கட்டுரை, அரசியல், சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு

அறிவுப் பாரம்பரியத்தை இழந்துவிட்டதா ஜனசக்தி?

எஸ்.வி.ராஜதுரை
06 Oct 2022, 5:00 am
0

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் கோர்பசெவ் இறந்த பிறகு அவரைப் பற்றிய பல்வேறு மதிப்பீடுகளை உலகின் பல்வேறு தரப்பினரும் விவாதித்துவருகின்றனர். நான் எழுதிய இரு கட்டுரைகள் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாயின. கட்டுரைகளுக்கான அளவு தொடர்பாக ‘அருஞ்சொல்’ ஆசிரியர் குழு கொண்டுள்ள நியதிகளுக்குட்பட்டு, சிறிதளவு குறைக்கப்பட்ட வகையில் அவை வெளியாகின. எனினும், அக்கட்டுரையில் நான் முன்வைத்த முக்கியக் கருத்துகள் ஏதும் சிதைக்கப்படவில்லை. 

இந்தக் கட்டுரைகள் வெளியானபோது அவை குறித்து எதிர்வினையாற்றியவர்களில் என் அன்புக்கும் மதிப்புக்குரிய ஒரு தோழரும் இருந்தார். அவரிடம் நான் சொன்னேன், “கோர்பசெவ், அவரது சீர்திருத்தங்கள் தொடர்பில் ஏற்கெனவே நான் ‘ரஷ்யப் புரட்சி: இலக்கிய சாட்சியம்’ நூலின் இரண்டாம் பதிப்பின் கடைசி இரண்டு அத்தியாங்களில் விரிவாக எழுதியிருக்கிறேன். இந்தச் சின்ன கட்டுரைகளில் அந்தக் கருத்துகள் முழுவதையும் பிரதிபலிப்பது சாத்தியம் இல்லை. எனவே, அந்த நூலை நீங்கள் வாசிக்க வேண்டும்!” 

ஆனால், தான் பயணத்தில் இருந்தாலும், என் நூலை மட்டுமின்றி வேறு நூலையும் படிப்பதற்கான போதிய அவகாசம் இல்லாததாலும், அவரால் தொடர்ந்து என் கட்டுரை மீதான கருத்துகளைக் கூற முடியாத நிலையில் இருப்பதாகச் சொல்லிவிட்டார். 

தமிழில் இடதுசாரி வட்டாரங்களில் கோர்பசெவ் பற்றிய விமர்சனங்கள் என்று எதையும் பரவலாகப் பார்க்க முடியவில்லை. இடதுசாரி வட்டாரங்களில் சுற்றிக்கொண்டிருந்த ஒரே கட்டுரை, பழைய சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் இரங்கத்தக்க எச்சமாகவும், ரஷ்யக் கூட்டாட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ள ஜுகனோவ் எழுதிய ஒரு கட்டுரைதான். யார் இந்த ஜுகனோவ் என்றால், புடினின் ரஷ்யப் பெருந்தேசியத்தையும், புடின் முன்னெடுக்கும் உக்ரைன் போரை முழுமையாக ஆதரிப்பவர்; ‘எல்ஜிபிடி’ (LGBT)  உரிமைகளைக் கடுமையாக எதிர்ப்பவர் எனும் நிலைப்பாடுகள் அவரைப் பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்கு அவரைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கப் போதுமானது. 

மேலே நான் குறிப்பிட்டிருந்த தோழரும் எனக்கு இந்தக் கட்டுரையை அனுப்பியிருந்தார். அந்தக் கட்டுரையில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்டி, கூடவே அதில் இருந்த சில முக்கியமான விவரப் பிழைகளையும் பொய்களையும் ‘அருஞ்சொல்’ கட்டுரை ஒன்றில் எடுத்துக்காட்டினேன்.

ஜனசக்தி கொடுத்த அதிர்ச்சி 

இந்த நிலையில்தான், ‘ஜனசக்தி’ இதழில் (28.9.2022 பதிப்பு) வெளிவந்த ‘கோர்பசெவ்: மேற்குலகின் மீட்பர் - உள்நாட்டில் தோற்றுப் போனவர்’ கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. ஏஐடியுசியின் தேசியச் செயலாளர் வகிதா, ‘பாட்டாளி படிப்பு வட்டம்’ என்ற அமைப்பின் கூட்டத்தில் 10.9.2022 அன்று ஆற்றிய உரையின் சுருக்கமே இந்தக் கட்டுரை என்று தெரிகிறது.

