கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

பாஜகவின் கவலைகளைப் பெருக்கும் ஆறாவது கட்டம்

யோகேந்திர யாதவ் ஸ்ரேயஸ் சர்தேசாய் ராகுல் சாஸ்த்ரி
29 May 2024, 5:00 am
0

க்களவை பொதுத் தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே 25) நடக்கிறது. பஞ்சாப், ஹரியாணா, டெல்லி உள்ளடங்கிய இதில் பாஜகவுக்குக் கவலைகள் அதிகரிக்கத்தான் வாய்ப்புகள் உள்ளன. 

உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல், பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஷா மாநிலங்களின் 40 தொகுதிகளும்கூட இதில் அடங்கும். ஹரியாணாவின் 10, டெல்லியின் 7 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. மூன்றாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்திருக்க வேண்டிய காஷ்மீர் பகுதியின் அனந்தநாக் – ரஜௌரியும் இதில் சேர்ந்துள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறும் 58 தொகுதிகளில் 2019 பொதுத் தேர்தலில் பாஜக மட்டுமே 40 தொகுதிகளையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 5 தொகுதிகளையும் பெற்றன. காங்கிரஸால் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியவில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் இப்போதுள்ள பிற கட்சிகள் 5 தொகுதிகளை வென்றன. பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம் தலா 4 தொகுதிகளில் வென்றன. 

பிறகு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் ‘இந்தியா’ கூட்டணியில் இப்போதுள்ள கட்சிகள் 22 மக்களவைத் தொகுதிகளை வெல்லும் அளவுக்கு ஆதரவைப் பெருக்கிக்கொண்டன. சட்டமன்ற தேர்தலைப் போலவே மக்களவைத் தேர்தலிலும் கட்சிகளைத் தேர்வுசெய்வார்கள் என்று கூற முடியாவிட்டாலும் வங்கம், ஒடிஷா தவிர பிற மாநிலங்களில் பாஜக கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளது என்பதே உண்மை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நிலத்திலும் களத்திலும் அனல்

ஹரியாணா, டெல்லியில் கடுமையான அனல்காற்று வீசுகிறது. ஹரியாணாவை, பாஜகவின் கோட்டை என்று பழைய கண்ணோட்டத்தில் கூறிவிட முடியும். 2019 மக்களவை பொதுத் தேர்தலில் 10 தொகுதிகளையும் வென்ற பாஜக பிறகு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அவற்றில் 8 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆனால், இப்போது களமே பாஜகவுக்கு எதிராகத் திரும்பிவிட்டது. 

விவசாயிகளின் போராட்டம் அதற்கு முக்கியக் காரணம். விவசாயிகள் தங்களுடைய ஆதரவை காங்கிரஸ் பக்கம் திருப்பிவிட்டனர். ஜாட் – ஜாட் அல்லாதவர் பிளவை பாஜக தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியது. இந்த முறை ஜாட் மட்டுமல்ல ஜாட் அல்லாதவர்களும் அதற்கு எதிராகத் திரும்பிவிட்டனர். 

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அக்னிவீர் ராணுவ ஆளெடுப்பு திட்டம் ஆகியவற்றால் ஹரியாணா மக்கள் கொதித்துப்போயிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஜாட் சமூகத்திலிருந்து 2 பேரை மட்டும் களத்தில் இறக்கி, சாதி அடிப்படையில் வாக்காளர்களிடையே பிளவு வராமல் தடுத்திருக்கிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிய பிறகு ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டாரை பாஜக தலைமை மாற்றியதால் ஒரு நன்மையும் இல்லை. மாநில நிர்வாகம் நிலைகுலைந்ததும் மூத்த பாஜகவினர் கட்சியிலிருந்து விலகியதும்தான் நடந்திருக்கிறது. 

காங்கிரஸுக்குச் சாதகமான மற்றொரு திருப்பம், ஜாட் சமூகத்தவருக்கான இந்திய தேசிய லோக தளம் (ஐஎன்எல்டி), ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) இரண்டுமே இப்போது மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டன. காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களை வெல்வது நிச்சயம், 10 இடங்களையும் கைப்பற்றினாலும் வியப்பதற்கு ஏதுமில்லை.

டெல்லியில் வலுவான எதிர்ப்பு

டெல்லி பிரதேசத்தில் காங்கிரஸும் ஆம்ஆத்மி கட்சியும் தங்களுடைய பகைமையை மறந்து 4-3 என்று தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு போட்டியிடுகின்றன. 2019 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக ஏழு இடங்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தாலும் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆஆக அந்த வித்தியாசங்களைக் கணிசமாகக் குறைத்துவிட்டது. 

அத்துடன் பாஜகவே தன்னுடைய எம்.பி.க்களின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து ஏழு பேரில் ஆறு பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரவில்லை. முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைதும் ஸ்வாதி மலிவால் விவகாரமும் ஆஆகவுக்கு அனுதாபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. 

