல்ஆண்-பெண் உறவுதமிழ்த்தன்மைமராத்திய பேரரசின் பங்களிப்புபோலி அறிவியல்மோடியின் பரிவாரம்ஒழுக்கவாதியாக ஒளிர்ந்த ஐன்ஸ்டீன்டிசம்பர் 6உணவு நெருக்கடிஇரு வல்லரசு துருவங்கள்ஆண் பெண் உறவு அராத்துமனப்பான்மைஇருவேறு உலகம்எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்இடஒதுக்கீடுவிருதுபிசியோதெரபிமா.சுப்பிரமணியம்முதியவர்கள்நாவல்விசிலூதிகளுக்கான பாதுகாப்பு என்னதேர்வுஊழல்காரர்அன்ஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்நெடுங்கவிதைமோடியின் அமெரிக்கப் பயணத்தின் பின்விளைவுகள்பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!