கோர்பசெவ் தொடர்பான பல்வேறு மதிப்பீடுகளில் இதுவுமொன்று என்கிற வகையில், அந்த மதிப்பீட்டைச் செய்யும் வகிதாவின் கருத்துச் சுதந்திரத்தை நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனால், அந்த உரையில் அவர் சொல்லியுள்ள அப்பட்டமான விவரப் பிழைகளையும் சில அபத்தமான கருத்துகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு ‘ஜனசக்தி’. அதில் இவ்வளவு மோசமான ஒரு கட்டுரை ஒன்று வெளிவந்ததும், அதற்கு வேறு யாரும் எதிர்வினை ஆற்றாததும் இன்றைய அறிவுச்சூழல் எவ்வளவு மோசமாகி இருக்கிறது என்பதற்கு உதாரணம் ஆகும்.

இனி அந்தக் கட்டுரையின் தவறுகள், முரண்பாடுகளைக் காண்போம். 

மையப்படுத்தப்பட்ட பொருளாதாரமா லெனினுடையது?

சோவியத் ஒன்றியத்தில் லெனின் அமலாக்கி இருந்த புதிய பொருளாதாரக் கொள்கையே 1972 வரை நடைமுறையில் இருந்தது; மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம்தான் அது என்று வகிதா கூறுகிறார். பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட குடியரசுகள் இணைந்த சோவியத் ஒன்றியம் 1922இல்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன், ரஷ்யாவில் மட்டுமே பாட்டாளி வர்க்கப் புரட்சியின் காரணமாக புரட்சிகர அரசாங்கம் 1917 நவம்பரில் நிறுவப்பட்டிருந்தது. உடனடியாக உள்நாட்டுப் போர் ஒன்றை எதிர்ப் புரட்சியாளர்கள் வழி ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போர் முடிவடைந்த பிறகு நசிவுக்குள்ளாகியிருந்த பொருளாதரத்தை வலிமைமிக்கதாக மாற்றுவதற்கு 1921இல் லெனின் கொண்டுவந்ததே ‘புதிய பொருளாதாரக் கொள்கை’. 

அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் தடையற்ற சந்தையை அனுமதிக்கும் அதேவேளை நாட்டுடைமையாக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களை லாபகரமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது இந்தக் கொள்கை. இதைத் தற்காலிகான ஒன்றாகவே லெனின் கருதினார். உண்மையில் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம் என்பது லெனினுக்குப் பிறகு, அப்போது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, 1928-32 காலகட்டத்தில் நடைமுறைப்பபடுத்தப்பட்ட முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்துதான் ஆரம்பித்தது. 

சோவியத் பொருளாதாரத்தை வளர்ப்பதைப் பொறுத்தவரைக் கட்சிக்குள் பல கருத்துகள் நிலவின. அவை யாவும் சோஷலிஸ குறிக்கோளை அடைவதற்கான பல்வேறு பரிந்துரைகளே தவிர, அக்குறிக்கோளுக்கு எதிரானவை அல்ல. ஆனால், கனரகத் தொழில்களுக்கு முதன்மை கொடுப்பதும், பலவந்தமான முறையில் கூட்டுப் பண்ணைகளை உருவாக்குவதும், மக்களுக்குக்த் தேவையான சாதாரணமான நுகர்பொருள்களின் உற்பத்தியைப் புறக்கணித்தலுமாகிய அந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் பலகீனங்களுங்களுக்கான பழி முழுவதும் கட்சிக்குள் ஸ்டாலினின் கொள்கைளை விமர்சித்தவர்கள் மீது சுமத்தப்பட்டது. அன்று முதலே பழம் போல்ஷ்விக் தலைவர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்துவதும், அவர்கள் கொல்லப்படுவதுமான போக்கு தொடங்கியது.

லெனின் விரும்பிய கூட்டுறவுப் பண்ணைகளுக்கும் ஸ்டாலின் காலத்தில் உருவாக்கப்பட்ட கூட்டுப் பணைகளைக்கும் பெரும் வேறுபாடு இருந்தது.

மதுவை ஊக்குவித்தார்களா கம்யூனிஸ்ட்டுகள்?