காங்கிரஸ், ஆஆக இடையேயான கூட்டணி இயல்பானது என்று சொல்ல முடியாவிட்டாலும் அவ்விரண்டு கட்சிகளையும் ஆதரிக்கும் உழைக்கும் வர்க்கத்தினர், பட்டியல் இனத்தவர், முஸ்லிம்கள் பொதுவானவர்களாக இருப்பதால் வாக்குகள் சிதறாமல் குவியத்தான் வாய்ப்புகள் அதிகம்.

லேசான அலை மாறுதல்

ஆறாவது கட்டத்தில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு எதிராக அல்லது ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக ஒன்றிரண்டு சதவீத வாக்குகள் மாறினாலும்கூட போதும், பாஜகவுக்கு இழப்புகள் அதிகமாகிவிடும். உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள், அவற்றில் 2 அவத் பிரதேசத்தில் உள்ளன, எஞ்சியவை பூர்வாஞ்சலில் உள்ளவை. 

நாட்டின் கிழக்கு நோக்கி செல்லச் செல்ல பாஜகவுக்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன. 2019 பொதுத் தேர்தலில் 14 தொகுதிகளில் 9இல் வென்றிருந்தாலும் பாஜகவுக்குக் கிடைத்த வாக்குகள் 45.7%தான். ஆனால், மாநில அளவில் வென்ற கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் சராசரி 50.8%. சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் 44.9% வாக்குகளையும் 5 தொகுதிகளையும் பெற்றிருந்தன. 

பகுஜன் சமாஜ் அளவுக்கு சமாஜ்வாதி கட்சியும் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றால் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி அதிகத் தொகுதிகளை நிச்சயம் வெல்லும். 2020 சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. 2019இல் ஆசம்கர் தொகுதியில் சமாஜ்வாதி வென்றது. ஜான்பூர், படோஹி, அம்பேத்கர் நகர், லால்கஞ்ச் தொகுதிகளில் சமாஜ்வாதி – காங்கிரஸ் சேர்ந்து பெற்ற வாக்குகள் அதிகம். 

எனவே, பாஜகவை இவ்விரு கட்சிகளும் இந்தத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெல்ல முடியாமல் அடக்கிவிடும். சுல்தான்பூர், அலாகாபாத், சிராவஸ்தியில் மேலும் ஓரிரு சதவீத வாக்குகள் அதிகரித்தாலும் அவையும் காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணி வசமாகிவிடும்.

பிஹார்

பிஹாரில் வடமேற்குப் பகுதியில் உள்ள 8 தொகுதிகளில் தேர்தல். இவை கிழக்கு உத்தர பிரதேசத்துக்கும் நேபாளத்துக்கும் மிகவும் அண்மையில் உள்ள பிரதேசம். இதை திர்ஹூத் என்றும் அழைப்பார்கள். கடந்த தேர்தலில் எட்டையும் பாஜக வென்றது. வாக்கு வித்தியாசமே 20%-35% ஆக இருந்தன. சைவான் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் 12% வாக்கு வித்தியாசத்தில் வென்றது. 

வால்மீகி நகரில் 2019 தேர்தலில் எளிதாக வென்ற ஐக்கிய ஜனதா தளம், பிறகு 2020இல் நடந்த இடைத் தேர்தலில் 2% வாக்கு வித்தியாசத்தில்தான் வெல்ல முடிந்தது. 2020 பேரவைத் தேர்தலில் விழுந்த வாக்குகளை அடிப்படையாகக் கொண்டால் சைவான் தொகுதியில் மட்டும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திடம் தோற்பது உறுதி. 

ஒரு சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைத்தால் மகராஜ் கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் வென்றுவிடும். முற்பட்ட சாதியினர் அதிகம் வாழும் தொகுதிகள் என்பதால் ‘இந்தியா’ கூட்டணி இங்கே அதிகம் எதிர்பார்க்க முடியாது.

மேற்கு வங்கம் கடும் சவால்

மேற்கு வங்கத்தின் தென் மேற்குப் பகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது. இது ஜார்க்கண்டை ஒட்டிய பிரதேசம், 2019 தேர்தலில் 8 தொகுதிகளில் 5 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜகவுக்கு இப்போது அவற்றைத் தக்கவைப்பது பெரும்பாடு. 

ஜார்கிராம் (பழங்குடி), புரூலியா, மேதினிபூர், பங்குரா என்ற பகுதிகள் இப்பிரதேசத்தில் உள்ளன. இவற்றைப் பொதுவாக ஜங்கிள்மஹால் என்பார்கள். 2018 முதலே இது பாஜக ஆதரவு பகுதியாகிவிட்டது. ஆர்எஸ்எஸ்ஸும் அதன் சங்க அமைப்புகளும் இங்கே தீவிரமாக களப்பணியாற்றுகின்றன. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது ஜார்கிராம், மேதினிபூர், பங்குரா மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளைத் திரிணமூல் கைப்பற்றியது. எனவே, இங்கு போட்டி கடுமையாகவே இருக்கும். 