வரலாற்று விவரங்களைக் காலவரிசைப்படி தொகுத்துக் கூறத் தவறியதற்கு வகிதா காரணமாஅல்லது அவரது உரையைத் தொகுத்து ‘ஜனசக்தி’யில் வெளியிடச் செய்தவர் காரணமா என்பது நமக்குத் தெரியவில்லை. 

கோர்பசெவ் ‘பெரெஸ்த்ரெய்கா’, ‘கிளாஸ்னோஸ்ட்’ ஆகிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த பிறகுதான் அவரால் மது ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதே அன்றி அச்சீர்திருத்தங்களுக்கு முன்பு அல்ல.

ஜார் அரசாட்சி ரஷ்யாவிலிருந்து சோவியத் ஒன்றியத்தின் தகர்வு வரை வோட்காவினால், மித மிஞ்சிய குடிப்பழக்கத்தால் எண்ணற்ற குற்றங்கள் அங்கே நிகழ்ந்துவந்திருக்கின்றன. கோர்பசெவுக்கு முன்பே சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் ‘மது விலக்குத் திட்டங்கள்’ நடைமுறைப்படுத்தப்பட்டுத் தோல்வி அடைந்திருக்கின்றன (1858, 1972, 1984). மேலும், ரஷ்ய புரட்சியின்போதும், உள்நாட்டுப் போரின்போதும், சோவியத் ஒன்றியம் உருவான பிறகும் 1935 வரையிலும் கட்டாய மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு தோல்வி அடைந்திருக்கிறது.

தன் உரையில் “மது விற்பனையில் அரசுக்கு நல்ல வருவாய் வந்துகொண்டிருந்தது. மது மூலம் கிடைத்துவந்த கணிசமான வருவாய் நிறுத்தப்பட்டதால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடைந்தது. இவ்வாறாக கோர்பசெவ் கொண்டுவந்த பெரிஸ்த்ரோய்கா மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியது” என்று கூறும் வகிதா, கோர்பசெவை மட்டும் அல்லது  லெனினையும் இழிவுபடுத்தியுள்ளார். 

மார்க்ஸ் லாரென்ஸ்செ ஷார்ட் எழுதியுள்ள ‘வோட்கா பாலிடிக்ஸ்’ (Vodka Politics - Oxford, 2014) நூலில் வோட்கா தொடர்பில் லெனின் கூறியவை தொகுத்துக் கூறபட்டுள்ள விஷயங்களை அவர் வாசிக்க வேண்டும். சில எடுத்துகாட்டுகள்: 

1. 1905ஆம் ஆண்டு முதலே லெனின் வோட்காவுக்கு எதிரான போர்க்கொடியைத் தூக்கினார். அப்பாவி மக்களின் மனங்களைக் குழப்புதற்காக எதிர்ப்புரட்சி கறுப்பு நூற்றுவர் வோட்காவை அவர்களுக்குக் கொடுக்கின்றனர் என்று எழுதியுள்ளார். (லெனின் தொகை நூல் 10, முதல் கட்டுரை) 

2. புரட்சிக்கு முன்பு லெனின் கூறினார்; “வோட்காவைவிட மரணமே விரும்பத்தக்கது.” 

3. புரட்சிக்குப் பிறகு, லெனின் தலைமையிலிருந்த அமைச்சரவை மது தயாரிக்கும் தொழிற்சாலைகள், சேமித்துவைக்கப்பட்டிருந்த மது ஆகியவற்றை நாட்டுடைமயாக்கியதுடன், எவ்வகையிலோ, எந்த அளவிலோ வோட்கா தயாரிப்பவர்கள் ஐந்தாண்டுக் காலம் சைபீரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

4. மதுவிலக்குக் கொள்கையில் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் கறாராக இருந்த லெனின், தன் இறுதிக் காலத்தில் கூறினார்: “கிராமப்புற விவசாயி விக்கிரகங்களையோ மதுவையோ கேட்பானாகில் - அவை  அவனுக்காக நிச்சயம் தயாரிக்கப்படாது. அவற்றைக் கொடுப்பதன் பொருள், நிச்சயமாக புரட்சியிலிருந்து பின்வாங்குதலாகும். அது அவனை பின்னோக்கி இழுத்துச் செல்லும் சீரழிவுதான். இவ்வகை சலுகைகளை நாம் தர மாட்டோம். இத்தகைய சலுகையின் மூலம் நமக்குத் தற்காலிகமான அனுகூலம் ஏதேனும் கிடைக்குமானால், அதைத் தியாகம் செய்வோம்.” 

உண்மை இப்படிதான் இருந்திருக்கிறது. லெனின் காலத்திலிருந்தே கம்யூனிஸ்ட்டுகள் மதுவுக்கு எதிராகப் போராடிவந்திருக்கின்றனர். வகிதாவைப் போல, ‘மது விற்பனை அரசுக்கு வருமானம் தருகிறாதா இல்லையா’ என்பதை மட்டும அவர்கள் அளவுகோலாகக் கொண்டிருக்கவில்லை. லெனின் காலத்துக்குத் தொடர் முயற்சிகள்தான் கோர்பசெவ் காலத்திலும் நடந்தது.   

கோர்பசேவின் மதுவிலக்குக் கொள்கை தோல்வியடைந்தது. அரசுக்கான வருவாய் குறைந்தது. கள்ளச்சாராய உற்பத்தி பெருகியது. இதெல்லாம் உண்மைதான். சோவியத் ஒன்றியத்தில் பெரும்பாலோர் (வோட்கா) குடிமக்களாக இருந்தவரை மதுவிலக்குத் திட்டங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துவந்தன. எனவே, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அல்லது குடிப் பழக்கத்தைத் தணிக்க பல்வேறு வகையான சீர்திருத்தங்கள், பண்பாட்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவதைவிட்டு மது விற்பனை சோவியத் அரசுக்கு வருமானம் தந்துவந்தது, எனவே அதை ஒழித்தது தவறு என்பது கம்யூனிஸ்ட் அறமா?

ஜனநாயக முன்னகர்வு பிழையானதா?

வகிதா சொல்கிறார்: “வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் கிளாஸ்நாஸ்டை கோர்பசெவ் கொண்டுவந்தார். தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அதனைப் பயன்படுத்திக்கொண்டார். அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள், கட்சியின் மத்தியக் குழுவில் இருந்த வயதானவர்களாலும், கட்சியின் முந்தைய கொள்கைகளை வலியுறுத்தியவர்களாலும் எதிர்க்கப்பட்டன. இதனை எதிர்கொள்ள மக்கள் சபையின் பேராயம் (Congress of People’s Deputies) என்ற அமைப்பை கோர்பசெவ் உருவாக்கினார். இது உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டிருந்தது. கட்சியைவிட இந்த அமைப்பை அதிகாரம் மிக்கதாக கோர்பசேவ் மாற்றினார்.”

இது எந்த அளவுக்கு உண்மை?

கட்சித் தலைமையால் மேலிருந்து தேர்ந்தெடுக்கப்படவர்களை மட்டுமே - அதுவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களை மட்டுமே - வேட்பாளர்களாக நிறுத்திவந்த முறைக்கு மாறாக, மக்களால்  நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே நாட்டின்  உயரதிகார நிலைக்கு வர வேண்டும் என்ற கோர்பசெவின் முடிவு கொள்கை அளவிலாவது சரியானது அல்லவா?  பாரீஸ் கம்யூனில் அப்படித்தானே நடந்தது? கேள்வி என்னவென்றால், இந்த விஷயத்தை ஏன் ஆக்கபூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சியால் அணுக முடியவில்லை?  

அடுத்து வகிதா சொல்கிறார், “மேற்குலக நாடுகளில் இருந்து அங்கு நுழைந்த ஊடகங்கள் பெருமளவில் பிரச்சாரம் செய்து மக்களைக் கிளப்பிவிட்டனர். இதற்கு கோர்பசெவ் உருவாக்கி இருந்த கிளாஸ்ட்நாஸ்ட் காரணமாக இருந்தது.”

கோர்பசெவ் ஆட்சிக்கு வரும் முன்னரே மேற்கு நாட்டு ஊடகங்கள் - குறிப்பாக வானொலிகள், தொலைக்காட்சிகள் - ஆகியவற்றை சோவியத் மக்கள் பார்க்கும் வாய்ப்பை நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி சாத்தியமாக்கி இருந்தது. 

மேற்கு நாடுகளில் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பான வாழ்க்கை இருந்தது, கருத்துச் சுதந்திரம் இருந்தது என்று குறிப்பிட்டு, ‘அது ஒரு பொன்னுலகம்’ எனும் மாயத் தோற்றத்தை அந்த ஊடகங்கள் உருவாக்கிவந்தது உண்மைதான். முதலாளிய சமுதாயம் ஒன்றில் வாழ்ந்துபெற்ற அனுபவங்கள் ஏதுமில்லாதாத சோவியத் ஒன்றியத்தின் இளம் தலைமுறையினர் அந்தப் பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டனர் என்பதும் உண்மைதான். 