இப்பகுதி குர்மி இனத்தவர் தங்களைப் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் சுயேச்சைகளாகப் போட்டியிடுவதால் முடிவை ஊகிப்பது கடினம். 

கோன்டாய், தம்லுக், கடால் மக்களவைத் தொகுதிகள் ‘அதிகாரி’ என்ற குடும்பத்தவருக்கு விசுவாசமானவை. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி இப்போது பாஜகவின் முக்கியப் பிரமுகர். எனவே, பாஜக இங்கு வெல்கிறது. 2019 மக்களவை பொதுத் தேர்தலைவிட 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு இங்கு ஆதரவு அதிகரித்தது. 2024 மக்களவை பொதுத் தேர்தல் முடிவைப் பார்க்க வேண்டும்.

ஜார்க்கண்ட்

ராஞ்சி, தன்பாத், கிரீதி, ஜாம்ஷெட்பூர் ஆகிய தொகுதிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கில் உள்ளன. இவை ஓரளவுக்கு நகர்ப்புற அடையாளம் உள்ளவை, எனவே பாஜகவும் அதன் தோழமைக் கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் ஐக்கிய கட்சியும் (கிரீதி) 22% முதல் 39% வரையிலான வாக்கு வித்தியாசத்துடன் இங்கு வென்றன. இந்த முறை ஜாம்ஷெட்பூரை ‘இந்தியா’ கூட்டணி வெல்ல வாய்ப்புகள் அதிகம்.

ஒடிஷா

ஒடிஷாவில் நகர்மயமாகிவிட்ட புவனேசுவரம், கட்டாக் தொகுதிகளிலும் கிராமங்கள் அதிகமுள்ள கியோஞ்சார் (பழங்குடி), சம்பல்பூர், தென்கனால், புரி (ஜகந்நாதபுரி) தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. 2019இல் சம்பல்பூர், புவனேஸ்வரத்தில் மட்டும் பாஜக வென்றது. எஞ்சியவற்றில் பிஜு ஜனதா தளமே வென்றது.

ஒடியா வாக்காளர்களிடையே குறிப்பாக மகளிரிடையே நவீன் பட்நாயக்குக்குத்தான் செல்வாக்கு அதிகம். ஆனால், பாஜக இந்த முறை இந்துத்துவம், ஒடிஷாவின் சுய கௌரவம் ஆகியவற்றை விவாதமாக்கியிருக்கிறது. கடந்த முறை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழந்த 3 மக்களவைத் தொகுதிகளை இந்த முறை வென்றுவிட பாஜக துடிக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நாட்டின் கிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு இழப்பும் புது வெற்றியும் சமமாக இருக்கும் என்றாலும் ஹரியாணா, டெல்லி மாநிலங்களில் ஏற்படவிருக்கும் இழப்புகளால் ஏற்கெனவே வென்ற தொகுதிகளில் மேலும் 10 குறைவது நிச்சயம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள் 

மாநிலக் கட்சிகளின் செல்வாக்குப் பிரதேசங்கள்
பாஜகவுக்கு இப்போதே 272 நிச்சயமில்லை
முதல் கட்டம்: ‘இந்தியா’ அணிக்கே ஆதாயம்
இரண்டாம் கட்டம்: பாஜகவுக்குப் பிரச்சினைகள்
ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு: பாஜகவுக்கு நெருக்கடி

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






பசுங்குடில் வாயுக்கள்கொல்கத்தாதனிச் சட்டம்சாரதா சட்டம்வெள்ளரிரெட்ரோகிரேட் எஜாகுலேஸன்ஜி.குப்புசாமி கட்டுரைபா.சிதம்பரம் கட்டுரைசீனா எப்படிக் கண்காணிப்புக்குப் பழகியிருக்கிறது?உச்ச நீதிமன்ற நீதிபதிதனி வாழ்க்கைமொழிவழித் தேசியம்விவசாயிகளுக்கு சூரிய ஒளி மின்சாரம்குறட்டை விடுவது ஏன்?மாட்டுப் பால்கலைஞர் சண்முகநாதன்தினமணிமக்கள் இயக்க அமைப்புகள்அடிப்படை உரிமைசெய்திநேரு எப்படி மூன்றாவது முறை பிரதமரானார்?பல்லின் நிறம்சமஸ் வடலூர்எத்தியோப்பிய உணவுமாற்று யோசனைஏனைய மொழிகளை விழுங்கும் இந்திகொள்முதல்வி.ரமணி கட்டுரைஇரட்டையாட்சிசுய தம்பட்டப் பொருளாதாரம்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!