ஆனால், சோவியத் ஒன்றியத்தில் தங்களுக்குக் கிட்டாதவை, முதலாளிய மேற்கு நாடுகளில் இருப்பதாக அவர்கள் நினைத்தற்குக் காரணம் என்ன? அடுத்தடுத்தத் தலைமுறையினரிடம் சோஷலிஸ உணர்வை வளர்க்காமலிருந்தற்கு கோர்பசெவுக்கு முன்பிருந்த தலைவர்களும் கட்சியும் காரணமாக இருக்கவில்லையா? “(சோவியத் ஒன்றியத்தின்) நெடிய பரம்பரியத்தை மக்கள் மறந்தார்கள்” என்று மக்கள் மீது அடுத்த குண்டை ஏவுகிறார் வகிதா. அப்படியானால், சோவியத் தகர்வுக்கு கோர்பசெவுக்கு சோவியத் மக்களும் உதவினார்கள் என்பதுதானே பொருள்?

எல்ட்சின் எப்படி செல்வாக்கு பெற்றார்?

அடுத்தது, எல்ட்சின் தொடர்பான வகிதாவின் பார்வை.

“மாஸ்கோ நகரக் குழுவிலிருந்து 1986இல் எல்ட்சினை நீக்கினார்கள். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் என்ற வகையில், மக்கள் சபையின் பேராயத்திற்கு (Congress of People’s Deputies) அவர் வருகிறார்” என்று வகிதா கூறுகிறார். மக்கள் அவரை விரும்பித் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? இதையல்லவா வகிதா விளக்க வேண்டும்?

“இந்நிலையில், 1991இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தைக் குறைக்க ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினார். அதோடு சோவியத் தலைவரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கலாமா என்ற கருத்துக் கணிப்பையும், கோர்பசெவ் நடத்தினார். அப்படி அதிகாரத்திற்கு வந்தவர்தான் போரிஸ் எல்ட்சின். இதனை எதிர்த்து 1991 ஆகஸ்ட்டில் ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிபி, ராணுவம், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்து ஒரு கலகத்தை (Coup) நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு நடந்த கருத்துக்கணிப்பில் மீண்டும் எல்ட்சின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று குறிப்பிடுகிறார்.

தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று கருதிக்கொள்பவர் சொல்வதைத் தெளிவாகவும் துல்லியமாகவும் சொல்ல வேண்டும். ஆனால், வகிதாவின் தெளிவற்ற சொற்கள், எல்ட்ஸின் சோவியத் யூனியனின் தலைவரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. உண்மையில் எல்ட்சின் சோவியத் ஒன்றியத்தின் தலைவராக அல்ல; அதன் ஓர் அங்கமாக இருந்ததும், மற்ற குடியரசுகளைவிடப் பெரியதும் வலுவானதுமான ரஷ்ய சோஷலிஸ சோவியத் குடியரசின் தலைவராகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, “ரஷ்ய மக்கள் ஏன் சோவியத்துகளைப் புறக்கணித்தனர் அல்லது எல்ட்சினை ஏற்றனர்?”

தமிழக கம்யூனிஸ்ட்டுகள் விவாதிக்க வேண்டும் 

வகிதா போன்றவர்கள் வரலாற்றையும் அரசியலையும் முறையாகப் பயின்றாக வேண்டும் என்ற புரிதலைத்தான் இந்தக் கட்டுரை நமக்குத் தருகிறது. அது மட்டுமல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலமாக உள்ள, 60-70 ஆண்டுகளுக்கு முன்பிருந்த புளித்துபோன, வறட்டுச் சூத்திரங்களை இன்றுவரை உச்சாடனம் செய்துவருகின்ற சிலர், புதிய மார்க்ஸிய கருத்துகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதுடன், மற்றவர்களின் கருத்துகளைத் திரித்துக்கூறும் கருத்துகளையும் கட்டுரைகளையும் அண்மைக் காலமாக ‘ஜனசக்தி’யில் வெளியிட்டுவருகிறார்கள்.

1956ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களிலிருந்து ஸ்டாலின் படத்தை அகற்ற அன்றைய தலைமை  முடிவு செய்து உத்தரவிட்டதைக்கூட அறியாத பலர் இன்று அக்கட்சியில் இருக்கிறார்கள். விளைவாகவே பல அலுவலகங்களில் இன்றும் ஸ்டாலின் படத்தைப் பார்க்க முடிவதாகத் தோழர்கள் சொல்கிறார்கள்.

அதனுடைய தொடர்ச்சியாகத்தான் கோர்பசெவ் மீதான இத்தகு பார்வைகளையும், பல தவறான கருத்துகளையும் அடங்கிய கட்டுரை கட்சியின் அதிகாரபூர்வ இதழிலேயே வெளிவருவதைக் காண முடிகிறது.

உண்மையில், கோர்பசெவின் ‘கிளாஸ்நோஸ்ட்’, பெரெய்ஸ்த்ரொய்கா’ சீர்திருத்தங்களை உற்சாகத்துடன் வரவேற்ற கட்சிகளில் ஒன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கோர்பசெவ் எழுதிய ‘பெரெய்ஸ்த்ரொய்கா’ நூலை தமிழாக்கம் செய்து வெளியிட வைத்தது அக்கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை. இந்த விஷயங்கள் எல்லாம் இன்று எத்தனை பேருக்குத் தெரியும்?

கோர்பசெவின் சீர்திருத்த முயற்சிகள் தொடக்கத்தில் உலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கான சோஷலிஸ்ட்டுகளால் வரவேற்கப்பட்டன (அவர்களில் நானும் ஒருவன்). அப்போது அவர்களுக்கு அவை தடம்புரண்டு செல்லும் என்பது தெரிந்திருக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தின் தகர்வுக்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றிய ஆக்கபூர்வமான விவாதங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் - குறிப்பாக - அதன் தமிழகக் கிளையில் - நடந்திருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. இப்போதேனும் அது நடக்க வேண்டும்.

ஆனால், இப்படி அல்ல. 

ஜீவா, கே.பாலதண்டாயுதம், பி.சீனிவாச ராவ், ஆர்.கே.கண்ணன், நா.வானமாமலை, தா.பாண்டியன் போன்ற ஜாம்பவான்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ‘ஜனசக்தி’யின் அறிவுப் பாரம்பரியம் இப்படிச் சீரழிந்துபோனதற்காக வருத்தப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை!

தொடர்புடைய கட்டுரைகள் 

கோர்பசெவ்: மாபெரும் அவல நாயகர்
கோர்பசெவ்: வரலாற்றில் ஓர் அவல நாயகர்
கோர்பசெவ் கட்டுரையும் சில தோழர்களின் எதிர்வினையும்
கோர்பசெவ் ஆண்டுகள்
கோர்பசெவ்: கலைந்த கனவா, விழித்தெழுதலின் அவசியமா?
கோர்பசெவ், மார்க்கேஸ் மற்றும் ஜெயகாந்தன்
கோர்பசெவை எப்படி மதிப்பிடுவது?
கோர்பசெவ் கடைசிக் கட்டுரை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். மார்க்ஸிய - பெரியாரிய அறிஞர். தொடர்புக்கு: sagumano@gmail.com


2

1





பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

இந்தியன் எக்ஸ்பிரஸ்பழைய ஓய்வூதிய திட்டம்ஒரே நாடுஎம்.ஜி.ராமச்சந்திரன்ஆய்வுக் கட்டுரைகண்களைத் திறந்த கண்காட்சிகள்மோடிக்கு இது நல்ல எதிர்வினை கெலாட்மக்கள்தொகைகாய்அமித் ஷாவின் கேள்விகள்பிரபாகரன் மீதான மையல்தனிப் பெரும்பான்மைடி.ஜி.பரத்வாஜ்புலப்பெயர்வுஇரு பெரும் முழக்கங்கள்சமமற்ற பிரதிநிதித்துவம்கோவிட் நோய் வரிசோஷலிஸ்ட் தலைவர்அரசு வேலைஇலக்கணங்கள்சமஸ் - காந்திபிஜு பட்நாயக்மலராத முட்கள்இன அழிப்பு அருங்காட்சியகம்கட்டுரைகள்எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்அசோகர்பெண்களுக்கான பிரதிநிதித்துவம் சமூகநீதியோடு அமைட்டுமதராஸ் ஓட்டல்உதயமாகட்டும் கூட்டாட்சி இந்தியா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!